நாமச்சுவை - 19
உயிர்கள் அனைத்தும்
ஒவ்வொரு வழியில்
தனக்கெனத் தேடி
தளர்நடை நடக்கும்.
அடிக்கொரு முள்ளாய்
அமைந்திட்ட ஒரு வழி
குழியும் கல்லுமாய்
நிரம்பிய ஒரு வழி
மலர்கட்கு நடுவே
முள் விரித்ததொரு வழி
மலராய் மணந்து சுற்றிவிடுமோர் வழி
பிறவிக் கிணற்றில்
தள்ளும் பொய்வழி
பொல்லா நரகம்
சேர்த்திடும் கொடுவழி
எத்தனை உயிரோ
அத்தனை வழியாம்
அவரவர் தானே
தேடும் வழியாம்
ஆனந்தம் நிறைந்த
அரச வழியுண்டு
அருந்தவ ஞானியர்
சென்ற வழியது
குருவருள் மீதேறிப்
பயணிக்கும் பெருவழி
கண்ணனின் தாளிணை
காட்டும் வழியது
ஆண்டியும் அரசரும்
அனைத்துயிர்களுமாய்
ஆடிப் பாடும் எளிய வழியது
நால்வகைப் பொருளும் கூட்டும் வழியது
நாமம் பாடிப் பரவும்
பொதுவழி
எல்லா வழிகளும்
முடிவது ஓரிடம்
எல்லா உயிர்களும்
வருவது ஓரிடம்
எவ்வழி வரினும்
அடைவது ஓரிடம்
பயணத்தின் இனிமையும்
காலமும் வேறாம்.
Comments
Post a Comment