கைக்கெட்டும் கங்கை எட்டு
கங்கை 1
பரமசிவன் தலைமேலே பக்குவமாய்ப் பரவி
மனம் குளிவித்து மாலையாய்த் திகழ்பவளே! - உன்
அணுத்திவலை நீர் ஒரு கணம் பட்டாலே
பாவமெல்லாம் கழிந்தோடும் புண்ணியம் கோடியாகும்|
உன் பொட்டு நீர் எனைத் தொட்டதும் கலி பயந்தோட
சாமரம் கொண்ட அமரமாதர் அன்பு கொண்டாடுவரே
கங்கை 2
ப்ரம்மாண்டம் பிளந்து உன்னிரண்டு கரைகளாச்சு
கண்ணாமூச்சி ஆட சிவனாரின் ஜடையாச்சு
சொர்கம் முதல் மேரு வரை பாய்ந்து வரும் அழகாச்சி
கடல் முழுக்க நிரப்பியாச்சு எங்க பாவமெல்லாம் கழுவியாச்சு
கங்கை 3
தேனாட்டம் உன் தண்ணீர் தேனீயெல்லாம் குடிக்குது
தேவமாதர் குங்குமம் செந்நீராய் ஓடுது
ஆனையெல்லாம் முழுகி முழுகி தினவு தீர குளிக்குது
அது தும்பிக்கையால் கலக்கி கலக்கி கடலலைபோல் ஆடுறாய்
காலை மாலை தவமுனியோர் முழுகி உன்னை வணங்குறார் - அவர்
பூஜை செய்த பூவெல்லாம் உனக்குப் பூவாடையா மிதக்குது
ஆசையாக வந்து உந்தன் மடியில் முழுகி எழுந்தேனே
அழகம்மா என் துன்பமெல்லாம் கழுவி இப்போ காத்திடு
கங்கை 4
விதித்தாத்தா கமண்டலத்தின் கருவாய் உதித்தவளே!
ஹரி சரணம் தழுவிப் பெருந்தூய்மை பெற்றவளே!
அரன் தலையின் அணிகலனில் அருமணியாய் அமர்ந்தவளே!
தவமுனியின் செவிபாய்ந்து மகளான ஜாஹ்னவியே!
பகீரதன் பின்வந்த பேரழகு நதிப்பெண்ணே!
பாரிலுள்ளோர் குறை போக்கும் பளிங்கு நீர்க் கன்னியே!
பார்த்து மகிழ்ந்திட்டேன் தேவி உன்னை பகவதியே!
கங்கை 5
மலையரசன் மடி பிறந்த மந்தாகினி தேவியே!
சிவத்தருவின் ஜடைக்கிளையில் அசைந்தாடும் எழிற்றளிரே!
ஆதிசேடன் போல் நெளிந்து நளின நடை பாய்பவளே! - உன்
விளையாட்டால் கடலரசன் மேனி சிலிர்த்திடுதே!
முக்தி நகர் காசியின் முக்கியச் செல்வமே!
உன் மடியில் மூழ்குவோரை பவக்கடற்கரை சேர்ப்பவளே!
கங்கை 6
கங்கையம்மா உன்னை ஒருதரம் கண்டால்
நரகத்தின் திசையே காணாமல் போகும்
கங்கையம்மா உன் ஒரு துளி உண்டால்
வைகுண்டத்தில் ஒரு துண்டு போட்டாகிடும்
கங்கையம்மா உன்னில் முழுகி எழுந்தால்
இந்திரன் கூட ஏழையாய்த் தெரிவான்
கங்கையம்மா உன் பெயரைச் சொன்னால்
இருக்குமிடம் தேடி வந்து காப்பாயே!
கங்கை 7
மூவுலகம் கொண்டாடும் முக்கியப் பெண்ணதியே!
பரந்து விரிந்தோடும் பளிங்குநீர் தேவதையே!
ப்ரும்மாவின் குடம் வழிந்த ப்ரும்மஸ்வரூபிணியே!
ஸ்ரீஹரியின் பாததூளி சுமந்து வரும் சுந்தரியே!
ஒரு துளியால் ப்ரும்மஹத்தி நீக்கும் திறலுடையோய்!
நின் புகழ் வெள்ளம் பாடத் தரமோ! - பாகீரதியே!
முப்பாவம் போக்கவல்ல பேரன்புப் பெருந்தேவி!
கைக்குழந்தை போலணைத்துக் கருணையுடன் காத்திடுவாய்!
கங்கை 8
அம்மையே! அரணே! அளகநந்தாவே!
சங்கரனின் அன்புக்கோர் கலமே! ஜானவியே!
ஆயிரம் பயணங்கள் வழிச்சென்ற போதிலும்
அந்திம நேரம் உன் கரையில் அமையட்டும்!
கணந்தோறும் அரிபாதம் எண்ணி எண்ணி இன்புறுவேன்.
சென்னிமேல் கரங்குவித்து சங்கரஹரியைக் கொண்டாடுவேன்.
Comments
Post a Comment