கிரஹணத்தில் உதித்த நிலவு - 4
விஸ்வரூபன் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் வெகு விரைவில் கற்றுத் தேர்ந்தான். அவனது பூரண நல்லறிவின் அழகு முகத்தில் சூரியன்போல ஒளிர்ந்தது.
ஞான மார்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட விஸ்வரூபன் மிகவும் விரக்தனாக இருந்தான். அதைக் கண்ட சசிமாதாவிற்கு அவன் ஸந்நியாசம் வாங்கிக்கொள்வானோ என்ற அச்சம் அவ்வப்போது தோன்றிற்று.
ஒரு நாள் ஜகந்நாத மிஶ்ரருக்கு முன்பு போலவே அத்வைதாசாரியாருடனான சந்திப்பு கங்கைக் கரையில் தற்செயலாகத் தனிமையில் நிகழ்தது.
தன்னை வணங்கிய ஜகந்நாதரைக் கூர்ந்து பார்த்த அத்வைதாசாரியார் சட்டென்று உனக்கொரு அவதாரபுருஷன் மகனாகப் பிறப்பான் என்றருளினார்.
பிள்ளையில்லாத துயர் ஏற்கனவே அவர் செய்த ஆசீர்வாதத்தினால் நீங்கியது. இது பேரருளல்லவா?
பெரியோர் வாக்கு பொய்க்காதே. மிகவும் மகிழ்ந்தார் ஜகந்நாதர்.
சில நாள்களில் சசிமாதா திருவுற்றாள். ஆம். கருவில் திருநிறைச் செல்வனை ஏற்றாள்.
ஸ்ரீமதி ராதாராணிக்கும் கண்ணனுக்கும் ஒரு நாள் ப்ரேம ஸல்லாபம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது ராதாராணி கண்ணனாகவும் கண்ணன் ராதாராணியாகவும் மாறி ஒருவர் ஹ்ருதயத்தை ஒருவர் ஊடுருவ எண்ணினர்.
கண்ணன் மேல் வைக்கும் அன்பின் சுவையை கண்ணன் அறியவும் ராதை மேல் வைக்கும் அன்பின் ரசத்தை ராதை உணரவும் ஆசைப்பட்டனராம்.
கண்ணனாக மாறிய ராதாராணியை எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனால் எவ்வளவு பேர் முயன்றும் கண்ணனால் ராதாராணியின் ப்ரேம ரஹஸ்யத்தையும் கண்ணனுக்காக அவள் அனுபவிக்கும் விரஹத்தையும் முழுமையாக உணர இயலவில்லையாம். கண்ணன் மேல் வைக்கும் அன்பின் சுவையையும் விரஹத்தின் சுகத்தையும் தான் முழுமையாக உணர கண்ணன் ஒரு அவதாரம் எடுக்க சங்கல்பித்தான்.
ராதாராணியின் ஹ்ருதயத்தாலேயே கண்ணனை அறிய இயலும் என்பதால் ராதை கண்ணன் இருவரின் அம்சமாகவும் சேர்ந்து அவதரிக்க எண்ணம் கொண்டான்.
அத்தகைய அவதார புருஷனைக் கருவில் சுமக்கும் பாக்யம் சசிமாதாவிற்குக் கிடைத்தது.
கருவில் இறையம்சத்தை ஏற்றபடியால் சசிமாதா தேவமாதேபோல தன்னொளியுடன் ஒளிர்ந்தாள். தேவர்கள் அனைவரும் அவளை வலம் வந்து வணங்கும் காட்சி அவளுக்கு அவ்வப்போது கிட்டியது. இது தொடர்பாக அவள் ஜகந்நாதரிடம் பேசும்போது அத்வைதாசாரியாரின் அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் அவருக்கு நினைவு வந்தது.
குழந்தை புவியைத் தொடும் நாளை ஆவலுடன் அந்தப் புண்ணியத் தம்பதிகள் எதிர்நோக்கலாயினர்.
நிலவு வரும்..
Comments
Post a Comment