கிரஹணத்தில் உதித்த நிலவு - 2
ஜகந்நாத மிஶ்ரரின் இல்லறம் இனிதே நடந்து கொண்டிருந்தது. துன்பம் என்ற ஒன்று இல்லையெனில் வாழ்வில் இன்பத்திற்கு மதிப்பின்றி போய்விடும் என்பதாலோ என்னவோ இரண்டையும் கலந்தே வாழ்க்கையை அமைக்கிறான் இறைவன்.
சசிமாதாவிற்கு வரிசையாக எட்டு பெண் குழந்தைகள் பிறந்ததோடு மட்டுமின்றி வரிசையாக இறந்தும் போயின. பிள்ளையில்லாதவர் துன்பம் பெரியது. அதனினும் கொடிது பெற்ற குழந்தையைப் பறிகொடுப்பவர் துயரம். ஒன்றல்ல இரண்டல்ல. கண்ணனின் தாய் தேவகி மாதா ஆறு குழந்தைகளைப் பறிகொடுத்தாள். சசிமாதா எட்டு குழந்தைகளை எமனிடம் வாரிக்கொடுத்தாள். மனமெல்லாம் ரணமாகி துன்பக் கடலில் மிதந்தனர் அப்புண்ய தம்பதிகள்.
துன்பக்கடலில் திசை தெரியாமல் தவிப்போர்க்கு ஒரே ஆறுதல் ஸாதுக்களின் சரணமும் அவர்களது வார்த்தைகளும்தானே.
அத்வைதாசாரியார் என்ற மஹாத்மா நவத்வீபத்தில் வாழ்ந்துவந்தார். எல்லா சாஸ்திரங்களிலும் கரை கண்ட மஹா பண்டிதரான அவர் பரம பக்தருமாவார். காலத்தின் கொடுமையால் நசிந்துவரும் தர்மத்தை நிலை நிறுத்த பகவானை அவதாரம் செய்யும்படி தினமும் ரகசியமாகப் ப்ரார்த்தனை செய்துவந்தார்.
ஜகந்நாத மிஶ்ரரை அவர் நன்கறிவார்.
ஒரு நாள் எதேச்சையாக அவரைச் சந்திக்க நேர்ந்தபோது, குழந்தைகள் வரிசையாக இறைவனடி சேர்ந்தது பற்றி வருந்தாதே. உனக்கு மஹாத்மாவான ஒரு குழந்தை பிறப்பான் என்று ஆசீர்வாதம் செய்து அருளினார். கேட்டதுமே மகிழ்ச்சியில் துள்ளினார் ஜகந்நாதர். ஏனெனில் ஸாதுக்களின் வாக்கு பொய்ப்பதில்லையே.
வெகு விரைவில் ரத்தினம் போன்ற ஒரு அழகான ஆண்குழந்தையை ஈன்றெடுத்தாள் சசிமாதா. அவனுக்கு விஸ்வரூபன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அவன் பெயருக்கேற்ப விஸ்வரூபனாகவே விளங்கினான். ஒரு ஞானிக்குரிய அத்தனை ஸாமுத்ரிகா லக்ஷணங்களும் கொண்டு அழகே உருவாக இருந்தான். மிகவும் புத்திக்கூர்மையுடன் விளங்கிய விஶ்வரூபனை அத்வைதாசாரியாரின் பாடசாலையிலேயே சேர்த்தனர்.
நாளுக்கு நாள் விஸ்வரூபனின் ஞானம் விஸ்வரூபம் எடுத்தது.
நிலவு வரும்..
Comments
Post a Comment