மதுரா நாயகா.. (20)

மதுராவிற்குத் திரும்பிய கண்ணனுக்கு ஒரு அருமையான நண்பர் கிடைத்தார். அவர் பெயர் உத்தவர். விருஷ்ணி வம்சத்தவர். மந்திரியாக இருந்தவர்.
கண்ணனைப் பற்றி ஏராளமாகக் கேள்விப்பட்டு அவன் பகவான் என்பதை உணர்ந்திருந்தார். கண்ணனிடம் மிகவும் பயபக்தியுடன் பழகுவார்.

யாராவது மெத்தப் படித்திருந்தால், நீ என்ன பெரிய பிரஹஸ்பதியோ என்று கேட்போமல்லவா? உத்தவர் இங்குள்ள பாடசாலைகளில் மிகவும் உயர்வாகக் கல்வி கற்று, பின்னர் தவம் செய்து குரு பகவானான பிரஹஸ்பதியின் உலகிற்கே சென்று நேரடியாக அவரிடம் கல்வி பயின்றவர். தவ சீலர்.

கண்ணன் அன்பின் அடிமையாவான். அவனுக்கு உத்தவர் அவனிடம் மரியாதையாகப் பழகுவது சிரிப்பை வரவழைத்தது. மேலும் ப்ருந்தாவனத்தில் எப்போதும் ஒரு பெரிய நண்பர்  பட்டாளத்துடன் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு, மதுராவில் பழகுவதற்கு ஏற்றவர் எவருமில்லை. 

சிறந்த பக்தரான உத்தவரைத் தன் அன்பினால் ஆட்கொள்ளத் தீர்மானித்தான் கண்ணன்.

உத்தவரோ, கண்ணன் அழைத்தால் நுனிக்காலால் ஓடோடி வருவதும், வாய் பொத்திக்கொண்டு குனிந்து பேசுவதும், கண்ணனிடம் பேசிவிட்டுச் செல்லும்போது, பின்புறம் காட்டாமல் நடப்பதும், மிக மிக மரியாதையுடன் கண்ணனுக்கு உபசாரங்கள் செய்வதுமாக இருந்தார்.

எப்போதும் கண்ணனுடனேயே இருப்பார். கண்ணன் உண்டு மீதம் வைத்ததையே உண்பார். கண்ணன் உடுத்துக் களைந்த பீதகவாடையையே அணிவார். அவன் கழற்றிய மாலைகளை அணிந்துகொள்வார். கண்ணன் உறங்கும் சமயம், கால் பிடித்து விடுவார். அவன் சொல்வதனைத்தையும் ஆமோதிப்பார்.
பணியாட்களை விலக்கிவிட்டுத் தானே விசிறுவார்.

கண்ணன் உறங்கியதும் அவனது கட்டிலின் கீழேயே படுத்து தானும் உறங்குவார். கண்ணன் விழிக்கும் முன் எழுவார். அவனுக்கு வேண்டியவற்றை சித்தமாக எடுத்து வைப்பார்.
கண்ணன் தன்னோடு உறங்கும்படி எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார். அபசாரம் அபசாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வார். கண்ணனை விட்டு இமைப்பொழுதும் அகலமாட்டார். 

தேவகியும் பல நேரங்களில் கண்ணனைப் பார்க்கச் சென்று உத்தவர் தாய்க்கும்‌ மேலாகச் செய்யும் பணிவிடையைப் பார்த்து மன நிறைவோடு திரும்பிவிடுவாள்.

 உத்தவரின் பள்ளிக்கால நண்பர்களை எப்போதாவது சந்திக்க நேரிட்டால், அவர்கள் அவரை ஏளனம் செய்வர்.

டேய் உத்தவா.. நீ கண்ணன் ஒரு விஷயத்தைப் பண்ணலாமான்னு கேட்டா ஆமா கண்ணா, பேஷா பண்ணலாங்கற. கொஞ்ச நேரம் கழிச்சு, அது சரியில்ல உத்தவா பண்ணவேணாம்னா 
அதுக்கும் ஆமா கண்ணா, அது சரியா வராது. பண்ண வேணாங்கற.
இதை சொல்றதுக்கு உனக்கு ஒரு மந்திரி பதவியா? தண்ட சம்பளம் வாங்கறயா? இதில் பிரஹஸ்பதி சிஷ்யன்னு பெருமை வேற. என்று கேலி பேசுவர்.

உத்தவர் அமைதியாகச் சொல்வார். 

அவர் பகவான். எதை சொல்றாரோ, அதை சாதிக்கற சக்தி அவருக்கு உண்டு. வேணும்னா அமாவாசையை பௌர்ணமியாவும், பௌர்ணமியை அமாவாசையாவும், பகலை இரவாகவும், இரவைப் பகலாகவும் ஆக்கறவர். அப்படி இருக்கும்போது, அவர் சொல்றதை கேள்வி கேக்காம ஆமோதிக்கறதுக்குதான் புத்திசாலித்தனம் வேணும். எதிர்த்துப் பேசறவன்தான் முட்டாள்.

அதுசரிடா. இருந்தாலும் ஆமா ஆமான்னு சொல்ல கண்ணனுக்கு கூடவே ஒரு ஆளாடா?

கண்ணன் பகவான். அவர் கண்கள்ளேர்ந்து ஒரு அருள், ஒரு கருணை  எப்போதும் பொங்கி வழிஞ்சிண்டே இருக்கு. அது அங்க இருக்கற சுவர், நாற்காலி, ஜன்னல் மேல எல்லாம் பட்டு வீணாகறதுக்கு பதிலா, உயிருள்ள ஜடமா நான் அவன் கருணையை வீணாகாம பிடிச்சுக்கறேன். அதுக்காகத்தான் பகவான் கூடவே இருக்கேன். என்பார் உத்தவர்.

அவரிடம் பதில் பேச முடியாமல் அனைவரும்  வாயடைத்துப்போவர்.

உத்தவர் மீது எந்தத் தவறும் இல்லைதான். எனினும் ப்ரேம பக்தி என்பது கண்ணனின் அன்புக் கடலுள் நேரடியாக மூழ்குவது. பக்தி 'பா'வங்களான வாத்சல்யம், ஸக்யம், தாஸ்யம், சாந்தம், மாதுர்யம் ஆகியவை அனைத்துமே ப்ரேம 'பா'வங்கள். இவற்றுள் எது ஒன்று அமைந்தாலும் அது கண்ணனைக் கையில் பிடித்துக் கொடுத்துவிடும்.

தன்னலமற்ற தூய பக்தி உள்ள உத்தவருக்கு ப்ரேம பக்தியின் ருசியைக் காட்டக் கண்ணன் விரும்பினான்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37