மதுரா நாயகா.. (38)
காலயவனன் எரிந்து சாம்பலானதும், குகையின் மற்றொரு மூலையில் ஒளிந்திருந்த கண்ணன் முசுகுந்தரின் எதிரே வந்தான்.
நீருண்ட மேகம் போல், கறுத்த, தளதளவென்ற திருமேனி. மஞ்சள் பட்டாடை, மார்பில் ஸ்ரீ வத்ஸம், கழுத்தில் கௌஸ்துபம், நான்கு திருக்கரங்கள், வைஜயந்தி மாலை, அழகிய திருமுகம், காதுகளில் ஒளிவீடும் மகர குண்டலங்கள், அழகான முறுவல், கருணை பொங்கி வழியும் பார்வை, வாலிப வயது, தன்னொளி திகழும் உருவம்.
இதைக் கண்டு திகைத்துப்போனார் முசுகுந்தர்.
தாங்கள் யார்? பயங்கரமான இந்தக் காட்டுக்குகைக்கு எப்படி வந்தீர்கள்? தாங்கள் சூரியனா? அக்னி தேவனா? சந்திரனா? பரமேஸ்வரனா? திக்பாலர்களில் ஒருவரா? கந்தர்வனா?
தங்களது தன்னொளி திகழும் திருமேனியால் இக்குகையின் இருள் மட்டுமின்றி என் உள்ள இருளும் விலகுகிறதே. தாங்கள் ஸ்ரீ மன் நாராயணனோ?
தங்களுக்கு விருப்பமிருந்தால் தங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.
நான் இக்ஷ்வாகு வம்சத்து அரசன். யுவனாச்வரின் மகனான மாந்தாதாவின் மகன். என் பெயர் முசுகுந்தன். வெகுநாள்களாக விழித்திருந்ததால், மிகவும் களைத்துப்போய், தொந்தரவில்லாத இடமாகத் தேடி இங்கு வந்து உறங்கினேன். இப்போது யாரோ ஒருவன் என்னை எழுப்பினானே. அவன் என் பார்வை பட்டுச் சாம்பலாகிவிட்டான். பின்னர் நீங்கள் என் முன் வந்தீர்கள்.
தங்களது பேரொளியால் என் கண்கள் கூசுகின்றன. தங்களது அழகிய திருமேனியை உற்று நோக்கவும் முடியவில்லை. என்றார் முசுகுந்தர்.
பகவான் சிரித்தான். பின்னர் இடிபோன்ற குரலில் பேசினான்.
குழந்தாய்! என் பிறப்பும், தொழிலும் ஆயிரக்கணக்கானவை. எல்லையற்றிருப்பதால், என்னாலேயே முழுவதும் கூற இயலாது.
முனிவர்களும் என் குணங்களையும் செயல்களையும் சொல்ல இயலாமல் திகைக்கிறார்கள்.
இருந்தாலும் எனது தற்போதைய வடிவம் பற்றிக் கூறுகிறேன்.
முன்பொரு சமயம் ப்ரும்மா பூமிக்கு பாரமாக இருக்கும் அசுரர்களை அழிக்கும்படி என்னை வேண்டினார். எனவே, யது வம்சத்தில் வசுதேவரின் திருமாளிகையில் அவதாரம் செய்தேன். என்னை வாசுதேவன் என்றழைப்பார்கள்.
காலநேமியின் அம்சமான கம்சனை நான் கொன்றேன். இப்போது காலயவனன் உன் பார்வை பட்டுச் சாம்பலானான்.
உனக்கு அருள் செய்யவே இங்கு வந்திருக்கிறேன். நீ பலமுறை என்னை வேண்டிக்கொண்டாய். நீர் விரும்பியவற்றைக் கேள். என்னைச் சரணடைந்தவர் எவரும் 'இது கிடைக்கவில்லையே' என்று வருந்தக்கூடாது. நீ வேண்டுவது அனைத்தையும் தருவேன். என்ன வேண்டும் சொல் என்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment