மதுரா நாயகா..(37)
போர்முனையை நோக்கி வந்து கொண்டிருந்த கண்ணன், காலயவனன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக ஓடினான். காலயவனனும் கண்ணனைப் பிடிக்க எண்ணித் தொடர்ந்து ஓடினான்.
ஒவ்வொரு அடியிலும் காலயவனன் கையில் அகப்படுவது போல் போக்குக் காட்டி காட்டி, அவனை வெகுதொலைவிலிருந்த மலைக்குகைக்கு அழைத்துச் சென்றுவிட்டான் கண்ணன்.
யதுகுலத்தில் பிறந்த நீ புறமுதுகிட்டு ஓடுவது சரியா என்று திட்டிக்கொண்டே தொடர்ந்து ஓடிவந்தான் காலயவனன். எவ்வளவு ஓடியும் அவனால் கண்ணனைப் பிடிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் அகப்படுகிற பொருளா கண்ணன்?
கண்ணன் ஓடிச் சென்று ஒரு மலைக் குகையினுள் நுழைந்தான். தொடர்ந்து ஓடிய காலயவனன் சட்டென்று இருள் சூழ்ந்த குகையில் எதையும் நிதானிக்க இயலவில்லை.
இருளில் கண்கள் பழகியதும், அங்கு ஒருவர் படுத்திருப்பதைக் கண்டான்.
படுத்திருப்பவரைக் கண்ணன் என்று நினைத்த காலயவனன், என்னை அலைக்கழித்துவிட்டு இங்கு வந்து உறங்குவதுபோல் பாசாங்கு செய்கிறாயா என்று கேட்டுவிட்டு, அவரைக் காலால் உதைத்தான்.
உறங்கிக்கொண்டிருந்த அம்மனிதர் கண்களைத் திறந்து காலயவனனைப் பார்த்தார். அவ்வளவுதான்! காலயவனன் ஒரே நொடியில் எரிந்து சாம்பலானான்.
உறங்கிக்கொண்டிருந்தவர் பெயர் முசுகுந்தர். மாபெரும் வீரர். போரில் தோல்வி காணாதவர். ஸத்யசந்தர்.
ஒருசமயம் தேவாசுர யுத்தத்தில் தங்களுக்காகப் போரிட்டு வெற்றி பெற்றுத் தரும்படி தேவேந்திரன் முசுகுந்தரை வேண்டினான்.
அவனது வேண்டுகோளை ஏற்று, அவரும் தேவர்களின் பொருட்டு பலகாலம் போர் செய்து வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்தார்.
அப்ப்போது, தேவர்களின் சேனாதிபாதியாக முருகனைப் பரமேஸ்வரன் நியமித்ததும், தேவேந்திரன் முசுகுந்தருக்கு விடை கொடுத்தான்.
வீரரே! எங்கள் பொருட்டு, நீங்கள் உங்கள் ராஜ்ஜியம், மனை, மக்கள் அனைத்தையும் துறந்து வந்தீர்கள். நீங்கள் பூமியிலிருந்து வந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது உங்கள் சுற்றம் யாரும் பூமியில் இல்லை. பகவான் ஸ்ரீ ஹரி ஒருவரே முக்தியளிக்க வல்லவர். எனவே,
முக்தியைத் தவிர, நீங்கள் எது வேண்டினாலும் என்னால் அளிக்க இயலும். தங்களுக்கு என்ன வேண்டும்? கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றான் இந்திரன்.
முசுகுந்தர் சுற்றமும், மக்களும், நாடும் இல்லாமல் அநாதைபோல் பூமியில் எப்படி வாழ்வது என்று யோசித்தார். பின்னர், எனக்கு அயர்ச்சியாக இருக்கிறது. நான் நன்றாக உறங்க விரும்புகிறேன் என்றார்.
தேவேந்திரன், நீங்கள் விரும்பும் இடத்தில் உறங்குங்கள். உங்களை எழுப்புபவன் எரிந்து சாம்பலாவான். என்று வரமளித்தான். முசுகுந்தர் மலைக்குகையில் வந்து யுகக்கணக்கில் உறங்கிக் கொண்டிருந்தார்.
தேவேந்திரன் அளித்த வரத்தின் பயனால் முசுகுந்தரை எழுப்பிய காலயவனன் எரிந்து சாம்பலானான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment