மதுரா நாயகா.. (36)
ஒரு பக்கம் காலயவனன் மூன்று லக்ஷம் ம்லேச்சர்களுடன் போருக்கு வந்து நிற்க, இன்னொரு பக்கம் பதினெட்டாவது முறையாக ஜராஸந்தன் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையுடன் மதுராவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
ஒவ்வொரு முறையும் கண்ணன் ஜராஸந்தனைத் தோற்கடித்தபோதும், அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்ததால், மதுரா மக்கள் எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருந்தனர்.
ஜராஸந்தன் மதுராவை அடையுமுன் காலயவனனுக்கு முடிவு கட்ட எண்ணினான் கண்ணன். அதற்கு முன்பாக மதுரா மக்களை அப்புறப்படுத்த முடிவு செய்தான்.
மிகவும் ஆலோசித்தபின், த்வஷ்டாவின் மகனான விஸ்வகர்மாவை அழைத்து, கடலின் நடுவே மிகவும் பாதுகாப்பாக ஒரு நகரை உடனே நிர்மாணிக்கும்படி கட்டளையிட்டான்.
பகவானால் கட்டளையிடப்பட்ட விஸ்வகர்மா தன் திறமை முழுவதும் வெளிப்படும்படி வாஸ்து முறைப்படி ஒரு நகரத்தை அமைத்தான்.
தேரோடும் வீதிகள், மற்றும் அகலமான தெருக்கள் கொண்டது அந்நகரம். கற்பக மரங்கள் நிறைந்த தோட்டங்கள், அழகழகான மாளிகைகள், வானளாவும் பொற்சிகரங்கள், வெள்ளியிலும், பித்தளையிலுமான கூடங்கள், ரத்தினங்கள் இழைக்கப்பட்ட தூண்கள், பற்பல தேவாலயங்கள், நகரின் நடுவில் அரசன் உக்ரசேனரின் அரண்மனை, அதைச் சுற்றி நான்கு வர்ணத்தவரின் குடியிருப்புகள். ஆகியவற்றோடு மிக அழகான நகரம் அமைத்தான் விஸ்வகர்மா.
ஸுதர்மா என்ற தேவசபையில் அமர்பவனுக்கு பசி, தாகம், கவலை போன்றவற்றின் பாதிப்பு இடுக்காது. தேவேந்திரன் அந்தச் சபையை கண்ணனுக்காக அனுப்பிவைத்தான்.
வருணன் ஒரு காது மட்டும் கறுத்த பல வெள்ளைக் குதிரைகளை அனுப்பினான். அவை மனோவேகத்தில் செல்லக்கூடியவை.
குபேரன் எட்டு நிதிகளையும் அனுப்பினான். மற்ற லோகபாலர்களும் பகவானுக்காக தங்கள் நிதி முழுவதையும் அனுப்பினர்.
தேவர்கள் தத்தம் சக்திகள் அனைத்தையும் பகவானிடமே கொடுத்தனர்.
நகரம் தயாரானதும்,
பகவான் கண்ணன் அவ்விரவிலேயே மதுராவில் இருந்த அனைவரையும் தன் யோக சக்தியால் கடல் நடுவில் இருந்த அந்நகருக்கு மாற்றிக்கொண்டு சேர்த்தான்.
அவர்கள் அனைவரையும் காக்கும் பொறுப்பை பலராமனிடம் ஒப்படைத்துவிட்டு மதுரா வந்தான்.
பின்னர் தனியொருவனாக ஆயுதம் ஏதுமின்றி கோட்டை வாசல் வழியாக வெளியே வந்தான்.
கிழக்கிலிருந்து வெளிப்படும் நிலவைப்போல் பிரகாசித்துக்கொண்டு வெளிப்படும் கண்ணனைக் காலயவனன் கண்டான்.
மிக அழகான திருமேனி. மஞ்சள் பட்டாடை, கழுத்தில் கௌஸ்துப மணி, மார்பில் ஸ்ரீ வத்ஸம், அழகிய தாமரை முகம், தாமரைக் கண்கள், நீண்ட திருக்கரங்கள், பளபளவென்று திரண்ட கன்னம், ஒளி வீசும் மகர குண்டலங்கள், அழகிய சிரிப்பு.
அழகே உருவாக வரும் பகவானைக் கண்ட காலயவனன், இவன்தான் கண்ணன் என்று முடிவு செய்தான்.
நாரதர் சொன்ன அடையாளங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டான்.
இவன் ஆயுதமில்லாமல் வருவதால், நானும் ஆயிதமின்றியே இவனுடன் போரிட்டு இவனைக் கொல்வேன் என்று முடிவு செய்துகொண்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment