மதுரா நாயகா.. (32)
இனிமையாகப் பேசி உபசரித்தபோதும், திருதராஷ்டிரன் உண்மையில் பாண்டவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்று கண்டறிவதற்காகவே அக்ரூரர் ஹஸ்தினாபுரத்தில் சில மாதங்கள் தங்கினார்.
குந்தியும், விதுரரும், பாண்டவர்களை துரியோதனனும், அவனது சகோதரர்களும், சமயம்கிடைக்கும்போதெல்லாம் சகுனியுடன் சேர்ந்துகொண்டு அவமானப் படுத்துகிறார்கள் என்றும், திருதராஷ்டிரன் அதைக் கண்டும்காணாமல் இருப்பதாகவும் கூறினார்கள். சமீபத்தில் பீமனுக்கு விஷம் வைத்தார்கள் என்பதையும் அவன் நாகர்களின் அருளால் காப்பாற்றப்பட்டான் என்றும் தெரிவித்தார்கள்.
அக்ரூரர் குந்திக்கு சகோதரன் முறை. அவரைப் பார்த்ததும், தன் பிறந்தகத்தை நினைத்துக் கண்ணீர் விட்டாள் குந்தி.
பின்னர்,
அண்ணா! என் பெற்றோரும், சகோதர சகோதரிகளும் என்னை நினைக்கிறார்களா? என் அண்ணன் மகன்களான கண்ணனும் பலராமனும் என்னையும் என் மகன்களையும் விசாரித்தார்களா?
ஓநாய்களுக்கிடையே சிக்கிய பெண்மானைப்போல் பகையாய் நினைக்கும் உறவுகளுக்கிடையே சிக்கித் தவிக்கிறேன். அவ்விருவரும் ஸாக்ஷாத் பகவான் என்று ஸாதுக்கள் சொல்லக்கேட்டேன். உறவுக்காரர்களாகிய அவர்கள் என் மகன்களைப் பற்றி நினைக்கிறார்களா?
கிருஷ்ணா! நீ பெரும் யோகீஸ்வரன். நானும் என் குழந்தைகளும் உன்னையே சரணடைந்தோம். எங்களைக் காத்தருள்வாய்!
உன்னைப் பரம்பொருள் என்றே அறிந்தேன். உனக்கு நமஸ்காரம்!
இச்செய்தியை என் பொருட்டு கண்ணனிடம் தெரிவிப்பீர்களா?
என்று அக்ரூரரிடம் சொன்ன குந்தி வருந்தி அழுதாள்.
அவளிடம் விதுரரும், அக்ரூரரும்
உன் புதல்வர்கள் தர்மராஜன், வாயு, இந்திரன், அஸ்வினி குமாரர்கள் ஆகியோரின் அம்சங்களாய்ப் பிறந்தவர்கள். தாற்காலிகமான இத்துன்பம் கண்டு வருந்தாதே
என்று ஆறுதல் சொன்னார்கள்.
மறுநாள் அனைவரும் நிறைந்த சபையில் அக்ரூரர் திருதராஷ்டிரனிடம்,
புகழ் பெற்ற புரு வம்சத் தோன்றலே! உங்கள் சகோதரர் பாண்டு இறந்த பின் அரியணையில் அமர்ந்துள்ளீர்கள். (இதன் அர்த்தம் இது அவர்களுக்கான அரசுரிமை என்பதாம்). அறவழியில் ஆட்சி நடத்தி உங்களைச் சார்ந்தவர்களிடம்ப்ஏற்றத் தாழ்வின்றி நடந்துகொள்ளுங்கள். அதுவே உமக்கும் உமது வம்சத்திற்கும் நற்கதி பெற்றுத்தரும்.
உண்மையில் பகவான் ஒருவரே இந்த பிரபஞ்சத்தை மாயையால் படைத்து, அழித்துக் காக்கிறார். இவ்வுலகில் பதவி, செல்வம், போகங்கள், அரசு எதுவுமே நிலையில்லை. எல்லா ஜீவன்களின் உள்ளும் ஆத்மாவாக நிறைந்திருப்பவன் இறைவனே.
அழியக்கூடிய விஷயங்களின் மேல் பற்று கொண்டு உயர்வு தாழ்வு கொள்ளுதல், முக்தியைப் பெற்றுத் தராது. என்றார்.
அக்ரூரர் பேசுவதனைத்தும் நன்கு புரிந்தாலும், ஒன்றுமறியாதவன்போல் திருதராஷ்டிரன் மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொன்னான்.
ஸ்ரீ கிருஷ்ணன் பகவான் என்பதை அறிவேன். உண்மையில் அவர் வேற்றுமை பாராதவர். இவ்வுலகில் அனைத்துமே இறைவனின் ஸங்கல்பத்தின்படிதான் நடக்கிறது. நீங்கள் கண்ணனுக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லுங்கள் என்றான்.
பின்னர் அக்ரூரர், விதுரரிடமும், குந்தியிடமும் விடைபெற்றுக்கொண்டு மதுராவுக்குக் கிளம்பினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment