மதுரா நாயகா.. (31)
கண்ணனின் தாமரைப் பாதங்களை மடியில் எடுத்துவைத்துக்கொண்டு அவற்றை வைத்த கண் வாங்காமல் வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தார் அக்ரூரர். பின்னர், அவர்கள் மூவரையும் பார்த்து மெதுவாகப் பேசலானார்
நல்லவேளையா கம்சன் அழிஞ்சுபோனான். எங்க குலத்தையே காப்பாத்திட்டீங்க.
நீங்க ரெண்டுபேரும் ஆதிபுருஷர்கள். மாயையால பல பொருள்களா தெரியறீங்க. பூமியோட பாரத்தைக் குறைக்க வந்திருக்கீங்க. இன்னும் பல கொடியவர்களைக் கூண்டோட அழிக்கப்போறீங்க.
இந்தத் திருவடியைக் கழுவின தீர்த்தத்தைதான் கங்கான்னு எல்லாரும் கொண்டாடறாங்க. அன்பின் அடிமைகள் நீங்க ரெண்டு பேரும்.
வீடு வாசலை விட்டுட்டுப் போன எவ்ளோ ஸாதுக்கள் உங்களால மதுராவுக்கு திரும்பி வந்து நிம்மதியா இருக்காங்க.
உங்க மாயையிலேர்ந்து என்னைக் காப்பத்தவேணும்.
என்றார். கலகலவென்று சிரித்த கண்ணன், அவரை வாஞ்சையுடன் பார்த்தான்.
சித்தப்பா, நீங்க பெரியவர். நாங்க உங்க குழந்தைங்க. நீங்க பெரிய பாக்யசாலி சித்தப்பா. தீர்த்தங்கள்ள போய் ஸ்நானம் பண்ணாலும், தெய்வங்களானாலும் தொடர்ந்து பொறுமையா வழிபடணும். அப்பதான் பலன் தெரியும். ஆனா, உங்களைமாதிரி ஸாதுக்களை ஒருதரம் தர்சனம் பண்ணினாலும் அது மனநிம்மதி தரும் சித்தப்பா.
நீங்க எனக்காக ஒரு உதவி பண்ணணும்.
என்ன கண்ணா.. உதவின்னெல்லாம் சொல்லிண்டு.. என்னவேணும்னு சொல்லு. தலையால செய்து முடிக்கறேன்.
நீங்க ஹஸ்தினாபுரம் போய் பாத்துட்டு வாங்க சித்தப்பா. அங்க திருதராஷ்டிரர், பாண்டுவோட குழந்தைகள்கிட்ட சரியா நடந்துக்கலன்னு கேள்விப்படறேன். அவர் ஏதோ கேக்கக்கூடாதவங்க பேச்சையெல்லாம் கேட்டு தப்பு செய்யறார்.
நீங்க போய் என்ன நடக்கறதுன்னு பாத்துட்டு வாங்க. பாண்டவர்களைக் கொடுமைப் படுத்தறாங்களா? குந்தி அத்தை எப்படி இருக்காங்கன்னு எனக்காக விசாரிச்சுட்டு வர முடியுமா? என்ன நடக்கறதுன்னு தெரிஞ்சா நாம ஏதாவது போய் உதவி செய்யலாம். என்றான்.
அக்ரூரர் நிச்சயம் போய் பாத்துட்டு வந்து சொல்றேன் கண்ணா என்றதும், மெதுவாக கண்ணன் எழுந்தான்.
நீங்க நாளைக்கே புறப்படுங்க சித்தப்பா. பாத்துட்டு வந்து சொல்லுங்க. நான் மறுபடி இன்னொரு நாள் சாவகாசமா வரேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
கண்ணனின் கூடவே வந்த அக்ரூரர் வாசல் வரை வந்ததும், அவரை நிறுத்திவிட்டு,
நீங்க கிளம்பற வேலையைப் பாருங்க சித்தப்பா. நான் வரேன் என்று விடைபெற்றுக்கொண்டு தெருவில் இறங்கினான். பலராமன் முன்னே செல்ல, உத்தவனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் கண்ணனை கண் மறையும் வரை பார்த்துக்கொண்டு வாசலிலேயே சிலையாய் நின்றார் அக்ரூரர்.
மறுநாள் காலை கிளம்பி ஹஸ்தினாபுரம் சென்றார் அக்ரூரர்.
அங்கே திருதராஷ்டிரர், பீஷ்மர், விதுரர், குந்தி ஆகியோரைக் கண்டார். மேலும், பாஹ்லீகன், ஸோமதத்தன், துரோணர், கிருபர், கர்ணன், துரியோதனன், அசுவத்தாமா, பாண்டவர்கள் ஆகிய அனைவரையும் சந்தித்தார்.
எல்லா உறவினர்களையும் முறைப்படி விசாரித்த அக்ரூரர் ஹஸ்தினாபுரத்திலேயே சில மாதங்கள் தங்கினார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment