மதுரா நாயகா.. (30)
மதுரா நாயகா.. (30)
- ஹரிப்ரியா
கண்ணன், பலராமனையும், உத்தவனையும் அழைத்துக்கொண்டு அக்ரூரர் வீட்டுக்குச் சென்றான்.
கண்ணன் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட அக்ரூரர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார்.
என்ன செய்வதென்று புரியாமல், மனைவியின் பெயரைக் கூவிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக ஓடினார்.
அவரது மனைவி பூரணகும்பம் கொண்டு வர, அதை வாங்கிக் கையிலேயே வைத்துக்கொண்டு பிரமை பிடித்தவர்போல் நின்றார். கண்ணன் சிரித்துக்கொண்டே அதைத் தொட்டுவிட்டு அவரைக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துவந்தான்.
கண்ணன் கரம்பட்டதும் பரவசத்தில் மிதந்துகொண்டே அவனுடன் உள்ளே வந்தார் அக்ரூரர். அக்ரூரரின் மனைவி கண்ணனுக்கு பாத பூஜைக்கு எல்லாம் தயாராக வைத்திருந்தாள்.
கண்ணனும் பலராமனும் அங்கு தங்களுக்காகப் போடப்பட்டிருந்த உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தனர்.
பாதபூஜை செய்வதற்காகத் தங்கத் தாம்பாளத்தை எடுத்து வைத்து, அதில் கணணனின் தாமரைப் பாதத்தைப் பூப்போல வைத்தார் அக்ரூரர்.
கண்ணனின் பாதத்தைத் தொட்டதுமே தன்னை மறந்தார். அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் மயங்கினார்.
சிரித்துக்கொண்டே கண்ணன் தன் பாதபூஜைக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று தானே ஒவ்வொன்றாக சொன்னான். அவன் கட்டளைப்படியே ஒவ்வொன்றாக செய்தார்.
நீரை விடுங்க சித்தி..
அக்ரூரரின் மனைவி நீர் வார்க்க, அலம்பிவிடுங்க சித்தப்பா
அக்ரூரர் செய்தார்.
அக்ரூரரின் மனைவி பால் சொம்பை எடுத்துக் கொடுத்தாள்.
பால், தயிரெல்லாம் வேண்டாம். வழுக்கும். தண்ணீர் மட்டும் போதும்.
மேல் வஸ்திரத்தை எடுத்து துவட்டுங்க சித்தப்பா..
ம்ம்.. சரி..
அவசர அவசரமாக இடுப்பிலிருந்த மேல் வஸ்திரத்தை எடுத்து தாமரைப் பாதத்தை ஒற்றியெடுத்தார்.
சந்தனம் இடுங்க..
கஸ்தூரி மணக்க, கமகமவென்று அரைத்த சந்தனத்தை பாதத்தாமரையின் நடுவில் அழகாக வைத்தார்.
அது தாமரையின் நடுவிலுள்ள மகரந்தம் போல் பிரகாசித்தது.
ம்ம்.. அடுத்து குங்குமம்..
ம்ம்.. குங்குமத்தை எடுத்து அழகாகப் பொட்டு வைத்தார்.
அர்ச்சனை.. உத்தவா நீ சொல்லு. அவர் பண்ணட்டும்.
க்ருஷ்ணாய நம:
கமலாநாதாய நம:
உத்தவன் ஸுஸ்வரத்தில் அர்ச்சனையை ராகமாலிகையாகச் சொல்லத் துவங்கினான்.
நறுமணம் கமழும் மலர்களை ஒவ்வொன்றாக எடுத்து, சொல்லப்படும் அர்ச்சனையை உள்வாங்கிக் கண்ணீர் மல்க, தாமரைப் பாதத்தில் சேர்த்தார்.
பாகீரதி தோன்றிய பாதம்..
ப்ரும்மா பூஜித்த பாதம்..
மஹாலக்ஷ்மி பூஜை செய்யும் பாதம்..
சங்கு சக்ர த்வஜ அங்குச ரேகைகள் துலங்கும் பாதம்..
கருடன் தாங்கும் பாதம்..
உலகையளந்த பாதம்..
விண்ணைக் கிழித்த பாதம்..
மஹாபலியின் தலையை அலங்கரித்த பாதம்..
பாரதம் முழுதும் நடந்த பாதம்..
அகலிகையை உய்வித்த பாதம்..
வெண்ணெய்யைத் தேடி வீடு வீடாய் ஏறி இறங்கிய பாதம்..
மாடுகளின் பின்னால் நடந்த பாதம்..
மாற்றி வைத்து ஒய்யாரமாய் நிற்கும் பாதம்..
பள்ளம் தேடி வரும் வெள்ளம் போல்
ஏழையின் வீடுதேடி வரும் பாதம்..
பஞ்சு போல மெத்தென்ற பாதம்..
கோபியர்கள் துரத்த ஓடிய பாதம்..
அவர்கள் வீடுகளிலெல்லாம் வெண்ணெய்க்கோலமிட்ட பாதம்..
யமுனை நீரைக் கலக்கிய பாதம்..
பிருந்தாவனம் முழுதும் தன் அச்சை வைத்த பாதம்..
ஒவ்வொரு பூவாய் எடுத்துப் போடுவதற்குப் பாதத்தைப் பார்க்கும்போதெல்லாம் அனுபவித்தார் அக்ரூரர்..
ம்ம்..ஆகட்டும்ம்..
அர்ச்சனை முடிந்து கண்ணனுக்குப் பழமும், பாலும் கொடுத்தார்.
பின்னர், தினமும் வீட்டில் பூக்கும் மகிழம்பூவை மாலையாகத் தானே கோர்த்து வீட்டிலுள்ள க்ருஷ்ண விக்ரஹத்திற்குச் சாற்றுவார். இன்று நேராகவே கண்ணன் வந்திருந்தும் தயங்கினார்.
பகவான் என்பதால் தயங்குகிறார் என்றுணர்ந்த கண்ணன் அவரது கரத்தைப் பிடித்துத் தானே மாலையைப் போட்டுக்கொண்டான்.
மீண்டும் திருதிருவென்று விழித்த அக்ரூரரைப் பார்த்து
தீபம் என்றான் கண்ணன்.
அக்ரூரர் தீபம் காட்டி ஒருவாறாகப் பாதபூஜையை முடித்தார். கண்ணனின் பாத தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, பருகினார். மனைவிக்கும் தெளித்தார்.
பின்னர் கண்ணனின் அருகிலேயே கீழே அமர்ந்து அவனது தாமரைப் பாதங்களை எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார்.
கண்ணனுக்கு அக்ரூரர் சிற்றப்பா முறை என்றாலும், அவர் கண்ணனைத் தன் மகன் ஸ்தானத்தில் பார்க்கவில்லை. பகவான் என்னும் மனோபாவத்திலேயே பார்த்தார். கண்ணன் யார் தன்னை எப்படி எண்ணுகிறார்களோ, அதே விதமாகவே அருள் செய்பவன். எனவே, அக்ரூரர் பாதபூஜை செய்வதை அனுமதித்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment