மதுரா நாயகா.. (28)

இடைச்சேரியில் சிலகாலம் தங்கிய உத்தவன், ஒருநாள் கிளம்ப யத்தனித்தான்.

நந்தகோபனும், யசோதையும் அவனைக் கட்டி உச்சிமோந்தனர். பின்னர் கண்ணனுக்காகவும், பலராமனுக்காகவும், நிறைய பக்ஷணங்களையும், வசுதேவருக்காகவும் நிறைய காணிக்கைகளையும் உத்தவனிடம் கொடுத்தனர்.
கிளம்பும் சமயம், எல்லா கோபிகளும் உத்தவனைக் காண வந்தனர்.
அவர்களை நேராகப் பார்க்கவும் கூசினான் உத்தவன்.
ஒவ்வொருவரும் வெண்ணெய், முறுக்கு, மயில்பீலி, பூ வேலைப்படு செய்த உத்தரீயம் போன்றவற்றை கண்ணனுக்காகக் கொடுத்தனர்.
எனக்கு லலிதான்னு பேரு. இந்த லட்டை கண்ணன் கிட்ட கொடுத்துடுங்க.
என் பேர் சந்திரிகா. நான் தினமும் கண்ணனுக்கு முறுக்கு பண்ணித்தருவேன். என்னை நியாபகம் வேசுண்டிருக்கானான்னு கேளுங்க.
என் பேர் விஜயா. தினம் எங்க வீட்டில் வந்து என் கையால ஒரு உருண்டை வெண்ணெய் வாங்கி சாப்பிட்டுத்தான் மாடு மேய்க்கப்‌போவான். நான் அவனைக் கேட்டேன்னு சொல்லுங்க.
எனக்காக காட்டிலேர்ந்து என் மனசில் என்ன பழம் நினைக்கறேனோஅதைக் கொண்டுவருவான். இப்பல்லாம் என்னை நினைக்கறானோ என்னவோ.
ஒவ்வொருத்தியாகப் பேசிக்கொண்டுபோக, உத்தவனின் உள்ளம் உருகிற்று. அவர்கள் கொடுத்ததனைத்தையும் வாங்கி ஜாக்கிரதையாக பத்திரப்படுத்திக் கொண்டான். உத்தவனின் ரதம் நிரம்பி வழிந்தது.
அவர்களின் பாதம் பட்ட மண்ணை எடுத்துத் தலையில் போட்டுக்கொண்டு, அவர்கள் அனைவரையும் விழுந்து வணங்கினான்.
வ்ரஜபூமியில் படுத்து கடகடவென்று உருண்டான். பின்னர் அழுதுகொண்டே ரதத்தில் ஏறி மதுராவை நோக்கிக் கிளம்பினான் உத்தவன்.
தேரை எவ்வளவு மெதுவாகச் செலுத்தியும், வெகு நீக்கிரம் மதுரா வந்துவிட்டது.
நேராக வசுதேவரைச் சந்தித்து வணங்கி, நந்தன் கொடுத்தனுப்பிய காணிக்கைகளைச் சேர்த்தான். பின்னர் பலராமனிடம் சென்று நந்தனும், கோபிகளும் பலராமனுக்காகக் கொடுத்தனுப்பியவற்றைக் கொடுத்தான்.
கண்ணனின் அறைக்கு வந்தான்.
உப்பரிகையில் நின்று யமுனையைப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணனின் பின்னால் போய், சத்தமின்றி நின்றான்.
என்ன உத்தவா! கோகுலம் போய்ட்டு வந்தியா? அங்க எல்லாரும் நல்லாருக்காங்களா?
திரும்பாமலே கேட்டான் கண்ணன். உத்தவனிடமிருந்து பதிலே இல்லை.
வழக்கமாகக் கேட்கும் முன்னரே, கைகட்டி வாய்பொத்தி, விவரங்களை ஒப்பிக்கும் உத்தவனிடமிருந்து பதில் வராததைக் கண்டு, திரும்பினான் கண்ணன்.
அங்கே, கண்களில் கண்ணீர் மல்க, சிறு குழந்தைபோல் உதடுகள் துடிக்க நின்றுகொண்டிருந்தான் உத்தவன்.
கண்ணனைக் கண்டதும் தேம்ப ஆரம்பித்தான்.
ஓடிவந்து கண்ணனின் சரணங்களில் விழுந்தான்.
அவனை அனுப்பிய காரியம் நடந்துவிட்டதென்று புரிந்துகொண்ட கண்ணன், ப்ரேமபக்தியின் ருசியைப் பருகி வந்திருக்கும் உத்தவனை கோபிகளின் மொத்த உருவமாகவே கண்டான்.
சரணத்தில் விழுந்த உத்தவனை வாரியெடுத்துக் கட்டிக்கொண்டான்.
அவங்களோட பக்தி ரொம்ப உசந்தது கண்ணா.. நீ ஒரு முறையாவது ப்ருந்தாவனம் போய்ட்டு வரக்கூடாதா..
போகலாம்தான். ஆனா, போனா திரும்பி வர முடியாது. இங்க நிறைய வேலை இருக்கு. ஒரு முறை பிரிஞ்சப்பவே அவங்க உசிரெல்லாம் போயாச்சு. நான் எனக்காக பிடிச்சு நிறுத்தி வெச்சிருக்கேன். அடிக்கடி போய் பிரிஞ்சு வந்தா அவங்களால்‌ தாங்க முடியாது. அதை என்னாலயும் தாங்கமுடியாது. தன்னலமில்லாத
ப்ரேமையின் சக்தி என்னைக் கட்டிப்போடக்கூடியது உத்தவா.
உத்தவனுக்கு ஒருவாறு கண்ணனின் மனநிலை புரிந்தது.
கோபிகள் கொடுத்த ஒவ்வொரு பொருளையும் உத்தவன் கண்ணனிடம் ‌கொடுக்க கொடுக்க, அவற்றைக் கையில் வாங்கும்போதே அதைக் கொடுத்தனுப்பிய கோபியின் பெயரைக் கண்ணன் சொன்னான். அவற்றை ஆசையுடன் வாங்கி தலையிலும் நெஞ்சிலும் வைத்துக் கொண்டான்.
பக்ஷணங்களையும் வெண்ணெய்யையும் உத்தவனுக்கு ஊட்டிவிட்டுத் தானும் சாப்பிட்டான்.
அவை எல்லாவற்றையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு அன்றிரவு உறங்கினான் கண்ணன்.
கோபிகளின்பால் கண்ணன் கொண்ட அன்பை நேரில் பார்த்த உத்தவன் தானும் அவர்களைப்போல் பக்தி செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். விடிய விடிய கண்ணனின் அருகிலேயே அமர்ந்து உறங்கும் கண்ணனின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.
பெண்ணாய்ப்‌ பிறக்காமல் போனோமே என்றும் முதன் முதலாய் ஏங்கினான்.
வெகுநாள்கள் கழித்து கண்ணன் மிக நிம்மதியாக உறங்குவதாக உத்தவனுக்குத் தோன்றியது.
#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37