மதுரா நாயகா.. (27)

உத்தவன் மாய்ந்து மாய்ந்து பரமாத்ம தத்துவத்தை விளக்கி, தியானம் செய்யும் முறையை விளக்கிக்கொண்டிருக்க, கோபிகள் சிரித்துவிட்டார்கள்.

துணுக்கென்றது உத்தவனுக்கு. படிப்பறிவில்லாத கிராமத்து இடைப் பெண்களுக்கு, உயர்ந்த விஷயங்களை போதித்தால் இப்படித்தான். மரியாதையில்லாமல் சிரிக்கிறார்களே.
கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான்.
ஏன் சிரிக்கிறீங்க?
கண்ணனை எப்போதாவது நாங்க மறந்தாதானே தனியா மனம் ஒருமுகப்படுத்தி தியானம் செய்யணும்? கேளுங்க.
நான் காலைல தயிர் கடைஞ்சிண்டிருப்பேன். நான் பாட்டுக்கு கண்ணன் பேரைப் பாடிண்டு வேலையைப் பார்ப்பேன். முன்னல்லாம் நேர்ல வந்து வம்பிழுத்து வேலையைக் கெடுப்பான். இப்ப என்னாறது தெரியுமா?
என்னாறது?
உள்ளுக்குள்ள உக்காந்துண்டு களுக்னு சிரிப்பான். போச்சு. தூக்கிவாரிப்போட்டு மத்தைப் பானைல இடிச்சுடுவேன். பானை உடைஞ்சுடும்.
நான் யமுனைல தண்ணி எடுக்கப்போனா, தண்ணிக்குள்ளேர்ந்து அவன் முகம் தெரியும். அவன் அழகு முகத்தைப் பாத்துண்டே உக்காந்திருந்தா பொழுது போயிடும். வீட்டிலேர்ந்து ஆள் தேடிண்டு வந்து, பயங்கரமா திட்டு விழும்.
நான் ஒருநாள் என் மாமியாருக்கு சாதம் போட்டுண்டிருந்தேன். உள்ள இருக்கற கண்ணன் சும்மா இருக்கானா? மெதுவா சுரண்டினான். அவ்ளோதான் சாம்பாரை எடுத்த கரண்டியை அப்படியே மாமியார் இலைல போட்டுட்டேன். அன்னிக்கு வாங்கிருக்கேன் பாரு ஒரு திட்டு.
நேத்திக்கு தயிர் விக்கப்போனேன். வழக்கம்போல கேசவா, மாதவா ன்னு வித்துண்டுபோனா, இவன் சும்மா இருந்தானா, உள்ளேர்ந்து சிரிச்சிண்டே ஒரு குதி குதிச்சான் பாருங்க. தலைமேல தயிர்ப் பானையை வெச்சுண்டு நானும் குதிச்சா பானை என்னத்துக்காறது? அப்படியே என்மேல அபிஷேகம். தெருவில் போறவங்கல்லாம் சிரிக்கறாங்க பைத்தியம்னுட்டு. தயிரை விக்காம வீணடிச்சேன்னு வீட்டிலயும் திட்டு.
கண்ணன் எங்க ஹ்ருதயத்தில் எப்போதும் தெரியறான். உங்களால் முடிஞ்சா அவனை மறக்கறதுக்கு ஏதாவது வழி சொல்லிட்டுப் போங்க. நினைக்கத் தெரிஞ்ச எங்களுக்கு மறக்கத் தெரியல.
கேட்க கேட்க உத்தவனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இவர் பாவம்டீ..
சரி, நீங்க சொல்லுங்க. கண்ணனைப் பத்தி நீங்க சொல்ற கதைகள்தான் எங்க துக்கத்துக்கு ஆறுதல். அவன் நகரத்துப் பெண்களை மகிழ்விக்கறானா. தினமும் ஒரு தரம் பார்த்தாலே போதுமே. அவன் குரலும், குழலிசையும் கேக்கறதுக்கு மதுரா நகரவாசிகள் கொடுத்து வெச்சிருக்காங்க.
என்னதான் கண்ணன் பரமாத்மா, பகவான், எல்லா‌ இடத்திலயும் நிறைஞ்சிருக்கற வஸ்துன்னு எங்களுக்கு நல்லா தெரிஞ்சிருந்த போதும், கண்ணனை விட்டுப் பிரிந்த துக்கம் தாங்கமுடியல.
இந்தக் காடு, மலை, புல், யமுனா நதி, இதெல்லாம் கண்ணனை நினைவு படுத்திண்டே இருக்கு.
இந்த மலையைப் பாருங்க. இதைத்தான் ஏழுநாள் எங்களுக்காக சுண்டு விரல்ல தாங்கினான்.
இந்த மணல்திட்டு இருக்கே. இந்த மண்.. இந்த மண்.. இதில் தான் எங்களோட ராஸம் ஆடினான்.
இந்தப் பாறையை பாத்தீங்களா? இதில் எப்போதும் ஒரு காலை மடிச்சு ஒரு காலை தொங்கப்போட்டுண்டு உக்காந்து குழலூதுவான்.
இந்த மரத்தைப் பாருங்க. இதன் கிளையைப் பாத்துக்கோங்க. இப்படி வளைஞ்சிருக்கில்ல. இதில் உட்கார்ந்தான்னா, கால் யமுனைல இடிக்கும். யமுனை எங்கெங்கேர்ந்தோ தாமரைப்பூவா கொண்டுவந்து கண்ணன் கால்ல சேர்ப்பா. பாக்க பாத பூஜை பண்றா மாதிரி இருக்கும்.
உத்தவன் அந்த மரக்கிளையைத் தடவிப் பார்த்துக் கொண்டான். யமுனையின் மணலை வாரி வாரி தலையில் போட்டுக்கொண்டு உருண்டான்.
இந்த எலும்புக்கூடு பாத்தீங்களா? இது அகாசுரனோட எலும்புக்கூடு. பசங்கள்ளாம் குகைன்னு நினைச்சுண்டு உள்ள போயிடுத்து. கண்ணன்தான் மலைப்பாம்பைக் கொன்னு குழந்தைகளைக் காப்பத்தினான்.
இந்த மடுவைப் பாருங்க. அங்க நடுல கொஞ்சம் சுழிஞ்சு ஓடறதா? அங்க அடில போனா, ரொம்ப ஆழம். அதுக்கடில காளியன்னு ஒரு பாம்பு. அதோட விஷத்தால யமுனை முழுக்க விஷமாயிடுத்து. மாடெல்லாம் செத்துப்போச்சு. கண்ணன் தண்ணிக்குள்ள பாய்ஞ்சு அந்தப் பாம்பை அடக்கி, அதுமேல ஒரு நாட்டியமாடினான் பாருங்க. இரண்டு கோபியர் அபிநயம் பிடித்துக் காட்டினர்.
அப்றம் செத்துப்போன மாட்டையெல்லாம் ஒரே பார்வைல எழுப்பிவிட்டான்.
உத்தவனின் நிலையைச் சொல்லவே முடியவில்லை.
பிறகு கோபிகளே தங்களைத் தேற்றிக்கொண்டு, இப்படியெல்லாம் புலம்பிண்டே இருந்தா அமைதியே இருக்காது.
கண்ணன் தான் ஆத்மா, அவனைப் பிரியவே முடியாதுன்னு திரும்ப திரும்ப சொல்லிண்டு எங்க துக்கத்தைக்‌ குறைச்சுக்கறோம்.
என்றனர்.
உத்தவன் சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து கோபிகளுடன் ஸத்சங்கம்‌செய்து, கண்ணனின் லீலைகளைப் பாடி அவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்தான்.
அவ்வளவு ஆற்றாமையிலும் கோபிகளின் மன முதிர்ச்சி கண்டு வியந்து போற்றினான்.
துளியும் ஆசாரமோ, கல்வியோ இல்லாத இந்த இடைப்பெண்களின் பக்தி விண்ணை முட்டுகிறதே. அசைவற்ற அன்பும் காதலும் கொண்டிருக்கிறார்களே.
அமுதென்று அறியாமல் அருந்தினாலும் அது நன்மையே அளிப்பதுபோல், கண்ணனின் கதையமுதத்தை கணநேரம்கூட விடாமல் அனுபவிக்கிறார்களே.
இவர்கள் பெற்ற பாக்யம் தேவமாதர்க்கும்‌ இல்லை. இப்படிப்பட்ட கோபியர்கள் வாழும் ப்ருந்தாவனத்தில் நான் ஒரு புல்லாகவேனும் வசிக்கமாட்டேனா?
இவர்களது திருவடி தூளியை என் சிரசில் எப்போதும் தரிப்பேன்.
எப்போதும் தன்னை பிருஹஸ்பதியின் சீடன் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்த உத்தவன், கண்ணனிடம் சேர்ந்ததிலிருந்து தான்‌ கண்ணனின் சீடன், பணியாளன் என்று பெருமை பேசிக்கொண்டிருப்பான்.
இப்போதிலிருந்து உத்தவன் ப்ருஹஸ்பதியையும் விட்டான். கண்ணனையும் விட்டான். ஏதுமறியாத ஆய்க்குலப்பெண்களின் சீடன் இந்த உத்தவன் என்று பெருமை கொண்டான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37