மதுரா நாயகா..(26)

கண்ணன் தன் கமலக்கரத்தை எங்கள் தலைமீது வைக்கும் காலம் வருமா? என்று கேட்டாள் ஒரு கோபி.

கோபிகள் மாற்றி மாற்றிப் பேசுவதைக் கேட்ட உத்தவன் மிகவும் மகிழ்ந்தான்.

ஆஹா! உங்க மனம் முழுதும் கண்ணனைத் தவிர வேறெதுவுமே இல்ல.

தானம், தவம், ஹோமம், ஜபம் புலனடக்கம், நியமங்கள் இதனாலல்லாம் கிடைக்கற  க்ருஷ்ண பக்தியை நீங்க சுலபமா வந்திருக்கு.

உங்களைப் பார்த்தது நான் செய்த பேறு. நான் கண்ணனின் அந்தரங்கப் பணியாளன். அவர் உங்களுக்காக செய்தி அனுப்பிருக்கார். அதைக் கேளுங்கள்.

என்ன சொன்னான் கண்ணன்? சீக்கிரம் சொல்லுங்க.

அது சுத்தமா இருந்து பயிலவேண்டிய யோகம். நீங்க எல்லாரும் நாளை விடிகாலை யமுனையின் மணல் திட்டுக்கு வாங்க. அங்கு சொல்றேன். 

என்னன்னுதான் சொல்லுங்களேன்.

நீங்க நாளைக்கு பொழுது விடியும் முன்ன  வாங்க.
வரும்போது எல்லாரும் குளிச்சிட்டு சுத்தமா வரணும். 

அதுசரி. நாங்க தீவிலிக்கு தீவிலிதான் குளிப்போம். அதுலயும் ஒரு தீவிலிக்கு தலைமட்டும், அடுத்த தீவிலிக்கு உடம்பு மட்டும்னு குளிப்போம்.

ஒரே அநாசாரமா இருக்கும் போலர்க்கே என்று நினைத்த உத்தவன். நாளைக்கு குளிச்சிட்டு மடியா வரணும்.

மடின்னா?

துவைச்ச துணியை எது மேலயும் படாம உலர்த்திட்டு, குளிச்சிட்டு அதை எடுத்துக் கட்டிக்கணும்.

அப்றம்? இன்னும் என்னென்னலாம்‌ பண்ணணும்?

கீழ விரிக்கறதுக்கு ஒரு துண்டு கொண்டு வரணும். அவ்ளோதான். நாளைக்கு பாக்கலாம்.

கோபிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு கலைந்தனர்.

மறுநாள் அதிகாலை யமுனையின் மணல்திட்டுக்கு அனைவரும் உத்தவன் சொன்னபடி‌குளித்துவிட்டு மடியாக வந்தனர்.

ஒருத்தர் மேல ஒருத்தர் படக்கூடாது. ஒவ்வொரு அடி விட்டு உங்க கைல இருக்கற துண்டை விரிச்சிண்டு அதில் உக்காரணும். 
எல்லாரும் சொன்னபடி செய்தனர்.

எல்லாரும் கண்ணை மூடிக்கோங்க. பிராணாயாமம் பண்ணணும். பிராணாயாமம் எப்படிச் செய்வதென்று சொல்லிக்கொடுத்தான் உத்தவன். அனைவரும் செய்தனர். 

பின்னர் உங்க மனத்தை ஒருமுகப்படுத்தி மூக்கு நுனியைப் பாருங்க. நெற்றிப்பொட்டில் குவியணும்.

எல்லாரும் உத்தவன் சொன்னபடி செய்துகொண்டிருக்க,
உத்தவன் தொடர்ந்தான்.

கண்ணன் சொன்ன செய்தி இதான். 

பகவான் தான் எல்லாப் பொருள்கள்ளயும் நிறைஞ்சிருக்கார். அவர்தான் எல்லாத்துக்கும் ‌மூலமும் உபாதான காரணமும்.
ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி, மனம், பிராணன், பஞ்ச பூதம், இந்திரியங்கள், சப்தம், ஸ்பரிசம் மாதிரி உணர்வுகள்ள‌ பரவியிருக்கறதும் பகவான் கண்ணனே.

மாயையினால் எல்லாத்தையும் படைச்சு, அப்றம் தனக்குள்ளயே ஒடுக்கிக்கறார்.

இவ்வளவு நாள் வெளிபுலன்களால பார்த்த கண்ணனை இனி உள்முகமா பார்க்கணும்.

தூரத்தில்‌ இருக்கும்போது பகவானையே நினைக்கற மனம் பக்கத்தில் இருக்கும்போது அப்படி நினைக்காது. அதனால்தான் அவர் உங்களை விட்டுத் தள்ளி இருக்கார்.

இதையெல்லாம் கண்ணன் உங்க கிட்ட சொல்லசொன்னார்.

 நீங்க அவரை உள்முகமா தியானம் செய்யத் துவங்கலாம்.

உங்க இதயத்தில் ஒரு தாமரை மொட்டு கவிழ்ந்திருக்கும். அதை மெல்ல நிமிர்த்தி, அதில் கண்ணன் நிக்கறதா நினைச்சுக்கலாம். 

முதல்ல அவனோட தாமரைப்‌பாதம், அதில் நூபுரம், வரிவரியா அசையற மஞ்சள் பீதாம்பரம், அழகான வயிறு‌, அரையில் ஒட்டியாணம், மஹாலக்ஷ்மி வசிக்கற  மார்பில் தவழும் வனமாலை, முத்து மாலைகள், அழகான உருண்ட கழுத்து, திண்ணமான தோள்கள், தும்பிக்கை மாதிரி நீண்ட கைகள், அதில் கைவளைகள், தாமரை மாதிரி முகம், அழகான கோவைப்‌பழம்‌மாதிரி சிவந்த வாய், எள்ளுப்பூ மாதிரி மேல் நோக்கிய நாசி, அழகான நெற்றி, அதில் கஸ்தூரி திலகம், அழகான காதுகள்ள, மகர குண்டலம், சுருள் சுருளா அலை பாயற கேசம். அதில் ரத்தினங்கள்‌பதிச்ச கிரீடம், மயில்பீலி.

இப்படியா கண்ணனை இதயத்தில் வெச்சு பகவானா தியானம் பண்ணணும். 

என்று உத்தவன் சொன்னதும், அவ்வளவு நேரம்‌ பொறுமையாக அவன் சொன்னதையெல்லாம்‌ கேட்டுக்கொண்டிருந்த கோபிகள்
களுக்கென்று சிரித்துக்கொண்டு  எழுந்துவிட்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37