மதுரா நாயகா.. (24)

தீயவைகள் அனைத்தையும் விலக்கும் ஒலி அதிகாலையில் தயிர் கடையும் ஒலி. கோகுலத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் அவ்வொலி எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தயிர் கடைந்து முடித்ததும் வாசலில் வந்த ஒரு கோபி வழக்கம்போல் நந்தபவனத்தைப் பார்த்தாள். கண்ணன் தரிசனம் கிடைக்குமா என்று தினமும் சற்றைக்கொருதரம் நந்தபவனத்தின் வாயிலைப் பார்ப்பது கோபியரின் வழக்கமாயிருந்தது.
சில நாள்களாக வெறிச்சோடியிருந்த நந்தபவனத்தில் இன்று ஒரு அழகான தங்கரதம் நின்றுகொண்டிருந்தது. அதன் குதிரைகள் அருகில் கட்டப்பட்டிருந்தன.
பிரமையா? கண்ணைத் தேய்த்துக்கொண்டு உற்றுப் பார்த்தாள். ரதம் தெரிந்தது.
கனவாக இருக்குமோ? கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்.
ஆ.. வலித்தது.
நிஜமாகவே நந்தபவனத்தின் வாசலில் அரசர்கள் பயன்படுத்தும் தங்கரதம்.
அன்றைக்கு கண்ணன் கிளம்பிப்போனானே.. அதே ரதமா? சிறிது அருகில் வந்து பார்த்தாள். ஆம். அதே ரதம்தான்.
கண்ணன் வந்திருக்கிறானோ?
இந்த எண்ணம் வந்ததுதான் தாமதம் மற்ற கோபிகளுக்கும் குரல் கொடுத்தாள்.
அவர்களுக்கு எப்போதும் தான் மட்டும் கண்ணனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கூடியிருந்து குளிர்வதைத்தான் கோபிகள் விரும்புவர். கண்ணனும் அப்படியே. விளையாட்டுக்காக பிரணய கலஹம் செய்தாலும் அவர்களுக்குள் அசூயை என்பது அறவே இல்லை.
எல்லா கோபிகளும் வந்துவிட்டார்கள்.
இத்தனை நாள் வராம தவிக்கவிட்டானே.
நேத்து சாயங்காலம்கூட இந்த ரதத்தைப் பார்க்கலியே.
இவ்ளோ காலைல பொழுது விடியறதுக்கு முன்ன எப்படி வந்தான்?
ராத்திரியே வந்திருப்பானோ..
நம்மளைப் பாக்கவேல்ல பாத்தியா
ஏய்.. யசோதாம்மாகூட பேசிண்டிருந்திருப்பான். அவங்க பாவம்ல?
உள்ள போவோமா?
வேணாம்.. அம்மா அப்பாவோட கொஞ்சிட்டு வரட்டும். தொந்தரவு பண்ண வேணாம். அவங்க பாவம்.
எப்படியும் வெளில வந்துதானே ஆகணும்.
நம்மளைப் பாக்காம அவனாலயும் இருக்கமுடியாது. தானே வருவான்.
அவனே வெளில வரும்போது பாக்கலாம்.
அதுவரைக்கும் இங்கயே நிப்போம்.
மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டு நந்தபவனத்தின் வாசலிலேயே நின்றனர் கோபிகள்.
சிறிது நேரம் கழித்து, பொழுது புலர்ந்ததும் தம் காலை அனுஷ்டாங்களை முடித்துக்கொண்டு நந்தபவனத்தின் வெளியே வந்தான் உத்தவன்.
முழங்கால் வரை நீண்டிருக்கும்‌ கைகள், தாமரைக்கண்கள், மஞ்சள் பட்டாடை, கழுத்தில் தாமரை மாலை, இரத்தினங்கள்‌ மின்னும் குண்டலங்கள், கண்ணனை ஒத்த திருவடிவம்..
இப்படியாக உத்தவனைக் கண்ட கோபிகள் குழம்பினர்.
இவர் யாரு?
கண்ணனைப்போலவே இருக்காரே. என்றதும் ஒருத்தி அவள் கன்னத்தில் அறைந்தாள்.
ஆ.. ஏன் அடிக்கற? கன்னத்தைப் பிடித்துக்கொண்டாள்.
கண்ணனைப்போலன்னு ஒருத்தரை சொல்லுவியா? கண்ணனைப்போல யாரும்‌ கிடையாது. கண்ணனைப்போல கண்ணன் மட்டும்தான்.
அது எனக்கும் தெரியும். ஆனா, அவரை நல்லா பாரு.
அவர் கட்டிண்டிருக்கறது கண்ணனுடைய வேஷ்டி, போட்டுண்டிருக்கறது கண்ணனோட குண்டலம். அவன் அக்ரூரரோட போகும்போது இதே வேஷ்டி, போன வருஷம் ஹோலி விளையாடினப்ப, குங்குமத்தண்ணில எண்ணெய்யைக் கலந்து கண்ணன்மேல அடிச்சோம்ல. அந்தக் கறை இருக்கு பாரு.
காதில் இதே சிவப்பு ரத்தினம் வெச்ச குண்டலம்தான் போட்டுண்டிருந்தான். உத்தரீயம் பாரு.
அன்னிக்கு கண்ணன் போட்டுண்டிருந்த அதே சிவப்பு உத்தரீயம். அது நுனில சின்னதா தாமரைப்பூ வேலைப்பாடு இருக்கு பார். அதை சந்திராதானே ஒருநாள் போட்டுக்கொடுத்தா . மறந்துட்டியா..
முத்துமாலையைப் பாத்தியா? கண்ணனோடது இல்லாம அது யாரோடதாம்?
பச்சைக் கல் வெச்ச புலிநகச் சங்கிலி பாரு. அது குத்தி ஒரு நாள் உன் கழுத்தில்..
போதும்டீ.. மானத்தை வாங்காத.. முகம் சிவந்தாள் அவள்.
ம்ம்க்கும்..
கண்ணனின் துணிமணி, நகையெல்லாம் போட்டுண்டிருக்கறதால் இவர் அசப்பில் கண்ணன் மாதிரி இருக்கார்.
நாமளே பேசிண்டிருக்காம கிட்ட போய் யார்னு கேப்போமா? ஒருவேளை கண்ணன் இவரை அனுப்பிருக்கலாம்.
சரி. அப்படியே செய்வோம்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37