மதுரா நாயகா..(23)
கண்ணனின் நினைவுகளை நந்தன் சொல்ல சொல்ல, உத்தவர் பெரிதும் மகிழ்ந்தார். சாதாரண மகவைப் பிரிவதென்றாலே கஷ்டம். இறைவனே மகவாய் வந்து பிரிந்தால்?
உத்தவர் பேசலானார்.
உங்க ரெண்டுபேரையும் பூஜை பண்ணினாலும் தகும். எல்லாரும் பகாவான்னு சொல்ற நாராயணனை நீங்க மகன்னு பாக்கறீங்க.
பலராமனும், கிருஷ்ணனும் இந்த பிரபஞ்சத்தோட காரணபூதம். இயற்கையே இவங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கு.
ஒரு கணத்துக்கு நீங்க பாசத்தை விட்டு, மனசு சுத்தமா கண்ணன் பகவான், ஸர்வவியாபிங்கறதை உணர்ந்து தியானம் செய்தா, முக்தி சுலபமா கிடைச்சுடும்.
கண்ணன் சீக்கிரமா இங்க வருவார்.
நீங்க பாக்யசாலி, விறகுக்குள்ள ஒளிஞ்சிருக்கற நெருப்பு மாதிரி அவர் உங்க எல்லார் மனசிலயும் இருக்கார்.
அவருக்கு இது தன்னோடது, இது மத்தவங்களோடது அப்படிங்கற நினைப்பே கிடையாது. எதுமேலயும் பற்று கிடையாது.
எந்த ஒரு காரியமும் கண்ணனை பாதிக்காது. உயர்ந்தவன் தாழ்ந்தவன் ங்கற பேதமும் இல்ல. அதனால்தான், மீன், பன்றி மாதிரி ரூபங்களாகவும், தேவர், மனுஷ்யர் மாதிரி ரூபமாவும் அவரே அவதாரம் பண்றார்.
நாம வேகமா சுத்தினா, உலகமே சுத்தற மாதிரி இருக்கும்ல? அதுபோல மனசு வேலை செய்யும்போது நான் அப்படிங்கற அஹங்காரத்தால் தானே எல்லாம் பண்றதா நினைப்பு வருது.
கண்ணன் உங்க ரெண்டுபேருக்கு மட்டும்தான் மகன்னு இல்ல.
இந்த உலகத்தில் இருக்கற எல்லாருக்குமே கண்ணன்தான் மகன், ஆத்மா, அம்மா, அப்பா எல்லாமே.
இங்க நீங்க பாக்கற ஒவ்வொரு பொருள்ளயும் கண்ணன் இருக்கார். கண்ணனேதான் இங்க எல்லாமா இருக்கார்.
இவ்வாறு உத்தவன் பேசிக்கொண்டே போனான்.
கண்ணனின் புகழை விழிவிரியக் கேட்டு கொண்டிருந்தனர் பெற்றோர்.
இந்த உத்தவன் மஹா மேதை, ப்ருஹஸ்பதி கிட்ட பாடம் படிச்சவராம். இந்த மாதிரி பெரிய படிப்பு படிச்சவங்கல்லாம் நம்ம கண்ணனைப் புகழறாங்களே என்று பெருமைப்பட்டுக்கொண்டார்கள்.
இரவு ஓடியதே தெரியவில்லை. அதிகாலைப் பொழுது வந்தது.
கோபிகள் எழுந்து தீபங்களை ஏற்றினர். வாசல்படிகளில் மஞ்சள், குங்குமம் இட்டு வாஸ்து தேவதைகளை வணங்கினர்.
பின்னர் தயிர் கடையத் துவங்கினர். இந்தத் தயிர் கடையும் ஒலி மஹாலக்ஷ்மிக்கு மிகவும்பிடித்தமான ஒலியாகும். காசும் பிறப்பும், வளையல்களும் கலகலப்ப, இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றிக் கயிறை இழுக்க, தளக் புளக்கென்று தாளகதியுடன் ஒரு இசை கேட்க, அதற்கேற்ப மிக மதுரமான குரலில்
பட்டு க்ருஷ்ணா
குட்டி கிருஷ்ணா
செல்ல கிருஷ்ணா
ஓடி வா..
பால் வெண்ணெய் தருவேன்
ஓடி வா ஓடி வா..
முத்து கிருஷ்ணா
மோஹன கிருஷ்ணா
ஸாஹஸ கிருஷ்ணா ஓடி வா
கன்னத்துடன் கன்னம் வைத்து முத்தாடுவேன்
ஓடி வா ஓடி வா
நந்த கிருஷ்ணா யசோதா கிருஷ்ணா
முரளீ கிருஷ்ணா ஓடி வா
கள்ளமற்ற என்னுள்ளத்தில்
ஓடி வா ஓடி வா
என்று மதுரகீதம் இசைக்கத் துவங்கினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment