மதுரா நாயகா.. (22)
உத்தவன் எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ, கிளம்பி மெதுவாக ரதத்திலேறி நந்தபவனம் சென்றான்.
ரதத்தைக் கண்டதும் வாசலுக்கு ஓடோடி வந்த நந்தன், கண்ணனே வந்ததாக நினைத்து மிகவும் மகிழ்ந்து கட்டியணைத்து அன்புடன் வரவேற்றார்.
பார்த்து பார்த்து உபசாரம் செய்து, சிறந்த உணவளித்தார்.
கண்ணன் தினமும் விரும்பி உண்ணும் வெண்ணெய் என்று ஒரு உருண்டை கொடுக்க, உத்தவனோ பானையோடு கேட்டு வாங்கி கண்ணனைப் போலவே நக்கி நக்கி சாப்பிட்டான்.
ஆனால், கண்ணனைப் போல உத்தரீயத்திலோ, யசோதா அல்லது நந்தனின் உடையிலோ கையைத் துடைக்காமல், போய் கையலம்பிக்கொண்டு வந்தான்.
உண்டபின் நிலாமுற்றத்தில் வந்து சுகமாக அமர்ந்தனர் இருவரும். நந்தன் மெதுவாகப் பேசத் துவங்கினார்.
நீங்க பெரிய பாக்யசாலி. கண்ணனோட இருக்கீங்க.
என் நண்பர் வசுதேவர் நல்லாயிருக்காரா? கம்சன் இறந்துட்டாரு. அந்த துக்கத்தை மறந்து அவரோட மகன்களும் சொந்தக்காரங்களும் நல்லா இருக்காங்களா?
நல்லவங்களையெல்லாம் பாடாப் படுத்தி, ஊரை விட்டு விரட்டி, பெரிய பாவத்தையெல்லாம் பண்ணிட்டு அந்த வினையாலேயே அழிஞ்சுபோனாரு.
கண்ணன் என்னை நினைக்கிறானா? யசோதாவைப் பற்றி பேசுவானா? மத்த நண்பர்களோட விளையாடின ஆட்டங்களும், அவன் மேய்த்த இந்த மாடுகளும் அவனுக்கு நினைவிருக்கா?
இந்த கோகுலத்திலயும், கோவர்தன மலைலயும் கண்ணன் கால் படாத இடமே ஒரு எள்ளளவுகூட கிடையாது தெரியுமா?
கண்ணன் எங்களையெல்லாம் பாக்க வருவானா? அவனோட சிரிச்ச முகமே எங்க கண்ல எப்போதும் நிக்குது.
பெரிய காட்டுத்தீ, பெரிய காத்து, பெரிய மழை, அகாசுரன் மாதிரி பெரிய அசுரர்கள் எல்லாத்திலேர்ந்தும் எங்க எல்லாரையும் காப்பத்தினவன்.
அவனை நினைச்சா, நாங்க எந்த வேலையும் செய்யமுடியாம தடுமாற ஆரம்பிச்சிடறோம்.
வீடு, காடு, ஆத்தங்கரை எங்கபோனாலும் அவன் நிக்கறாப்போலவே இருக்கு.
கர்க முனிவர் அப்பவே சொன்னார், கண்ணனும் பலராமனும் பகவானோட அவதாரம்னு. எங்களுக்கு அவன் கூடவே இருந்தப்ப அதெல்லாம் யோசிக்கமுடியல.
இப்ப அவனைத் தவிர வேற யோசனையே இல்ல.
கோவர்தன மலையை ஒத்தக்கையால, இல்லல்ல ஒரு விரலால ஏழு நாள் ராத்ரி பகலா தாங்கி நின்னான் தெரியுமா? அப்ப அவன் பக்கத்திலேயே நின்னு பாத்ததெல்லாம் இப்ப கனவாட்டம் இருக்கு.
சொல்ல சொல்ல நந்தனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அங்கே ஓரமாக அமர்ந்திருந்த யசோதை கண்ணனின் விளையாடல்களை நந்தன் வர்ணிக்கக் கேட்டு, அழத் துவங்கினாள். அவளது மார்புகளில் பால் பெருகிற்று.
நந்தன் பேசி முடித்துவிட்டு அமைதியானார்.
அவர்கள் இருவரின் அன்பையும் பார்த்து நெகிழ்ந்துபோன உத்தவன் அமைதியாய் இருந்தான். அங்கே ஒரு பேரமைதி நிலவியது.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment