மதுரா நாயகா..(21)
ஒருநாள் கண்ணன் தனியாக உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தான்.
தூரத்தில் யமுனை ஓடிக்கொண்டிருந்தாள். அந்த நீரோட்டத்தோடு அவன் மனமும் சென்றுகொண்டிருந்தது. அவனுக்கு யமுனையில் ஆடிய லீலைகள் அனைத்தும் நினைவில் வந்தன. ஒவ்வொரு கோபி, கோபியரின் முகமாக நினைவு வர, ராதையின் நினைவு வந்ததும் கண்கள் கலங்கின.
சற்றுத் தொலைவில் நின்று பார்த்துக்கொண்டே இருந்த உத்தவனுக்கு பகீரென்றது.
வந்த நாளிலிருந்து கண்ணனை இப்படிப் பார்த்ததே இல்லையே. ஆனந்த மயமான பகவானின் கண்கள் கலங்குமா? ஆனந்தக் கண்ணீர் போல் இல்லையே. முகம் வாடியிருக்கிறதே. பகவானுக்கு சோகமா? அவர் ஏற்படுத்திய மாயையில் அவரே விழுந்துவிட்டாரா?
என்னவாக இருக்கும்? உத்தவனால் கண்ணன் சோகமாக இருப்பதை ஏற்கவே முடியவில்லை.
மெதுவாக அருகில் சென்றான். உத்தவனைக் கண்டதும் கண்ணன் அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டான்.
உத்தவா! நீ என் பிரிய நண்பன். உண்மையில் நீ வேற நான் வேறங்கறதே இல்லை. எனக்காக ஒரு உதவி செய்வியா?
கட்டளையிடுங்கள் ஸ்வாமி!
நீ கோகுலம் போவியா? என்னை வளர்த்த அம்மா அப்பா உன்னைப் பாத்தா என்னைப் பார்த்த மாதிரி சந்தோஷப்படுவாங்க. அங்க என் நண்பர்கள் எல்லாரும் இருக்காங்க. அவங்களும் உன்னைக் கொண்டாடுவாங்க.
கோபிகள் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நான்தான் உயிர். எனக்காக அவங்கவங்க குடும்பத்தையே விட்டுடுவாங்க. அவங்களுக்கு இந்த உலகத்தில் ஆக வேண்டிய வேலையே இல்ல.
அவங்க எல்லாரையும் பாத்துக்கறதிலயும், அவங்க என்னை நினைச்சுண்டே இருக்கறதிலயும் எனக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்காக நான் அவங்களை இந்த உலகத்திலேயே வெச்சிருக்கேன். இல்லன்னா நான் அங்கேர்ந்து வந்ததுமே பிராணனை விட்டிருப்பாங்க.
என்னை விட்டுப் பிரிஞ்சிருக்கறதால் ரொம்ப சோகமா தளர்ந்து போயிருக்காங்க. நான் சீக்கிரமா வந்துடுவேன்னு நம்பிண்டிருக்காங்க. நான் அவங்களை நினைச்சிண்டே இருக்கேன்னு அவங்க கிட்ட சொல்வியா?
என்றான்.
உத்தவருக்கு கண்ணனின் போக்கு வியப்பைத் தந்தது. ஸர்வக்ஞனான பகவான் போயும் போயும் இடைப் பெண்களுக்காக வருந்துவாரா? காலரூபியான பகவான் கடந்த காலத்தை எண்ணிக் கலங்குவாரா?
ஒருக்கால் இது அவனது நாடகமாக இருக்கலாம். அந்த கோபியர்கள் மாயையில் மூழ்கி பிரிவுத் துயரால் துன்பப் படுகிறார்கள். எனவே,
பகவான் ஸ்ரீ ஹரி அந்தர்யாமி, ஆத்ம ஸ்வரூபம், என்று புரியவைத்து, அவர்களுக்கு ஞானத்தை போதிப்பதற்காக என்னை அனுப்புகிறார் போலும் என்று நினைத்துக்கொண்டான் உத்தவன்.
கண்ணனின் வேண்டுதலைக் கட்டளையாக சிரமேற்கொண்டு ரதத்தில் ஏறி உடனே கோகுலத்திற்குப் புறப்பட்டான்.
அவர் செல்லும் வேளை கோதூளி வேளை. இலட்சக்கணக்கான பசுக்கள், மேய்ச்சலுக்குப் போய்விட்டு மாலை கோகுலம் திரும்பிக்கொண்டிருந்தன. அவைகளின் கோதூளியால், உத்தவனின் ரதமே மறைந்துவிட்டது.
காளைகளும் பசுக்களும் கனைக்கும் சத்தம் எங்கும் கேட்டது. பால் நிறைந்ததால் மடி கனத்துப்போன பசுக்கள் தங்கள் கன்றுகளை நினைத்துக் கொண்டு வேகமாக ஓடின.
தாய் மடியில் பால் குடிக்க அவிழ்ந்த்துவிடப்பட்ட கன்றுகள் அன்னையைத் தேடி இங்குமங்கும் ஓடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
மாடு கறக்கும் ஒலி, சலங்கை சத்தம், புல்லாங்குழல் ஒலி, மிக நன்றாக அலங்கரித்து க் கொண்ட கோப கோபியர்கள் கண்ணனின் மங்களமான திருவிளையாடல்களை மதுரமாக இசைக்கும் ஒலி.
தோட்டங்கள் பூத்துக் குலுங்கின. பறவைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம், அடடா.. என்ன அழகு. அன்னபட்சிகள், குளக்கோழிகள், தாமரைகள் நிறைந்த நீர்நிலைகள், நிறைந்து பாயும் யமுனை, சில்லென்ற காற்று.
மயங்கி நின்றான் உத்தவன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment