மதுரா நாயகா..(19)
இறந்துவிட்டான் என்று நினைத்த மகன் மீண்டு உயிரோடு வந்தால் எப்படி இருக்கும்?
குருவும் குருமாதாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
எப்பாடு பட்டாவது குருவின் ப்ரீதிக்கு ஒருவன் ஆளாகிவிட்டால் போதும். பிறகு, அவன் வாழ்நாளில் எதற்கும் கலங்கவேண்டியதே இல்லை.
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்னும்படி, கண்ணன் இவ்விஷயத்திலும் தானே குருவாக இருந்து, குருவின் ப்ரீதிக்கு ஆளாவதெப்படி என்று நமக்குக் காட்டுகிறான்.
இறைவனே ஆனாலும், அவதாரம் என்று வந்துவிட்டபடியால், குருவின் ஆசீர்வாதத்தோடு வாழ்வைத் துவங்க நினைக்கிறான்.
பெற்ற மகனை விட்டு, கண்ணனையும் பலராமனையும் கட்டிக்கொண்டு உச்சி மோந்தார்கள் இருவரும். அதுவும் தொலைந்துபோன அன்றிலிருந்து எவ்வளவு வளர்ச்சி இருக்குமோ, அந்த அளவு வளர்ச்சியுடன், எல்லா அறிவையும் புகட்டிக் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறான்.
தன் பாடசாலையில் படித்திருந்தாலும் தன் மகனே ஆனாலும், அவனுக்கு இவ்வளவு ஞானத்தைத் தன்னால் வழங்கியிருக்கமுடியாது. கண்ணன் தன் அருள் பார்வையாலேயே தன் புதல்வனை ஞானியாகவும், நல்லொழுக்கம் மிக்கவனாகவும், அனைத்து கல்விகளையும் தேர்ந்தவனாகவும் ஆக்கி ஒப்படைத்திருந்தான்.
பேச்சற்று சிலையாய் நின்றார் குருதேவர்.
பின்னர் குழந்தைகளை மனமார ஆசீர்வாதம் செய்தார்.
குருவுக்கு ஆற்ற வேண்டிய நன்றிக்கடனை மிக நன்றாகச் செலுத்தினீர்கள். உங்கள் வீட்டிற்குச்செல்லுங்கள். உங்கள் புகழ் எல்லா லோகங்கலிலும் பரவட்டும். நீங்கள் கற்ற வித்தை எத்தனை பிறவியானாலும் மறக்காமல் தக்க சமயத்தில் கை கொடுக்கும். நிம்மதியுடனும் சந்தோஷமாகவும் உங்கள் வாழ்வு அமையட்டும்
என்று தெய்வம் என்பதையும் மறந்து, மாணவர்களுக்கு மனமுவந்து ஆசீர்வாத மழை பொழிந்தார்.
குருவையும், குருமாதாவையும் வணங்கிவிட்டு,
கண்ணனும் பலராமனும் காற்றையும் தோற்கச் செய்யும் வேகமுள்ள ரதத்தில் ஏறி வெகு விரைவில் மதுரா வந்தடைந்தனர்.
மதுராவின் கோட்டை வாசலில் நின்று கண்ணன் தன் புதிய சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதினான்.
புதுவித ஒலியானாலும், ஒரே கணத்தில் வந்திருப்பது கண்ணனும் பலராமனும் என்ற செய்தி காட்டுத்தீபோல் பரவியது.
அனைவரும் செய்து கொண்டிருந்த வேலைகளை அப்பப்படியே போட்டுவிட்டு வாசலில் ஓடிவந்தனர்.
ராம க்ருஷ்ணர்களைக் கண்ட மதுரா மக்கள், வெகுநாள்களாக அவர்களைக் காணாதிருந்த துன்பம் நீங்கி, தொலைந்த பொருள் கிடைத்ததுபோல் மகிழ்ச்சியடைந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment