மதுரா நாயகா.. (17)

சாந்தீபனி மஹரிஷியின் மனைவி குரு தக்ஷிணையாக  பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இறந்த தங்களது மகனை மீட்டு வரும்படி, கண்ணனிடம் கேட்டாள்.

கண்ணனும், பலராமனும் சரியென்று கூறி,  உடனேயே புறப்பட்டுச் சென்றனர்.

சாந்தீபனிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
இவளைச் சாதாரணப் பெண்மணி என்று நினைத்துக்கொண்டிருந்தேனே. விதியை மீறி,  இறந்த மகனை மீட்டு வரும்படிக் கேட்டுவிட்டாளே. அதற்கும் இந்தக் கண்ணன் ஒப்புக்கொண்டானே. 

மனைவியை அழைத்தார்.

நான் உன்னை என்னமோ என்று நினைத்தேன். இப்படிக் கேட்டுவிட்டாயே..

எப்படி?

இறந்துபோனவனைத் திருப்பும்படி கேட்பார்களா? விதியை மீறிய செயல் அல்லவா?

ஏன்? கேட்டால் என்ன? கண்ணன் இறைவனாயிற்றே! அவனால் முடியாதது உண்டா?

கண்ணன் இறைவன்தான். அவனால் முடியும்தான். ஆனால், அது உனக்கெப்படித் தெரியும்?

ஏன்? நீங்களே பல‌முறை சொல்லியிருக்கிறீர்களே.

ஆமாம். சொல்லியிருக்கிறேன். ஆனால், அனுபவம் இல்லாமல் எப்படி கண்முன்னால் நடமாடும் குழந்தையை இறைவன் என்று நம்பினாய்?

நீங்கள் என்ன இருந்தாலும் ஆணல்லவா? ஞானியும் கூட. மகன் இறந்த சோகத்தை எளிதில் கடந்துவிடுகிறீர்கள். என்னால் எப்படி முடியும்? வீட்டில் எந்தப் பொருளைப் பார்த்தாலும், நம் குழந்தையின் நினைவு வரும். கண்ணன் வந்ததிலிருந்து அதையெல்லாம் மறந்திருந்தேன். இவன் படிப்பை முடித்துவிட்டுக் கிளம்பினால் யார் முகத்தைப் பார்ப்பது? அதனால்தான் பெற்ற பிள்ளையையே கொண்டு வா என்று கேட்டேன். கண்ணனால் முடியும். கொண்டு வருவான். 

எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?

கண்ணன் பல அற்புதங்கள் செய்ய வல்லவன் என்று எனக்குத் தெரியும்.

எப்படி? எதையேனும் கண்டாயா?

ஆம். பலமுறை கண்டிருக்கிறேன்.

வியப்பின் உச்சிக்கே சென்று விழுந்துவிடாமல் பிடித்துக் கொண்டார் சாந்தீபனி.

கண்டிருக்கிறாயா? என்ன கண்டாய்? சொல் பார்க்கலாம்.

பல சமயங்களில், பால் கறந்து வரச் சொல்லி பாத்திரத்தைக் கொடுத்தனுப்புவேன்.

அவன் வேறு ஏதேனும் வேலை செய்துகொண்டே அக்கம் பக்கம் யாருமில்லை என்றால், பாத்திரத்தைப் பார்த்து, போ என்பான். பாத்திரம் தானாகவே நகர்ந்துபோய், மாட்டின் மடியின் கீழ் நிற்கும். மாடு தானே கறக்கும். பாத்திரம் நிரம்பியதும், பசு நிறுத்திக்கொள்ளும். பாத்திரம் தானாகவே கண்ணனின் அருகில் வந்துவிடும்.

எந்தப் பொருளை எடுக்க வேண்டும் என்றாலும், அருகில் யாருமில்லையெனில், ஜடப் பொருள்கள் அனைத்தும் ஜீவன் உள்ளதுபோல் தானே இயங்கி வேலைகளை முடித்துவிடும்.

தானாகவே அக்னிக்கு இந்தணங்கள் சென்று சேரும்.

தானாகவே அவன் கூப்பிடும் பொருள்கள் எல்லாம் அவன் பின்னாலேயே போகும்.

பலமுறை ஒளிந்திருந்து அவன் செய்வதையெல்லாம் பார்த்திருக்கிறேன் ஸ்வாமி 

என்றாள் குரு மாதா.

அவள் சொல்ல சொல்ல, விழி விரியக் கேட்டுக் கொண்டிருந்த சாந்தீபனி, 

பொதுவாக பெண்கள் வாயில் ரகசியம் தங்காது என்பார்கள். 

அத்தனையும் அறிந்தும் மனிதன்போல் நடிக்கும் கண்ணனை வியப்பதா?  அத்தனை அற்புதங்களையும் பார்த்தும் என்னிடம் கூட மூச்சு விடாமல் இருக்கும் உன்னை வியப்பதா? 
ஒன்றும் புரியவில்லையே என்றார்.

இறைவன் என்று தெரிந்தபினால், முக்தியையும், பக்தியையும் வேண்டாமல், மகனை வேண்டினாயே என்றார்.

குருமாதா வெகு அழகாக பதில் சொன்னாள்.

கண்ணனை மறக்காமல் எப்போதும்  நினைக்கவே இறந்த மகனைக் கேட்டேன் ஸ்வாமி.

மறுபடி விழித்தார் குருதேவர்.

இல்லவே இல்லை, மறைந்தான் என்ற பிள்ளை மீண்டு வந்தால், ஒவ்வொரு முறையும் அவனைக் காணும்போதும், அவன் முகமா தெரியும்? அவனை நமக்கு மீட்டுத்தந்த கண்ணன் முகமல்லவா தெரியும்? தியானம், யோகம் எல்லாம் தங்களைப் போன்ற உயர்ந்த ரிஷிகளுக்குத்தான்  இயலும் ஸ்வாமி. அபலையான, பாசங்களால் கட்டுண்ட என்னைப்போன்ற பெண்களுக்கு இடையறாத பகவத் தியானம் சித்திக்க, இதை விட வேறென்ன சுலபமான வழி இருக்கமுடியும்? என்றாள்.

அவளது சமயோசித புத்தியை நினைந்து நினைந்து மகிழ்ந்தார் சாந்தீபனி.

கண்ணனும் பலராமனும் குரு புத்ரனைத் தேடி பிரபாசக் கரைக்குச் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37