மதுரா நாயகா.. (16)
சாந்தீபனி மஹரிஷியிடம் குருகுலக் கல்வி பயின்ற கண்ணனும் பலராமனும், வெகு விரைவிலேயே உபநிஷதங்கள், வேதங்கள், தனுர்வேதம், சாஸ்திரங்கள், நீதிகள், கலைகள் அனைத்தையும் கற்றனர்.
64 நாள்களில் அவர்களது கல்வி முழுவதுமாய் முடிந்ததும், குரு அவர்களை அழைத்து, கல்வி முடிந்துவிட்டதென்றார். இருவரும் குருவை வணங்கி,
தங்கள் கருணையால் எங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் கல்வி முடிந்துவிட்டது. குருதக்ஷிணையாக தாங்கள் விரும்புவதை சமர்ப்பிக்கிறோம் என்றனர்.
சாந்தீபனி அவர்களைக் கண்டதும் கண்ணீர் மல்கினார். ஞானியான அவருக்கு, கண்ணனின் ஸ்வரூபம் நன்றாகத் தெரியும். சீக்கிரமாகக் கல்வி முடிந்ததில் ஒரு பெருமை இருந்தபோதிலும், இந்தக் குழந்தைகளைப் பிரிய வேண்டுமே என்று கலங்கினார்.
கண்ணனுக்கு அவதார காரியங்கள் காத்திருப்பதை எண்ணி, தன்னை அடக்கிக்கொண்டு கூறலானார்.
கண்ணா! நீங்கள் இருவரும் அனைத்தும் அறிந்தவர்கள். தங்களுக்கு இந்த அவதாரத்தில் குருகுலவாசம் வேண்டும் என்பதற்காக என் ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
எனக்கு இந்த பாக்யமே போதும். வேறொன்றும் வேண்டாம். என்றார்.
கண்ணனோ,
குருநாதா! தங்களுக்கு ஏதாவது சேவையாக தக்ஷிணை கொடுக்கவேண்டும் என்று என் மனம் விழைகிறது. ப்ரும்மஞானியான தங்களுக்கு எதுவுமே தேவையில்லைதான். எனினும், குருமாதாவிடமும் கேட்டுச் சொல்லுங்கள். என்றான்.
குருதேவர் சிரித்தார். நீயே போய் குருமாதாவிடம் கேள் கண்ணா! என்றார்.
குழந்தைகள் இருவரும் உள்ளே சென்று குருமாதாவை வணங்கினர்.
குருதக்ஷிணை பற்றிச் சொன்னதும், அவள் இரண்டு குழந்தைகளையும் கட்டி அணைத்து உச்சிமோந்து சொன்னாள்.
கண்ணா! எங்கள் மகன் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக பிரபாஸ க்ஷேத்ரத்தில் இறந்துவிட்டான். அவன் மறைந்த துக்கத்தை என்னால் தாங்கவே முடியவில்லை. புத்ரசோகம் மிகவும் பெரியது கண்ணா..
நீ வந்த நாள் முதல், உன் முகத்தைப் பார்த்ததும் என் சோகமெல்லாம் மறைந்துவிட்டது. இப்போது நீ கல்வி முடித்துக் கிளம்பிவிட்டாயானால், நான் என்ன செய்வேன்?
உன்னை இங்கேயே இரு என்று சொல்ல இயலாது. உனக்கோ ஆயிரமாயிரம் ராஜாங்க காரியங்களும், அவதார காரியங்களும் காத்திருக்கின்றன.
நீ இறைவன் என்பதை நன்றாக அறிந்தும், கேட்பதனைத்தும் வாரி வழங்கும் ஸர்வசக்தன் என்பதௌ அறிந்தும் இவ்வாறு கேட்கிறேனே என்று எண்ணாதே..
நீ கிளம்பிச் சென்று விட்டாயானால், மீண்டும் புத்ரசோகம் என்னைச் சூழுமோ என்று அச்சமாக இருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னால் இறந்த என் மகனை மீட்டுக் கொண்டுவருவாயா?
அப்படி அவன் வந்துவிட்டால், அவன் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் உன்னால் கிடைத்தவன் என்று எனக்கு இறைவனான உன்னுடைய தியானமும் கிடைக்கும்.
என்றாள்.
கண்ணன், அவளுடைய பேச்சை எண்ணி வியந்தான். இறைவனே எதிரில் வந்தாலும், தாய் தன் பிள்ளையைப் பற்றியே நினைக்கிறாளே என்று ஆச்சர்யமாக இருந்தது.
இறந்தவனைக் கொண்டு வருவது விதியை மீறும் செயல்தான் அம்மா. இருப்பினும், குருதக்ஷிணையாகத் தாங்கள் கேட் டு விட்டதால், நிச்சயம் செய்வேன். உங்கள் மகனுடன் வருகிறேன்.
என்று கூறிப் புறப்பட்டான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment