மதுரா நாயகா.. (13)
உக்ரசேனரை சிறையினின்று விடுவித்த கண்ணன், தான் பட்டம் சூட்டிக்கொள்ளவில்லை. பலராமனுக்கும் இல்லை. மீண்டும் உக்ரசேனரையே அரியணையில் அமர்த்தினான்.
தான் ஜெயித்த ராஜ்யத்திற்கு தான் அரசனாகாமல், அவர்க்கே விட்டுக் கொடுப்பது சாதாரணச் செயலா?
கண்ணன் எப்போதுமே மக்கள் சேவகன். மக்களோடு இணைந்து பழகுவதை விரும்பக்கூடியவன்.
யது வம்சத்தில் வந்தவர்க்கு அரச பதவி இல்லை என்ற யயாதியின் சாபம் உண்டு. அதனால் பதவி ஏற்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டாலும், காலகாலனான பகவானை சாபங்கள் என்ன செய்துவிட முடியும்?
இருப்பினும் விதிகளைத் தனக்காக வளைப்பதில் விருப்பமற்றவன் கண்ணன். பக்தனுக்காக விதி, காலம் அனைத்தையும் மாற்றத் துணிபவன், தன் சொந்த விஷயம் என்று வரும்போது விதிப்படியே நடக்கிறான்.
உக்ரசேனரைப் பார்த்துச் சொன்னான்.
மஹாராஜா! நாங்களும் உங்கள் குடிமக்கள்தான். எமக்கும் கட்டளையிடுங்கள். நான் தங்களது சேவகனாகத் தங்கள் அருகில் இருந்தால், ஈரேழு லோகத்து அரசர்களும் தங்களை வணங்கிக் கப்பம் கட்டுவார்கள். என்றான்.
உக்ரசேனர், கண்ணனை ஆலிங்கனம் செய்துகொண்டார்.
கம்சனது கொடுமைகளைத் தாங்க இயலாமல் ஊரை விட்டுப் போய் ஒளிந்து வாழ்ந்திருந்த யாதவர்கள், வ்ருஷ்ணிகள், அந்தணர்கள், மது, தாசார்ஹர்கள், குகுரர்கள் ஆகிய வம்சத்தவர்களையும், அவர்களது உறவினர்களையும், மிகுந்த மரியாதையோடு மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தான் கண்ணன். அவர்களை வரவேற்று, மிகவும் சலிப்புற்று களைத்து வந்திருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்கள் வாழத் தேவையான செல்வங்களை அளித்து, அவர்கள் இல்லங்களிலேயே குடியேறச் செய்தான்.
அவர்கள் பெருமகிழ்ச்சியும் மனநிம்மதியும் கொண்டு தத்தம் வீடுகளுக்கு ஏகினர்.
எப்போதும் குமிழ் சிரிப்புடன் மலர்ந்த முகத்துடன் விளங்கும் கண்ணனை தினமும் பருகத் துவங்கினர்.
கண்ணனைக் காண காண மதுரா மக்களின் வலிமையும், தேஜஸும் வளர்ந்தன.
சில நாள்கள் சென்றதும் ஒருநாள் காலை, பலராமனும், கண்ணனும், மதுராவில் நந்தர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவரை வணங்கினர்.
அவரைக் கண்டதும் இருவர் கண்களிலிருந்தும் ஆறாகக் கண்ணீர் பெருக, நந்தனோ குழந்தைகளை வாரி அணைத்துக்கொண்டு உச்சிமோந்தான். முத்தமழை பொழிந்தான்.
அப்பா! எங்க ரெண்டுபேரையும் அப்படி வளத்தீங்களே! எங்கமேல உயிரையே வெச்சிருக்கீங்கன்னு தெரியும்.
நந்தன் கண்ணன் வாயைப் பொத்தினான்.
எனக்குத் தெரியும் கண்ணா. நீ உன் அம்மா அப்பாவோட இருக்கறதுதான் சரி. அவங்க பாவம், பச்சப்புள்ளையா உன்னை வாரிக் கொடுத்துட்டு இவ்ளோநாள் பேசாம இருந்தாங்க.
எங்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்தான். ஆனாலும், எப்ப வேணாலும் உன்னை வந்து பாத்துக்கறோம். நீயும் அப்பப்ப கோகுலத்துக்கு வா. என்றார்.
இரு குழந்தைகளும் வளர்ப்புத் தந்தையான நந்தனின் கால்களில் விழுந்தார்கள்.
அப்பா, பெத்தவங்களால் கைவிடப்படற குழந்தைகளை யார் எடுத்து வளக்கறாங்களோ, அவங்கதான் உண்மையான அப்பா அம்மா. அதனால நான் எங்க இருந்தாலும் என் அப்பா அம்மான்னா எல்லாரும் உங்க பேரையும், யசோதாம்மா பேரையும்தான் எல்லாரும் சொல்லப்போறாங்க.
என்றான்.
பின்னர் மெதுவாக, நீங்க சொன்னதுபோல, நாங்க அங்க அப்பப்ப வரோம் பா. அம்மாவும், மத்த கோபர்களும் கவலைப்பட்டுண்டிருப்பாங்க. அவங்ககிட்டயும் நாங்க சீக்கிரம் வரோம்னு சொல்லுங்க. நீங்க கோகுலம் கிளம்புங்கப்பா
என்று எப்படியோ தயங்கி தயங்கிச் சொல்லிவிட்டான் கண்ணன்.
கண்ணைத் துடைத்துக்கொண்டு மீண்டும் குழந்தைகளைக் கட்டி முத்தமிட்டுவிட்டு, தன் உடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு கோகுலத்திற்குக் கிளம்பினான் நந்தன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.
Comments
Post a Comment