மதுரா நாயகா..(11)
மல்லர்கள் கொல்லப்பட்டதும், சபையோர் நன்று நன்று என்று உரக்கச் சொல்லிப் பாராட்டினர். குழந்தைகள் ஆடுவதை கையைத் தட்டி ரசிக்கத் துவங்கினர்.
இவை அனைத்தையும் பார்த்த கம்சனுக்கு பயத்தில் பைத்தியமே பிடித்துவிட்டது.
சண்டை போட வந்த மற்ற மல்லர்கள் உயிருக்கு பயந்து ஓடியதைப் பார்த்து அவன் அதிர்ச்சியுற்றான்.
முரசையும், பேரி முழக்கத்தையும் நிறுத்தச் சொன்னான்.
சிறுவர் வேஷத்தில் இருக்கும் இந்தக் கொடியவர்களை நகரை விட்டு வெளியேற்றுங்கள். கோபர்களின் அனைத்து செல்வத்தையும் பறிமுதல் செய்யுங்கள். நந்தகோபனைக் கைது செய்யுங்கள். தீய எண்ணம் கொண்ட வசுதேவனையும், தேவகியையும், அவர்களுக்குத் துணை நிற்கும் என் தந்தை உக்ரசேனனையும் கொல்லுங்கள்.
என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறி கட்டளைகளைப் பிறப்பித்தான். அவனது கட்டளைகளுக்கு எப்படி வினையாற்றுவது என்று தெரியாமல் வீரர்கள் திகைத்தனர்.
இவ்வாறு அவன் பிதற்றிக்கொண்டிருந்தபோதே, கண்ணன் மிகுந்த சினத்துடன் கம்சன் இருந்த மஞ்சத்தில் தாவி ஏறினான்.
அவனைக் கண்டதும் கம்சன் எழுந்து தன் கத்தியையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான்.
கண்ணனை நோக்கிச் சுழன்று வந்து தாக்க முற்பட்டான்.
அக்னியை நோக்கிவரும் விட்டில்பூச்சிபோல் தன்னை நோக்கிவரும் கம்சனை, கண்ணன் கருடன் பாம்பைப் பிடிப்பதுபோல் பிடித்தான்.
கண்ணனின் கரங்களில் பிடிபட்ட, கம்சனது கிரீடங்கள் நழுவின. அவனது தலைமுடியைப் பிடித்து, மஞ்சத்திலிருந்து இழுத்துக் கீழே தள்ளினான் கண்ணன். நிலைகுலைந்துபோய் மல்லாந்து விழுந்த கம்சனது மார்பில் குதித்தான். பின்னர் ஓங்கி ஒரு குத்து விட்டான். கண்ணனது பாரம் தாங்காமல் கம்சன் இறந்தான்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே இறந்த கம்சனின் உடலை கரகரவென்று இழுத்தான் கண்ணன்.
பயத்தினால் நடுங்கிக்கொண்டு, உண்ணும் உணவு, பருகும் நீர், எதிர்வரும் முகங்கள், செடிகள், கொடிகள், மரங்கள், ஆகிய அனைத்திலும் ஒரு கணம்கூட விடாமல் எல்லா நேரங்களிலும் சக்ரபாணியான கண்ணனையே கண்ட கம்சன், இறக்கும் தருவாயிலும் பீதாம்பரதாரியாக, காதுகளில் குண்டலங்கள் மின்ன, மார்புகளில் முத்துமாலைகளும், சிவப்பு உத்தரீயமும், அலையும் குழலும், வசீகரிக்கும் நீலமேனியும் கொண்ட கண்ணனைக் கண்டதால், எளிதில் எவரும் அடையமுடியாத சாரூப்ய முக்தியை அடைந்தான்.
கம்சன் இறந்ததும், அவனது சகோதரர்களான கங்கன், நியக்ரோதன் முதலான எட்டு பேரும் பலராமனையும் கிருஷ்ணனையும் அடிக்க வந்தனர். அவர்கள் அனைவரையும் பலராமன் இரும்புத் தடியால் அடித்துக் கொன்றான்.
வானில் துந்துபிகள் முழங்கின. ப்ரும்மாதிதேவர்கள் அனைவரும் கூடிவந்து கண்ணன் மற்றும் பலராமன் மீது பூமாரி பொழிந்தனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment