மதுரா நாயகா..(10)
கண்ணனும், பலராமனும் மற்போருக்குத் தயாரானபோது, கூட்டம் 'ஹா' வென்று அதிர்ந்தது.
சின்னப் பசங்க. தாங்களே முடியாதுன்னாலும் விடமாட்டேங்கறாங்களே என்று தாய்மார்கள் புலம்பினர்.
ஆனால், கண்ணனின் மலர்ந்த முகமும், அதில் ஒளிரும் நம்பிக்கையும், அவர்களுக்கு தைரியமளித்தது.
கண்ணன் சாணூரனையும், பலராமன் முஷ்டிகனையும் எதிர்கொண்டனர்.
கைகால்களைத் தட்டி, ஒருவரை ஒருவர் கட்டி வலிமையாகத் தன் பக்கம் இழுத்தனர்.
முஷ்டி, தலை, மார்பு ஆகியவற்றால் மோதிக்கொண்டனர்.
தரதரவென்று இழுத்துச் சென்று தூக்கி எறிவதும், ஒருவரை ஒருவர் கட்டிக் கீழே தள்ளுவதும், மோதுவதுபோல் வேகமாக ஓடிவந்து விலகுவதுமாக மிக ஆக்ரோஷமாக சண்டை நடைபெற்றது.
கீழே விழுந்தவர்களைத் தூக்கி எறிந்தும், தலைக்கு மேல் தூக்கியும் அச்சமூட்டினர்.
கம்சராஜா செய்யறது பெரிய தப்பு.
இந்த மல்லர்கள் எங்க? தளிர் மாதிரி உடம்பு இருக்கற குட்டிப் பசங்க எங்க?
இந்தா மஹாபாவம் அவங்களைச் சும்மா விடப்போறதில்ல.
போயும் போயும் நாம இதையா பாக்கணும்?
கண்ணனைப் பார். வியர்வைகூட அழகா இருக்கு. கண்ணெல்லாம் சிவந்துபோச்சு.
மஹாலக்ஷ்மி குடியிருக்கற மார்பை அந்த மல்லன் எப்படி பிடிச்சு தள்றான் பார்.
அழகா, காட்டில் மாடு மேய்ச்சுண்டு, வெண்ணெய் திருடிண்டு இருந்த கண்ணனைப் பார்த்தவங்க பாக்யசாலி. நாமளும் இருக்கோமே.
நாள்முழுக்க வேலை செய்தாலும், கண்ணன் பேரைப் பாடிண்டே செய்வாங்களாம். சாயங்காலம் ஆனதும் மாடு மேய்ச்சுட்டு வர கண்ணனைப் பார்க்க எல்லா வேலையும் விட்டுப்போட்டு ஓடியாருவாங்களாம். நமக்கு இவன் இப்படி அடிபடறதைப் பார்க்கணும்னு வெச்சிருக்கு. எவ்ளோ துர்பாக்யம் நமக்கு.
மக்கள் மாற்றி மாற்றி பேசிக்கொண்டு தவிப்பதைப் பார்த்த கண்ணன், விளையாடியது போதும். சாணூரனைக் கொன்றுவிடலாம் என்று முடிவு செய்தான்.
பகவானின் இடிபோன்ற தாக்குதலைத் தாங்காமல் சாணூரன் அடிக்கடி களைப்புற்றான்.
மிகவும் கோபத்துடன் சாணூரன் கழுகுபோல் மேலெழும்பி பகவானின் மார்பில் ஓங்கிக் குத்தினான்.
கண்ணன் பாறையைப் போல் உடலை ஆக்கிக்கொண்டு பூமாலையால் அடிக்கப்பட்ட யானைபோல் உறுதியாய் நின்றான். கைவலியால் சாணூரன் ஒரு கணம் தயங்க, அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கரகரவென்று வேகமாய் அவனைச் சுழற்றி, ஓங்கித் தரையில் அடித்தான்.
உடைகளும் ஆபரணங்களும் சிதற, உயிரற்ற சாணூரன் சாய்ந்த கொடிமரம்போல் விழுந்தான்.
விளையாடியது போதும் என்று பலராமனுக்குக் கண்ணைக் காட்ட, அவனும் முஷ்டிகனைக் கொல்லத் தயாரானான்.
முஷ்டிகன் பலராமனைக் குத்துவதற்கு வேகமாய் வர, பலராமன் அவனை ஓங்கி ஒரு அறை விட்டார்.
காதுகள் கிழிந்துபோய், வாயிலிருந்து ரத்தம் கக்கிக்கொண்டு வேதனையுடன் பலராமனைப் பார்த்துக் கொண்டே பேய்க்காற்றில் அடிக்கப்பட்ட மரம்போல் அப்படியே விழுந்தான் முஷ்டிகன்.
கூட்டம் கம்சன் மேலிருந்த பயத்தை மறந்து பலமாகக் கைதட்டி, மலர்களை வாரி இறைத்தனர்.
அடுத்ததாக கூடன் என்ற மல்லனும், சலன் என்பவனும் பலராமனையும் க்ருஷ்ணனையும் தாக்கினர்.
கூடனை பலராமன் இடதுகையால் அறைந்து கொன்றான். சலனின் தலையைக் கண்ணன் காலால் ஓங்கி மிதித்தான். பகவானின் பாதம் பட்டு பகவானைப் பார்த்துக்கொண்டே அவனது உயிர் பிரிந்தது.
அடுத்து, தோசலகன் கண்ணனை நோக்கி ஓடிவர, அவனை லாவகமாகப் பிடித்து இரண்டாகக் கிழித்துப் போட்டான்.
சாணூரன், முஷ்டிகன், கூடன், சலன், தோசலன் ஆகிய ஐவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மற்ற மல்லர்கள் உயிர்வாழ விரும்பி அங்கிருந்து ஓடிவிட்டனர்.
எல்லாரும் சந்தோஷமாக ஆர்ப்பரிக்க, கண்ணனை ஒத்த வயதுடைய சிறுவர்கள் கண்ணனை நோக்கி ஓடிவந்தனர்.
சிலர் இருவரையும் தங்கள் தோள்களின் மீது தூக்கிக்கொண்டனர். சிலர் கட்டியணைத்துக்கொண்டனர்.
பின்னர், அனைவரும் முரசு அறையும் ஓசைக்கேற்ப கால் சலங்கைகளைத் தட்டி கண்ணனையும் பலராமனையும் சுற்றி சுற்றி ஆடினர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment