மதுரா நாயகா.. (9)
கையில் யானைத் தந்தம், இறுக்கிக் கட்டப்பட்ட கச்சம், உடலெங்கும் தெளிக்கப்பட்டிருந்த யானையின் குருதி, முகம் முழுதும் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள், பலராமனுடன் சில கோபர்கள் தொடர கம்பீரமாக மல்லர் அரங்கின் உள்ளே நுழைந்தான் கண்ணன்.
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் காட்சியளித்தான். அரங்கில் கூடியிருந்த மல்லர்களுக்கு இடிபோல் தென்பட்டான். பெண்களுக்கு மன்மதனாகவே தோன்றினான். ஏற்கனவே அரங்கினுள் சில கோபர்களும், நந்தனும் வந்து அமர்ந்திருந்தனர்.
அந்த கோபர்களுக்கு அன்புக்குரியனாகவும், நந்தனுக்கும், வசுதேவருக்கும் குழந்தையாகவும், கண்ணனின் தத்துவத்தை உணராதவர்களுக்கு ஒரு அற்புதமான அல்லது பயங்கர மனிதனாகவும், யோகிகளுக்கு ப்ரும்மமாகவும், பக்தர்களுக்கு பகவானாகவும், வ்ருஷ்ணி குலத்தவர்க்கு இஷ்டதெய்வமாகவும் காட்சியளித்தான்.
கம்சனுக்கு? அந்தோ.. அவன் யமதர்மராஜனையே கண்டதாய் நினைத்து நடுங்கிப்போனான்.
இந்த ஒரே ஒரு தோற்றத்திலேயே, கண்ணன் ரௌத்ரம், அற்புதம், ச்ருங்காரம், ஹாஸ்யம்,(நண்பர்களிடம், யானைத் தந்தத்தைக் காட்டி சிரிப்பது) வீரம், சோகம், கருணை, (இரண்டும் பெற்றோர் காட்டுவது) பயம், (கம்சன்) சாந்தம், பக்தி ஆகிய பத்து 'பா'வங்களை கண்ணன் தூண்டுகிறான்.
குவலயாபீடம் கொல்லப்பட்டதை அறிந்த கம்சன், கண்ணனைக் கொல்வது எளிதல்ல என்று உணர்ந்தான்.
கண்ணனையும் பலராமனையும் நிமிர்ந்து காணக்கூட சக்தியில்லை கம்சனுக்கு. அங்கிருந்த நகர மக்களுக்கோ கண்ணனை எவ்வளவு கண்டாலும் போதவில்லை. ஒவ்வொருவராக மெதுவாக அவனருகில் வந்து சூழ்ந்து கொண்டனர்.
அவனது அழகு, பராக்கிரமம், நடை உடை 'பா'வனைகளை எல்லாம் ஏற்கனவே மதுரா நகரத்து மக்கள் கேள்விப்பட்டிருந்த அவனது திருவிளையாடல்களுடன் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டனர்.
இவங்க ரெண்டு பேரும் பகவானின் அம்சமாமே.
வசுதேவரோட பிள்ளைங்களாமே. அவர்தான் ராத்ரியோட ராத்ரியா கொண்டுபோய் கோகுலத்துல விட்டுட்டு வந்தாராமே.
நம்ம ராஜா அனுப்பின ராக்ஷஸங்களையெல்லாம் கொன்னானாமே.
மாடு மேய்க்கற பசங்களையெல்லாம் காட்டுத்தீலேர்ந்து காப்பாத்தினாராமே..
காளியன் பாம்பை அடக்கினானாமே.
மலையைத் தூக்கினவன் இவன்தானோ..
வாசல்ல அந்த யானையை எப்படி சுத்தினான் பாத்தீல்ல.? மலையைத் தூக்கறது கஷ்டமா?
கோகுலத்தில இருக்கற எல்லாப் பொண்ணுகளுக்கும் இவனைப் பிடிக்குமாம்.
நம்ம மதுராவுக்கு இன்னிக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு..
பலராமனும் பல ராக்ஷஸங்களை கொன்னவன்தான்..
கலகலவென்று ஆளாளுக்கு ஒன்று பேச, கம்சன் வெகுண்டு சைகை செய்தான். உடனே முரசு ஒலிக்கத் துவங்கியது.
அவர்கள் பேசுவதை நிறுத்த முடியாவிட்டாலும் தன் காதிலாவது விழாமல் இருக்கட்டும் என்று நினைத்தான் போலும்.
அதற்குள் சாணூரன் கண்ணனையும் பலராமனையும் பெயரிட்டு அழைத்தான்.
ஹே! நந்தகுமாரா! பலராமா! இருவரும் வாருங்கள்! அரசர் தங்களைக் காண விழைகிறார். அரசர் விரும்புவதைச் செய்வதே மக்களின் நியதி. நீங்கள் இருவரும் மாடு மேய்ப்பவர்கள் என்றாலும், மற்போரில் வல்லவர்கள் என்று அனைவர்க்கும் தெரியும். எனவே வந்து எங்களோடு மல்யுத்தம் செய்யுங்கள் என்றான்.
சிரித்தான் கண்ணன்.
ஓ! மல்லரே! இதென்ன நியாயம்? நாங்கள் சிறுவர்கள். எங்களுக்குத் தக்கவர்களோடுதான் போட்டி போடுவோம்.
சபையில் ஒத்துக்கொள்வார்களா? முறைமையாகுமா? என்றான்
அதைக் கேட்ட சாணூரன், பெரிதாகச் சிரித்தான்.
குவலயாபீடத்தை இப்போது கொன்றாயே! நீ எங்களுடன் போட்டியிடத் தகுதியான ஆள்தான். பயத்தை விட்டு தயங்கமல் சண்டைக்கு வா. நீ என்னோடும், பலராமன் முஷ்டிகனுடனும் போரிடட்டும்.
என்றான்.
கண்ணனும் பலராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment