மதுரா நாயகா.. (8)

அரங்கத்தினுள் செல்ல முயன்ற கண்ணனை மலைபோன்ற யானை வழிமறித்தது. அதைப் பாகன்தான் தூண்டிவிடுகிறான் என்றறிந்த கண்ணன், இடிமுழக்கம் போன்ற குரலில், 

ஏ! மாவுத்தனே! உடனே அப்பால் போ. எங்களுக்கு வழிவிடு.

என்றான்.

அதைக் கண்ட மாவுத்தன் மிகவும் கோபத்துடன், கண்ணனைக் கொல்வதற்காக யானையை ஏவினான். அவனது அங்குசத்தால் குத்துப்பட்ட யானைக்கு மதம் தலைக்கேறியது.

அதைக் கண்ட கண்ணன், பேசிப் பயனில்லை என்றுணர்ந்து, சட்டென்று ஆடையை இறுக்கிக்கொண்டான். அலைந்த குழலை முடிந்து கொண்டான்.

யானை ஓடிவந்து கண்ணனைத் தும்பிக்கையால் பிடிக்க முயன்றது. தேவாதி தேவர்க்கும் அகப்படாத கண்ணனை ஒரு மதம் கொண்ட  யானையால் பிடித்து விட முடியுமா? வெண்ணெய்யைப் போல் நழுவினான் அவன்.

அதன் தும்பிக்கையை ஓங்கி அறைந்தான். ஓடிச்சென்று அதன் கால்களின் நடுவே ஒளிந்துகொண்டான்.

மிகவும் கோபம் கொண்ட குவலயாபீடம் என்ற அந்த மதயானை கண்ணனைத் தேடியது. பின்னர் மோப்ப சக்தியால் அவன் இருக்கும் இடத்தை அறிந்தது.

மீண்டும் தும்பிக்கையால் கண்ணனைப் பிடிக்க முயல, கண்ணன் அதன் பிடியிலிருந்து நழுவி, வெளியே வந்தான். 
பின்னால் சென்று எம்பி அதன் வாலைப் பற்றி, அந்த பலம் கொண்ட யானையை கரகரவென்று பின்னால் இழுத்தான்.

யானை நிலை குலைந்து போனது. அதை இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் இழுத்தான். பின்னர் சக்கரம் சுற்றுவதைப் போல் யானையின் வாலைப் பிடித்துச் சுழற்றினான். 

பின்னர் அதன் எதிரில் ஓடிவந்து நின்றான். தன்னிலை இழந்து தவித்த யானை கண்ணனைப் பிடிக்க தும்பிக்கையை நீட்டியது. அதைப் பிடித்துக்கொண்டு கிடுகிடுவென்று மேலேறி யானையின் மஸ்தகத்தில் ஓங்கி அறைந்தான். இடிவிழுந்ததுபோலிருந்தது யானைக்கு.  வலிதாங்காமல் அலறியது. தீயவனான பாகனிடம் மாட்டிக் கொண்டதால், யானை பகவானை எதிர்க்கவும் துணிந்தது.

கண்ணனைத் தொட முயற்சி செய்தது. இப்போது ஒரு தந்திரம் செய்தான் கண்ணன்.

 திடீரென்று அவன் கிடுகிடுவென்று ஓட அவனைத் துரத்திக்கொண்டு யானையும் வேகமாக ஓடியது. வேண்டுமென்றே கண்ணன் கீழே விழுவதுபோல் பாசாங்கு செய்து குனிந்தான். வேகமாக வந்த யானை கண்ணனைப் பிடிக்கக் குனிந்தபோது நகர்ந்து விட்டான். நிலை குலைந்து போய், தந்தங்கள் பூமியில் குத்திக்கொண்டு தடுமாறி விழுந்தது யானை.

சரி போகட்டும். இது போதும் என்று கண்ணன் உள்ளே செல்ல யத்தனம் செய்தான். ஆனால், மாவுத்தன் கோபம் கொண்டு மீண்டும் யானையைத் தூண்டினான். இதற்கு மேல் பொறுக்கலாகாது என்று கண்ணன் யானயின் தும்பிக்கையைப் பிடித்துக் கீழே தள்ளினான். 

அதைக் காலால் மிதித்துக் கொண்டு அதன் தந்தங்களைப் பிடுங்கினான். அந்த தந்தங்களாலேயே யானையையும், யானைப் பாகர்களையும் குத்திக் கொன்றான். அக்காட்சி காட்டில்,  சிங்கம் விளையாட்டாக யானையைக் கொல்வதுபோல் இருந்தது.

அலறிக்கொண்டு, பகவானைப் பார்த்துக் கொண்டே உயிரைவிட்டது குவலயாபீடம்.

ஆதிமூலமே என்று அபயக்குரல் எழுப்பிய கஜேந்திரனுக்காக வைகுண்டத்திலிருந்து அரக்கப் பறக்க உட்காரக்கூட நேரமின்றி கருடன்மீது நின்றுகொண்டே பறந்து வந்த அதே பகவான், தன்னை எதிர்த்த யானையை விளையாட்டாகவே கொன்றார்.

ஆட்கொண்ட விதம்தான் வேறே தவிர, இரு யானைகளுக்கும் அதே வைகுண்டபதவிதான். எந்த விதத்தில் பகவானை எதிர்கொள்கிறோமோ அதே விதத்தில் வைகுண்டம். அவ்வளவுதான். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37