மதுரா நாயகா..(6)

கண்ணனும் பலராமனும், தோழர்களுடன் மதுராவின் ராஜவீதியில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தனர். தனுர் வேள்வி நடக்கும் இடத்தைப் பற்றி விசாரிக்குமாறு, ஸ்ரீ தாமாவிடம் சொல்ல, அவன் ஒரு வழிப்போக்கனைக் கேட்டுக்கொண்டு வந்தான். அவன் சொன்ன வழியில் சென்றார்கள். 

வேள்வி நடப்பதாகச் சொல்லப்பட்ட பெரிய அரங்கத்தினுள் நுழைந்தனர். அங்கு நடுவில் பெரிய மேடையின் மீது ஒரு வில் வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் யாக குண்டங்கள் இருந்தன. 
அந்த வில் பலவாறு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சுற்றிக் காவலுக்கு பல வீரர்கள் இருந்தனர். ஒரு சிறுவர் கூட்டம் வருவதைக் கண்டு சற்று அலட்சியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

வில்லின் அருகே சென்ற கண்ணனை ஒரு வீரன் தடுக்க, பலராமன் அவனைத் தடுத்தான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கண்ணன் அந்த வில்லைக் இடக்கையால் அலட்சியமாக  எடுத்துவிட்டான்.

பல வீரர்கள் சேர்ந்தாலும் அசைக்கக்கூட முடியாத வில். 

யாகத்திற்கு எடுத்து வரப்பட்ட போதும், ஐம்பது வீரர்கள் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்த வில்.

அலட்சியமாக ஒரு கையால் எடுக்கப்பட்டதும், அந்த வீரர்கள் ஆவென்று வாயைப் பிளந்து ஆச்சர்யமாகப் பார்த்தனர். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அந்த வில்லை நாணேற்றுவதற்காக காலால் மிதித்துக்கொண்டு நாண் கயிற்றை இழுத்தான்.

எத்தனை காலத்து வில்லோ! கண்ணனின் வேகம் தாங்காமல் டமால் என்ற பெரிய இடிபோன்ற சத்தத்துடன் அந்த வில் முறிந்து விழுந்தது.

அந்த சத்தத்தில் ஊரே நடுங்கிற்று. கம்சனின் அரண்மனை வரை அதன் அதிர்வு இருந்தது.

அவ்வளவுதான்! காவல் வீரர்கள் அனைவரும்

 அவனைப் பிடி, விடாதே!

 என்று கத்திக்கொண்டு கையில் ஆயுதங்களுடன் கண்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.

அவர்கள் அனைவருமே அசுரர்கள் என்பதை உணர்ந்த கண்ணன் அண்ணனுடன் சேர்ந்து அவர்கள் அனைவரையும் உடைந்த வில்லாலேயே அடித்துக் கொன்றான்.

யாகசாலை முழுவதும் அசுரவீரர்களின் உடல்கள் இறைந்துகிடந்தன. 

வெளியில் வந்த கண்ணன், மறுபடி வீடுகளையும், மாடமாளிகைகளையும், தோட்டங்களையும் பார்த்துக்கொண்டு  நண்பர்களுடன் சுற்றிவரலானான்.

இச்செயலைக் கண்ட மக்கள் சகோதரர்களின் வீரத்தையும் திறமையையும் கண்டு இவர்கள் கம்சனிடமிருந்து நம்மைக் காக்க வந்த தேவர்களே என்று முடிவு செய்துகொண்டனர்.

சூரியன் மேற்கே மறையத் துவங்க, சிறுவர்கள் அனைவரும் காலையில் வண்டிகளை அவிழ்த்துவிட்ட தோட்டத்திற்கே திரும்ப வந்தனர்.

கண்ணன் மதுராவுக்குக் கிளம்பும்போதே கோபியர்கள் சொல்லிச் சொல்லி அழுதார்கள். 

மதுரா நகரத்துப் பெண்கள் பாக்யசாலிகள். இனி மன்மதன் போன்ற கண்ணனின் அழகைப் பருகப்போகிறவர்கள். மதுராவாசிகள் பேறு படைத்தவர்கள்

 என்றெல்லாம் புலம்பினர். அத்தனையும் உண்மையாயிற்று.

ஒருநாள் ஊரைச் சுற்றி வந்ததற்கே மதுரா நகரத்து மக்கள் கண்ணனின் அழகிலும், பராக்கிரமத்திலும் மயங்கி அவனைக் கொண்டாடத் துவங்கினர்.

உடன் வந்த கோபர்கள் இரவுக்கு பால்சோறு சமைத்துக் கொடுக்க, அதை உண்ட சிறுவர்கள், அந்தத் தோட்டத்தின் புல்வெளியில் சுகமாக உறங்கினர்.

அவ்விரவே அவர்கள் இம்மாதிரி கண்ணனுடன் கதை பேசிக்கொண்டு உறங்கிய கடைசி இரவு.

கண்ணன் ஸ்ரீ தாமாவுடன் அன்றைக்குப் பார்த்த விஷயங்களைக் கதை பேசிக் கொண்டிருந்தான்.
நந்தகோபர் அமைதியாக அவனருகில் படுத்துக்கொண்டு கண்களில் நீர்வழிய கண்ணனின் குரலைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நாளை பொழுது விடிந்தால், இவன் அரச குமாரனாகிவிடுவான். என்னை நினைவில் வைத்திருப்பானா..

 ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் மாடுமேய்க்கும் என்னையா நினைவு வரும்? அப்பா அப்பா என்று ஒரு நாளைக்கு நூறு முறை அழைப்பனே. பகவான் என்பதை பலமுறை உணர்த்தியிருக்கிறான்தான். 
யசோதையின் கையிலிருந்து பச்சிளம்குழந்தையாக நேற்றுதான் வாங்கினாற்போலிருந்தது. அதற்குள் பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன.
காலம் எவ்வளவு வேகமாகச் சுழல்கிறது.

வருணலோகம் அழைத்துப்போனான். இந்திரயாகத்தின்போது  எவ்வளவு அழகாக எல்லார் கேள்விக்கும் பதில் சொல்லும்படியாக சாமர்த்தியமாகப் பேசினான். அதன்பின் வந்த மழையிலிருந்து காக்க மலையைத் தூக்கினானே.

இவன் பகவான், உலகிற்கே சொந்தம். நாம் தனியாக உறவு கொண்டாடுவது நியாயமில்லை என்று உணர்ந்திருந்தாலும், எத்தனை முறை மனத்தினுள்  சொல்லிக்கொண்டாலும், பாழாய்ப்போன மனம் கேட்கமாட்டேன் என்கிறதே.
எனக்கே இப்படி இருக்கிறது. யசோதை இனிவரும் காலத்தை எப்படித் தாங்கப்போகிறாள்?
கண்ணன் இல்லாத வ்ரஜம் எப்படி இருக்குமோ.. நரகம் என்று தனியாக ஒன்று வேண்டாம்போலிருக்கிறதே. 

கண்ணனின் அருகில் படுத்துக்கொண்டிருந்த நந்தகோபரின் மனம் பலவாறு அரற்றிக்கொண்டிருக்க,  கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அவர் மனத்தினுள் நினைத்தது கண்ணனுக்குத் தெரியாமல் போகுமா? கண்ணனின் அழகிய  பட்டுக்கரம் அவரது கழுத்தைச் சுற்றிக்கொண்டது. ஒரு காலைத் தூக்கித் தந்தையின்மீது போட்டுக்கொண்டு, காதருகில் வந்து, 

அப்பா, கவலைப் படக்கூடாது. நான் எப்பவும் உங்க பிள்ளைதான் 

என்று கிசுகிசுத்தான். 
கண்ணீர் வழியும் அவரது கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு உறங்கிப்போனான் கண்ணன். திரை விலகியதுபோல் நந்தரின் துக்கம் மறைய, அவரும், கண்ணனை மெதுவாக முதுகில் தட்டிக் கொடுத்து க் கொண்டு உறங்கலானார். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37