மதுரா நாயகா..(5)

அழகழகான,  உடலுக்குப் பொருத்தமான உடைகளை அணிந்துகொண்டு, பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரு குட்டியானையைப் போல் கம்பீரமாக, பலராமனுடனும், தோழர்களுடனும் பேசிச் சிரித்துக்கொண்டே  மதுராவின் ராஜவீதிகளில் நடந்தான் கண்ணன். 

எதிரில் வந்த சிலருக்கு மதுராவின் மன்னன் கம்சன் என்பது மறந்துபோய், கண்ணன்தான் அரசன் என்பதாகத் தோன்றிவிட்டது. வணக்கம் செலுத்திவிட்டுப் போனார்கள். 

பெண்களின் நிலைமை சொல்லி மாளாது. நேரடியாகப் பார்க்கவும் இயலாமல், வைத்த கண்ணை எடுக்கவும் முடியாமல், ஆங்காங்கு திண்ணைகளிலும், உப்பரிகைகளிலும், மாடங்களிலும், சாளரங்களின் வழியாகவும் கண்களாலேயே கண்ணனைத் தொடர்ந்தார்கள்.

அவர்கள் அனைவரோடும் கண்களாலேயே பேசினான் காந்தக் கண்ணன். 

திடீரென்று அருமையான கஸ்தூரி கமழும் சந்தன வாசனை வீசியது. குனிந்து பார்த்தால், சந்தனக் கிண்ணங்களுடன் ஒருத்தி எதிரில் நின்றாள்.

அழகிய முகம் கொண்டிருந்தாள். ஆனால் கூனியாக இருந்தாள், அவளது உடல் மூன்று கோணல்களாக வளைந்திருந்தது. 

கண்ணன் நறுமணம் வீசும் சந்தனத்தைப் பார்த்ததும், அவளைக் கேட்டான்.

ஓ! பொண்ணே! நீ யாரு? உன் முகம் ரொம்ப அழகா இருக்கு! எனக்கு சந்தனம் தருவியா?

கரும்பு தின்னக் கூலியா? அவள் சொன்னாள்.

நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்களே! நான் சைரேந்த்ரி. என் உடம்பு கோணலா இருக்கறதால எல்லாரும் த்ரிவக்ரை, குப்ஜான்னெல்லாம் சொல்வாங்க. நான் கம்ச ராஜாகிட்ட வேலை செய்யறேன். தினமும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கறது என் வேலை. ஆனா,  உங்களைப் பார்த்ததும்  இந்தச் சந்தனத்துக்கு நீங்கதான் தகுதியானவர்னு தோணுது. 

என்று சொல்லி தட்டோடு அவர்களுக்கு சந்தனத்தை நீட்டினாள். பலராமனும் எல்லாரும் சந்தனத்தை எடுத்துப் பூசிக்கொள்ள, 

நீங்க எடுத்துக்கலையா?

கண்ணன் சிரித்தான். 
சந்தனமா? எடுத்துக்கறேன் அதுக்கு முன்னாடி..

என்றவன், அந்தத் தட்டை வாங்கி பலராமன் கையில் கொடுத்தான். 

அவளது அழகிய முகத்தை இரு விரல்களால் உயர்த்தினான். பாதங்களின் விரல்களை தன் இடக்காலால் அழுத்தி க் கொண்டான்.

சட்டென்று அவளை உயர்த்த, 

ஆஹா..!
என்னே அற்புதம்!

மதுரா நகரத்தில் நட்டநடு ராஜவீதியில்! 

ஊரார் அனைவரும் பார்க்க, சைரேந்த்ரியின் உடல் கோணல்கள் முற்றிலும் நேராகி மிக அழகாக, சராசரி உயரமுள்ள பெண்ணாக மாறினாள். மன்மத மன்மதனான கண்ணனின் தாமரைக் கரங்கள் பட்டதும், அவள் தனியான ஒரு மெய்யொளியுடன் தேவலோக அழகியைப் போல் திகழ்ந்தாள்.

அவளால் என்ன நடந்தது என்று யூகிக்கக்கூட முடியவில்லை. தன் முகத்தைப் பிடித்துத் தூக்கியதும், கண்ணனின் திருமுகத்தை நோக்கியவள்தான். அதிலேயே மூழ்கிவிட்டாள்.

இன்னும் சற்றுநேரம் இருந்தால், அவள் அங்கேயே திருமணம் செய்துகொள்வாள் போலிருந்தது.

கண்ணன் அவளது கவனத்தைக் கலைத்தான்.

சைரேந்த்ரி, இப்ப சந்தனத்தை நீயே பூசி விடறியா?

இதென்ன அனுக்ரஹம்? காதில் தேன் பாய்கிறதே.

 ஒரு பக்கம் வெட்கமாக  இருந்தாலும், வந்த வாய்ப்பை விடலாமா? பலராமனிடருந்து தட்டை வாங்கி கண்ணனின் மஹாலக்ஷ்மி வசிக்கும் திருமார்பிலும், தும்பிக்கை போன்ற கரங்களிலும், கண்ணாடிபோன்ற கன்னங்களிலும் தன் முல்லைப்பூ விரல்களால் சந்தனம் பூசிவிட்டாள்.

மேற்கொண்டு கண்ணன் 
கிளம்ப ஆயத்தமாக, அவள் தடுத்தாள்.

நீங்கதான் என் நாயகர். என்னை விட்டுட்டுப் போகலாமா? வீட்டிற்கு வாங்களேன் என்று கண்ணனின் உத்தரீயத்தின் நுனியைப் பிடித்துக்கொண்டாள்.

இந்தப் பக்கம் அண்ணன், அந்தப் பக்கம் தோழர்கள். கண்ணன் நெளிந்தான். 

நிச்சயமா வரேன் சைரேந்த்ரி. நாங்க எல்லாருமே வரோம். ஆனா, இப்ப முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. இன்னொரு சமயம் கண்டிப்பா வருவேன். எங்களுக்கோ வீடு இல்லை. வழிப்போக்கர்கள்தானே. அன்போட யார் கூப்பிடுவா இப்படி? இவங்க எல்லாரையும் அழைச்சிண்டு  வந்து தங்கறேன்.

அவள், 
சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவீங்கன்னு தெரியும். கண்டிப்பா வரணும் 

என்று சொல்லி வழிவிட, கண்ணன் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு மேலே நடந்தான்.

கூனி பெண்ணான அற்புதச்செய்தி மதுராவில் காட்டுதீ போல் பரவ, இன்னும் ஏராளமான மக்கள் கண்ணன் செல்லும் வழியெல்லாம் இருமருங்கிலும் கூட ஆரம்பித்தனர். மலர், நீர், பழம் ஆகியவற்றைக் கொண்டுவந்து கண்ணனுக்கு வணக்கம் செலுத்தினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37