மதுரா நாயகா.. (4)

அவமதித்த வண்ணானைக் கண்ணன் வைகுண்டம் அனுப்பியதும்,  அழகழகான உடைகளை அணிந்துகொண்டனர் இடைச் சிறுவர் அனைவரும். மீதி உடைகளை அப்படியே விட்டுக் கிளம்பினர். 

ஆனால், அவை அவர்களுக்கேற்ற மாதிரி இல்லை. மிகவும் பெரியதாக இருந்தது. அவற்றைப் போட்டுக்கொண்டால், காலைத் தடுக்கின.  கோமாளிகள் போல் நடக்க இயலவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தான் கண்ணன்.

வழியில் ஒரு தையற்கலைஞர் இருந்தார். அவர் அவர்களனைவரையும் அழைத்து உடைகளைப் பொருத்தமாகத் தைத்துக் கொடுத்தார்.

அவருக்குப் பலவிதமான அனுக்ரஹங்களைச் செய்து, தன் மீது பக்தியையும், இறுதியில் சாரூப்ய முக்தி கிடைக்கும் என்றும் அருளினான்  கண்ணன்.


தொடர்ந்து மேலே செல்ல, சுதாமா என்று பூ வியாபாரி கண்ணனை வணங்கினான். 
கண்ணனுக்கு சந்தனம், பாத்யம், அர்க்யம் முதலியவை கொடுத்து வழிபட்டான். பின்னர் அழகழகான மலர் மாலைகளால் கண்ணனையும், பலராமனையும் அலங்கரித்தான்.

ப்ரபோ! தங்கள் வருகையால் என் இல்லம் புனிதமடைந்தது. என் மூவகைக் (தேவ, ரிஷி, பித்ரு) கடன்களிலிருந்தும் நான் விடுபட்டேன். 
நீங்கள் இருவரும் ப்ரபஞ்சத்தின் மூலகாரணம் என்பதை அறிவேன். உலக நலனுக்காக அவதரித்துள்ளீர்கள். நான் உங்கள் சேவகன். உங்களுக்காக என்ன பணிவிடை செய்யட்டும்‌? என்று வினவினான்.

கண்ணன் மகிழ்ந்து அவனுக்கு வேண்டிய வரங்களை வாரியளித்தான். 
அவன் கேட்ட வரங்கள் என்னென்ன தெரியுமா?
கண்ணன் மீது அசையாத பக்தியும், அவனது அடியார்களின் நட்பும், எல்லா உயிரினத்தும் பரிவும். 

இதை விடச் சிறந்த வரம் உண்டா? மலர் வியாபாரியானதால், உள்ளமும் மலர்ந்திருந்தது அவனுக்கு.

அவனுக்கு வம்சம் முழுவதையும் வாழவைக்கும் செல்வத்தையும், வலிமை, ஆயுள், புகழ், மற்றும் தேஜஸ் ஆகியவற்றையும் கேளாமலே  அளித்தான் கண்ணன்.

ப்ருந்தாவனம் முழுவதும் அன்பின் உருவமாகவே நடமாடிய கண்ணன், மதுராவினுள் கருணையின் உருவாக மாறிவிட்டான் போலும்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37