மதுரா நாயகா.. (3)
கண்ணனைப் பிரிய மனமின்றிச் சென்ற அக்ரூரர், கம்சனிடம் சென்று கண்ணன் மதுரைக்குள் வந்துவிட்ட செய்தியைத் தெரிவித்துவிட்டு வீட்டுக்குப் போனார்.
மாட்டு வண்டிகளில் நந்தகோபரும், சில கோபர்களும், கோபச் சிறுவர்களும் மதுரா வந்தடைந்தனர்.
நிறைய மாட்டு வண்டிகள் வருவதைப் பார்த்து அவர்களை அழைத்துக்கொண்டு வந்தான் பலராமன்.
ஊரைச் சுத்திப் பாக்கலாம் வாங்கடா..
என்று கண்ணன் கிளம்ப, அவன் பின்னால் இடைச் சிறுவர் படை கிளம்பியது.
பத்திரமா இருக்கணும் கண்ணா என்று எச்சரித்துவிட்டு, நந்தகோபர் தன் வீரர்களுடன் நண்பரான வசுதேவரைப் பார்க்கப் போனார்.
மிக அழகான நகரம் மதுரா. பளிங்குக் கற்களாலான உயர்ந்த கோபுரங்கள், நகர வாயில்கள். தங்கத்தாலான பெரும் கதவுகள், நிரம்பி வழியும் தானியக் களஞ்சியங்கள், பெரிய, உயர்ந்த வகைக் குதிரைகளைக் கொண்ட குதிரை லாயங்கள், ஆங்காங்கே உள்கோட்டை மதில்கள், அவற்றைச் சுற்றி அகழிகள், பழத்தோட்டங்கள், பூந்தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், அழகழகான மாளிகைகள், தொழில்வாரியாகப் பணிமனைகள் அமைந்த தெருக்கள், ரத்தினங்கள், பவளம், முத்து, மரகதம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட வீட்டுத் தூண்கள்..
ஜன்னல்களிலும், கோபுரங்களிலும் புறாக்களும், மயில்களும் கூவிக்கொண்டிருந்தன.
கடைவீதிகளில் கிடைக்காத பொருள்களே இல்லை. கண்ணைக் கவரும் பல அழகிய பொருள்கள் இருந்தன.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகிய கோலங்கள் போடப்பட்டு, தீபங்கள் ப்ரகாசித்தன. ராஜவீதியில் கால்வைக்கவே கூசும் அளவிற்கு பளபளவென்றிருந்தது.
வாயில் ஈ நுழைவதுகூடத் தெரியாமல் விழிவிரியப் பார்த்துக்கொண்டு நடந்தார்கள் இடைச் சிறுவர்கள்.
மதுரா நகர மக்களோ, நமது கண்ணனின் அழகை வைத்த கண் வாங்காமல் பருகினார்கள்.
அவர்கள் சென்ற இடமெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று மக்கள் கண்ணனை வேடிக்கை பார்த்தனர். பெண்கள் செய்து கொண்டிருந்த வேலைகளைப் போட்டதுபோட்டபடி ஓடிவந்து உப்பரிகையில் நின்றுகொண்டு கண்ணனைப் பார்வையால் விழுங்கினர்.
கண்ணனைக் காணும் ஆர்வத்தால் ஒரு காதில் தோடு போட்டு க் கொண்டு ம், மேலாடைகளை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டும், வீட்டு வேலைகளை அப்படியே விட்டும், ஓடிவந்த பெண்கள் மேல்மாடிகளில் ஏறி நின்று கண்ணனைக் கண்டனர். ஏற்கனவே வெண்ணெய், தயிர், பால் விற்க வரும் இடைப்பெண்களிடம் கண்ணனின் கதைகளை தினமும் கேட்டு கேட்டு அவனை எப்போது காண்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்தனர்.
மூத்த பெண்கள் வாசலில் வந்து கண்ணனுக்கு ஹாரத்தி எடுத்தனர். சிலர் பூஜை செய்தனர்.
இவன்தான் கண்ணனா?
கம்சனைக் கொல்ல வந்தவனா?
மன்மதன் மாதிரி இருக்கானே. இவனுக்கா பயப்படறார் நம்ம ராஜா?
எவ்ளோ அழகா பிஞ்சு மாதிரி இருக்கு உடம்பு.. இவனா கம்ச ராஜா அனுப்பின ராட்சசர்களைக் கொன்னான்?
எவ்ளோ அழகு பாரேன்..
இவனை தினமும் பாத்துண்டே இருந்த ப்ருந்தாவனப் பெண்கள்ளாம் எவ்ளோ பாக்யசாலி!
யார் என்ன சொன்னாலும் சரி. நான் இவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்.
விதம் விதமான பேச்சுக்கள்.
எதையும் காதில் வாங்காதது போல் ஒரு புன்னகையுடன், அவர்களைப் பார்த்தபடியே மதுராவின் வீதிகளில் நடந்தான் கண்ணன்.
அந்நகரத்து மக்கள் வெகு நாகரீகமாக உடை உடுத்தியிருந்தனர். சாதாரண மக்கள் கூட, நீளமான அங்கி, பட்டாடைகள், விதம் விதமான ஆபரணங்களுடன், தலைப்பாகைகளும், குண்டலங்களும், கங்கணங்களுமாக அழகாக அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.
கண்ணனுடன் வந்த சிறுவர்களோ கிராமவாசிகள். மாடு மேய்ப்பவர்கள். அழுக்கு வேட்டியும், கோமணமுமாக, கைகளில் குச்சியுடன் விளங்கினர்.
நகருக்குள் செல்ல செல்ல நகர மக்களைப் பார்த்து பார்த்து இடைச் சிறுவர்களுக்கு வெட்கம் வந்துவிட்டது.
கண்ணா, அவங்கல்லாம் எப்படி உடை உடுத்திருக்காங்க பார். நாங்கல்லாம் வெறும் கோமணத்தோட வந்திருக்கோம். இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல. எல்லாரும் வேற நம்மளையே பாக்கறாங்க. வெக்கமா இருக்கு கண்ணா. நாம வேணா திரும்பிப் போயிடலாமா என்றான் சுதாமா.
பகவானே கூட இருந்தும், ஆடை அலங்காரங்களைப் பார்க்கிறார்களே என்று சிரித்தான் கண்ணன். இருந்தாலும் நண்பர்களை விடமுடியுமா?
இருடா.. பாக்கலாம்.
என்றான்.
அப்போது ஒரு வண்டியில் வண்ணான் ஒருவன் அழகிய துணிகளை அடுக்கி எடுத்துக்கொண்டு போனான்.
அவனை நிறுத்தினான் கண்ணன்.
ஐயா, எங்களுக்கு இந்தத் துணியெல்லாம் வேணும். கிராமத்திலேர்ந்து வந்திருக்கோம். எங்களுக்குத் தரீங்களா? உங்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும். வேண்டியதைத் தரேன் என்றான்.
தன் நண்பர்களுக்காக இரங்குகிறான் பகவான். அவர்களது பாக்யம்தான் என்ன?
ஆனால், வண்ணானுக்கு பாக்யமில்லை. அவனுக்குக் கோபம் வந்தது.
யாரடா நீங்க? இதெல்லாம் அரசாங்கத் துணிமணி. கிராமத்திலேர்ந்து வந்த கோவணாண்டிகளுக்கு ராஜா போடற துணி கேக்குதோ? காட்டு மேட்டுல ஆடற பயல்களுக்கு கோவணம் போதாதோ? என்று கத்தினான்.
அவனது அகங்காரத்தைக் கண்ட கண்ணன், சட்டென்று ஒரு அறை விட்டான். அவன் தலை தனியாகப் போய் விழ, வண்ணானோடு வந்த மற்ற வண்ணான்கள் துணிமூட்டைகளைக் கீழே போட்டுவிட்டுச் சிதறி ஓடினர்.
கண்ணனும், பலராமனும் நண்பர்களுக்குத் தக்க ஆடைகளை எடுத்துக் கொடுத்து அணிய வைத்துவிட்டு, தாங்களும் அழகிய ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment