மதுரா நாயகா.. (2)

பதினான்கு வருடங்கள் வாழ்ந்த வ்ரஜபூமி. அதை விட்டுப் பிரிவது சுலபமா?

ஆனால், கண்ணன் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

அன்பு செய்வதிலும் கர்மயோகியாகவே இருக்கிறான். அத்தனை பேருடனும் பழகினானே தவிர, எதிர்பார்ப்புகளற்ற தூய்மையான அன்பு அவனுடையது. 

ரதம் செல்ல செல்ல, காடுகள், மரங்கள் அவற்றின் அழகை ரசித்துக்கொண்டே வந்தான். வழியில் சிற்சிறு கிராமங்களைக் கடந்தனர். கிராமத்து மக்கள் ரதத்தைக் கண்டதும் ஓடிவந்து கண்ணன் கண்ணன் என்று விழிவிரிய நோக்கினர். 

சற்று நேரம் முன்புதான் பரமபதநாதனாகக் காட்சி பெற்றதனால், அக்ரூரர் பிரமிப்பிலிருந்து விடுபடவில்லை. 

அண்ணா.. இந்த மரத்தைப் பார்த்தியா? 

இந்த மரம் விருந்தாவனத்தில் எங்க இருக்கும் நியாபகம் இருக்கா? 

இந்தப் பூவைப் பாரேன். விதம் விதமாகத் தான் படைத்த இயற்கைக் காட்சிகளைத் தானே ரசித்து ரசித்து பலராமனுடன் பேசிக்கொண்டு வந்தான் கண்ணன். 

பேசும்போது அவனது அதரங்கள் குவிந்து குவிந்து விரிவதும்,

 காற்றினால் அவனது குழல் கலைந்து நெற்றியில் விழுவதும்,

 அதை, தலையைப் பின்னால் ஆட்டி சரி செய்வதுகொள்வதும்,

 பறக்கும் உத்தரீயத்தை விரலிடுக்கில் பிடித்துக் கொண்டிருக்கும் அழகும்,

மறக்காமல் அவ்வப்போது இடுப்பிலிருக்கும் புல்லாங்குழலைத் தொட்டுப் பார்த்துக் கொள்வதும்..

 பேசும்போது அடிக்கடி  பலராமனைப் பார்த்துச் செய்யும் கண்ணசைவும், புன்முறுவலும்..

அக்ரூரர் வைத்த கண் வாங்காமல் விழுங்குவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதோ கோட்டை வந்துடுச்சே..
இதான் மதுராவா?

என்ற கண்ணனின் குரல் அக்ரூரரைக் கலைத்தது.

அதற்குள்ளாக வந்துவிட்டதா? ஏமாற்றமாயிருந்தது அவருக்கு. இந்தப் பயணம் இன்னும் சற்று நேரம் நீடிக்கலாகாதா என்று ஏங்கினார்.

நிஜம் வேறாயிற்றே. 

ஆமாம் கண்ணா. என்றார்.

அக்ரூரரின் ரதத்தைக் கண்டதும், காவலாளிகள் வணங்கிவிட்டு கோட்டைக் கதவுகளைத் திறந்தனர்.

சிறிது தூரம் ரதத்தில் பயணித்ததும், கண்ணன், 

சித்தப்பா எங்களை இங்கயே விட்டுடுங்க என்றான்.

அக்ரூரர் ஒன்றும் புரியாமல் விழித்தார். 

கண்ணா.. அரண்மனையில் உனக்குத் தங்கும் வசதியெல்லாம் பண்ணிருக்காங்க. அங்க பிடிக்கலன்னா என் வீட்டில் வந்து தங்கேன் கண்ணா.
இங்க இறங்கி என்ன செய்யப்போற?

சித்தப்பா..
பின்னாடி மாட்டு வண்டில என் நண்பர்கள் வராங்க. நான் அவர்களோட சேர்ந்து இங்க எங்கயாவது தங்கிக்கறேன். இதுவரை மதுராக்கு வந்ததில்ல. ஊரைச் சுத்திப் பாத்துட்டு நாளைக்கு தனுர்யாகம் நடக்கற இடத்துக்கு வரேன். நான் மதுராவுக்கு வந்துட்டேன்னு மட்டும் மாமா கிட்ட சொல்லிடுங்க. என்றான்.

என்னதான் சித்தப்பா சித்தப்பா என்று அழைத்து அக்ரூரரைக் கலைத்தாலும், கண்ணன் பகவான் என்பதை அனுபவமாகவே உணர்ந்து விட்டபடியால், அவனது பேச்சை மறுக்க முடியவில்லை.

சரி கண்ணா.. ஆனால், நீ என் வீட்டிற்கு கண்டிப்பா வரணும். 

நிச்சயமா வரேன் சித்தப்பா. அதுவும் என் வீடுதான்.

இதைக் கேட்டதும் சட்டென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. 

ரதத்தை விட்டு இறங்கிய கண்ணனைப் பார்த்து,
பத்திரம் கண்ணா என்று சொல்லிவிட்டு, ரதத்தைச் செலுத்தாமல் பார்த்துக் கொண்டே நின்றார்.

பகவானையே பத்திரம் என்று ஜாக்கிரதைப் படுத்தறேனே என்று மனம் ஒரு புறம் கேட்டாலும், குழந்தையாயிற்றே எங்கு தங்குவானோ என்ற கவலையை அலட்சியம் செய்ய முடியவில்லை.

நீங்க புறப்படுங்க சித்தப்பா..
என்றான் கண்ணன்.

ரதத்தில் அமர்ந்து விழியிலிருந்து மறையும் வரை  கண்ணனைப் பார்த்துக்கொண்டே  இருந்தார் அக்ரூரர்.

கண்ணன் பலராமன் கையைப் பிடித்துக்கொண்டு  மெதுவாகப் பக்கத்திலிருந்த தோட்டத்தினுள் நுழைந்து பின்னால் மாட்டு வண்டிகளில் வரும் நண்பர்களுக்காகக் காத்திருக்கத் துவங்கினான்.

 ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37