மதுரா நாயகா..(18)

குரு புத்ரனைத் தேடி, அவன் கடைசியாக இருந்த இடமான பிரபாஸ க்ஷேத்ரத்திற்கு ரதத்தில் ஏறி வந்தனர் கண்ணனும் பலராமனும்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் நீர். யாரை விசாரிப்பதென்று புரியவில்லை. பன்னிரண்டு வருடங்கள் முன்பு மறைந்தவனை இப்போது யாரிடம் விசாரிக்க முடியும்?

ஸமுத்ரமே சாட்சி.
எனவே, இருவரும் ஒரு முடிவுக்கு வந்தவர்களாக இருவரும் கடற்கரையிலேயே அமர்ந்தனர்.

ஸமுத்ர ராஜனை நோக்கி தியானம் செய்யத் துவங்கினர்.

அவர்கள் அமர்ந்த மறு நிமிடமே ஸமுத்ரராஜனுக்கு உடல் வியர்த்து விட்டது. சென்ற அவதாரத்தில் மூன்று நாள்கள் காத்திருக்க வைத்ததும், அதற்கு பகவான் கோபப்பட்டதும் நினைவு வந்தது போலும்.

கண்ணனை பகவான் என்றுணர்ந்தபடியால்,அவன் தியானம் செய்ய அமர்ந்த அடுத்த நிமிடமே, ஸமுத்ரராஜன் சகல மரியாதைகளுடனும் ஓடி வந்தான்.

கண்ணனையும் பலராமனையும் வணங்கினான்.

கண்ணன், அவரைப் பார்த்து, 
இவ்விடத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்  உங்கள் அலைகளால் விழுங்கப்பட்ட எங்களது குருபுத்ரனைத் திருப்பிக் கொடுங்கள் என்றான்.

ஸமுத்ரராஜனோ, தேவாதிதேவனே! நான் அவனைக் கடத்தவில்லை. இங்கே ஆழ்கடலினுள் சங்கு வடிவத்தில் ஒரு அசுரன் இருக்கிறான். அவன் பெயர் பஞ்சஜனன் என்பதாகும். நீருக்கடியில் சுற்றி சுற்றி வரும் அவன் கரையில் இருப்பவர்களை இழுத்துச் சென்று கொன்றுவிடுவான்.  சிறுவனை அவன்தான்  இழுத்துச் சென்றிருப்பான். நீங்கள் இப்போதே அவனை விசாரியுங்கள் என்றான்.

கண்ணன் உடனே நீருக்குள் பாய்ந்தான். ஆழ்கடலில் நீருக்கடியில் சங்கின் உருவில் சுற்றிக் கொண்டிருந்த பஞ்சஜனனைப் பிடித்து சிறுவன் எங்கே என்று கேட்டான் கண்ணன்.

 அவனோ அவனை எப்போதோ கொன்று தின்றாயிற்று என்று வெகு அலட்சியமாக பதில் சொல்ல, கோபமடைந்த கண்ணன்.
 ஒரே அறையில் அவனைக் கொன்றான் கண்ணன். ஆனால், அவனது வயிற்றில் குழந்தையைக் காணவில்லை. எங்காவது ஒளித்து வைத்திருக்கிறானா என்றும் தேடிவிட்டுக் காணாமல் கரைக்கு வந்தான் கண்ணன்.

வரும்போது பஞ்சஜனனின் உடலில் இருந்த பெரிய சங்கை எடுத்துக் கொண்டு வந்தான். அதுவே பாஞ்சஜன்யம் என்று பகவானுடன் எப்போதும் விளங்கலாயிற்று.

பஞ்சஜனனால் கொல்லப்பட்ட சிறுவனைத் தேடி யமலோகம் சென்றான் கண்ணன்.

யமதர்மராஜனின் பட்டணம் ஸம்யமனி என்பதாகும். மிகவும் அழகான அந்தப் பட்டணத்தின் கோட்டை  வாசலில் நின்றுகொண்டு தன் பாஞ்சஜன்யத்தை ஊதினான் கண்ணன்.

இடிபோல் முழங்கும் சங்கொலி கேட்டு, யமதர்மராஜன் கோட்டை வாசலுக்கு ஓடோடிவந்து கண்ணனை வரவேற்றான். பலநாள்கள் தவமிருந்தாலும் வைகுண்டம் சென்றாலும்  பார்க்க இயலாத அந்த பரவாசுதேவன் தன் வாசல் தேடி வந்து தரிசனம் கொடுத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார் யமதர்மராஜன்.

கண்ணனை முறைப்படி பூஜித்து, வணங்கினான்.

விளையாட்டாக மனித உருவெடுத்த பரம்பொருளே! 
நான் தங்களுக்கு என்ன சேவை செய்யவேண்டும்? என்று கேட்டான்.

கண்ணன், என் குருவின் புதல்வனை அழைத்து வாருங்கள் என்று ஆணையிட, யமதர்மராஜன் அவ்வாறே என்று கூறி, அந்தச் சிறுவனை அழைத்து வந்தான்.

அவனை அழைத்துக்கொண்டு உஜ்ஜையினிக்குக் கிளம்பினான் கண்ணன். 

குருபுத்ரன் இறந்தபோது அவனுக்கு பன்னிரண்டு வயது. அவன் தொலைந்துபோய் பன்னிரண்டு வருடங்களாயின.
இப்போது யமன் தான் கொண்டுபோன  பன்னிரண்டு வயதுச் சிறுவனைக் கண்ணனிடம் ஒப் படை த் திரு ந் தான்.

யமலோகத்திலிருந்து  பூலோகம் திரும்பும் வழியிலேயே, கண்ணன் அவனுக்கு இருபத்து நான்கு வயதுக்குண்டான உடற்கட்டு, அறிவு, அனைத்தையும் கொடுத்ததோடு, குரு தனக்கு போதித்த கலைகள் அனைத்தையும் குருபுத்ரனுக்கு போதித்து, அழைத்துக்கொண்டு வந்து குருவிடம் ஒப்படைத்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37