மதுரா நாயகா.. (25)

எல்லா கோபிகளும் உத்தவனைச் சூழ்ந்து கொண்டனர்.

கண்ணனிடமிருந்து செய்தி கொண்டுவந்திருப்பார் இவர் என்ற எண்ணமே அவர்களுக்கு வெட்கத்தைக் கொடுத்தது. அவரிடம் கண்ணன் எப்படி இருக்கிறான் என்று வாயை விட்டுக் கேட்கவும் முடியவில்லை.
மெதுவாக ஒருத்தி ஆரம்பித்தாள்.
கண்ணன் உங்களை அனுப்பினானா?
உங்களைப் பார்த்தா கண்ணனின் பக்தர் மாதிரி இருக்கு.
அம்மா அப்பாகிட்ட சொல்லசொல்லி விஷயம் சொல்லியனுப்பினானோ?
அதைத் தவிர வேறென்ன இருக்கப்போகுது?
கோகுலத்தில் அவனுக்கு வேறெதுவும் பிடிப்பு இருக்கறதா தெரியல.
வண்டு பூவோட உறவாடற மாதிரி ஒரு சிநேகம்.
சொல்ல சொல்ல ஒவ்வொருத்தியாய் அழத் துவங்க உத்தவர் திகைத்தார்.
நேற்றே கோகுலத்தினுள் வரும்போதே உத்தவன் கவனித்தான்.
கோபியர்கள் கண்ணனின் லீலைகளை அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டிருந்தான். உலக நடைமுறைகளில் ஈடுபாடற்று வாழ்ந்துகொண்டிருந்ததையும் கவனித்தான்.
இப்போது இன்னொரு கோபி, உத்தவனிடம் நேரடியாகப் பேசாமல், அங்கே தோட்டத்தில் பறந்துகொண்டிருந்த வண்டைப் பார்த்துப் பேசலானாள்.
ஏ வண்டே ! நீ வஞ்சகனான கண்ணனோடு உறவு கொண்டாடினியா? அவன் வனமாலைல மதுரா நகரப் பெண்களின் குங்குமம் இருக்கும். நீ அதிலேயே புரண்டு உன் மீசைலயும் குங்குமம் ஒட்டிருக்கு.
மதுரா நகரத்துப் பெண்கள் கிட்டயே அவனை அன்பு செலுத்திக்கச் சொல்லு. இங்க எதுக்கு வந்த? அவன் தூது தானே நீ?
உருவத்திலயும் செயல்லயும் அவனை மாதிரி தானே இருப்ப. அவங்கல்லாம் ரொம்ப நாகரீகமானவங்க. நாங்க கிராமத்துப் பொண்ணுங்க. அப்படி நினைச்சுத்தானே போனான்?
அவன் திருவடியை மஹாலக்ஷ்மி எப்படித்தான் ஆராதனை பண்றாங்களோ?
நாங்கல்லாம் காட்டுவாசிங்க. கண்ணன் இப்ப நகரவாசியான அர்ஜுனனுக்கு நண்பன். அதனால அங்க போய் அவன் புகழைப் பாடு.
அவன் அழகில் மயங்காதவங்க உண்டா? தேவலோகம், பாதாளலோகத்துப் பொண்ணுங்கல்லாம் அவன் அழகில் மயங்கறாங்க. நகரத்துப் பொண்ணுங்கல்லாம் எம்மாத்திரம்?
உன் காலை இந்த பூமியில் வைக்கவேணாம். அழகா பேசி மயக்கி கண்ணன்கிட்ட சேரும்படி சமாதனம் பேசறதெல்லாம் எங்ககிட்ட எடுபடாது. கண்ணனுக்காக உறவுகளையெல்லாம் விட்டுட்டு வந்தோம். அதையெல்லாம் மறந்துட்டு விட்டுட்டுப் போனவன் கூட நட்பு எதுக்கு?
மானைக் கொல்றா மாதிரி குரங்கைக் கொன்னவன். சீதையைக் காதலிக்கறதுக்கு சூர்ப்பனகையை மூக்கறுத்தவன். பலிகிட்ட தானம் வாங்கி அவன் தலைலயே காலை வெச்சவன்.
ஒருதரம் அவன் புகழைக் கேக்கறவங்க இந்த உலகத்தையே வெறுத்து மறந்துடுவாங்க. பிக்ஷுக்களா ஆகிடுவாங்க.
அவன் பேச்சையெல்லாம் நம்பி நாங்க தவிச்சதெல்லாம் போதும்.
மஹாலக்ஷியான ஸ்ரீ யை நெஞ்சில் எப்போதும் வெச்சிருக்கவன்கிட்ட எங்களை மாதிரி பொண்ணுங்களை எப்படி கூட்டிட்டுப் போவீங்க?
ஏ வண்டே! என்ன இருந்தாலும் கண்ணனோட தோழன் நீ. சொல்லு. கண்ணன் மதுரைல இருக்கானா? பெத்தவங்களைப் பத்தியும், எங்களைப் பத்தியும் பேசுவானா? அவனுக்கு இங்க வர மாதிரி எண்ணம் இருக்கா இல்லியா?
இவை பாகவதத்தில் ப்ரமர கீதம் எனப்படும் தொகுப்பிலுள்ள சில விஷயங்கள். வெட்கத்தினால் இன்னொரு ஆணின் முன்னால் கண்ணனை நேரடியாகப் புகழாமல் வஞ்சகமாகப் புகழ்கிறார்கள் கோபிகள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37