மதுரா நாயகா.. (29)

கண்ணன் ஒரு நாள் உத்தவனுடன் வீதியில் வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது குப்ஜையின் வீட்டைக் கடந்தபோது, அவளிடம் இன்னொரு நாள் வருகிறேன் என்று வாக்களித்தது நினைவுக்கு வந்தது.

உத்தவனை அழைத்துக்கொண்டு அவள் வீட்டினுள் சென்றான். கண்ணனின் வரவை தினமும் எதிர்பார்த்திருந்த குப்ஜை, அவனை வரவேற்க எல்லா உபசாரப் பொருள்களையும் தயாராக வைத்திருந்தாள்.
வீட்டை மிக அழகாக அலங்கரித்திருந்தாள். முத்துச்சரங்கள், மேல் விதானங்கள், ஆசனங்கள், நறுமணம் மிகுந்த தூபங்கள், தீபங்கள், பூமாலைகள் ஆகியவற்றால் வீடு மிக‌ அழகாக விளங்கியது.
கண்ணனைக் கண்ட குப்ஜை, பரபரப்புடன் தோழிகளுடன் சென்று, கண்ணனுக்கு ஹாரதி எடுத்து, உபசாரங்கள்‌ செய்து ஆசனம் கொடுத்தாள்.
உத்தவன் மரியாதைக்காக ஆசனத்தைத் தொட்டுவிட்டு, தரையில் அமர்ந்தான். கண்ணன் அவள் அளித்த உயர்ந்த மஞ்சத்தில் அமர்ந்தான்.
பல்வேறு விஷயங்களால் கண்ணனை மகிழ்விக்க முயற்சி செய்தாள் குப்ஜை. ஆத்மாராமனான கண்ணன், அவள் விரும்பிய வண்ணம் அவளுடன் பொழுதைக் கழித்தான்.
சிலநாள்கள் அங்கு தங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கண்ணன்.
அவனைப் பிரிய மனமில்லாத குப்ஜை
உம்மைவிட்டுப் பிரிய இயலாதென்று கூறி மிகவும் வருந்தினாள்.
நீ விரும்பும்போது வருகிறேன். இப்போது வேலைகள்‌ இருக்கின்றன என்று சொல்லி அவளை சமாதானப் படுத்திவிட்டுக் கிளம்பினான்.
பெரும் பாக்யசாலியான அந்தக் கூனி, சிறிதளவு சந்தனத்தை பகவானுக்கு அர்ப்பணித்ததன் பயனாக, முக்தியையே அளிக்கும் ஸர்வ வல்லமை படைத்த பகவானிடம்‌ உலக இன்பத்தை வேண்டினாள்.
அவள் பக்தியை வேண்டவில்லைதான். ஆனால், கண்ணன் அவள் வீட்டில் தங்கிச் சென்றபின், அவளால் வேறு விஷயங்களில் மனத்தைச் செலுத்த இயலுமா என்ன?
கண்ணன் ஒரு கற்பகத்தரு போன்றவன். அவன் எந்த ஒரு வெளிப்பொருளாலும் மகிழ்ச்சி அடைவதில்லை. அவற்றில் மயங்குவதும் இல்லை.
ஆனால், அவனிடம் உலகாயத சுகங்கள் முதல், முக்தி வரை யார் யார் என்னென்ன விருப்பத்துடன் அணுகிறார்களோ, அவற்றை நிறைவேற்றுகிறான். எதை விரும்பினாலும், அதை அளிப்பதோடு, இடையறாது தன்னுடைய நினைவையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறான். எதையேனும் விரும்பிக் கண்ணனிடத்தில் வருபவர்கள், முடிவில் அவனையே எப்போதும் நினைத்துக்கொண்டு ஸாயுஜ்ய பதவியை அடைகின்றனர்.
கண்ணன் அக்ரூரரிடமும்‌ பிறகு வருவதாக வாக்களித்திருந்தான். அவரைக்‌ கொண்டு வேறு சில வேலைகளைச் செய்ய திட்டமிட்டிருந்தான் கண்ணன். எனவே, பலராமனையும், உத்தவனையும் அழைத்துக்கொண்டு அக்ரூரர் வீட்டிற்குச் சென்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37