மதுரா நாயகா.. (35)
தங்களுக்கு ஒரு சிறிய கீறல் கூட இல்லாமல், பகவான் கிருஷ்ணனும், பலராமனும் எதிரிப் படையை அழித்துவிட்டு நாட்டிற்குள் வந்ததைக் கண்ணுற்ற மதுரா மக்கள் மிகுந்த ஆனந்தம் கொண்டனர்.
வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நகரவீதிகள் நீர் தெளிக்கப்பட்டுக் கோலங்களாலும், கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன. வேதகோஷங்கள் எழுந்தன. வீணை, ம்ருதங்கம், சங்கு, துந்துபி, பேரி, டமாரம் ஆகியவை முழங்கப்பெற்றன.
மலர்ந்த கண்களால் கண்ணனை நோக்கி, பெண்கள் அக்ஷதை, மலர்கள், தயிர் கலந்த நெற்பொறி ஆகியவற்றை வாரியிறைத்தனர்.
போர்க்களத்தில் எதிரி வீரர்கள் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கொண்டுவந்து கண்ணன் உக்ரஸேனரிடம் ஸம்ர்ப்பித்தான்.
கண்ணனால் விடுவிக்கப்பட்ட ஜராஸந்தன், மிகவும் வெட்கமடைந்து தவம் செய்யக் கிளம்பினான். அவனை சிசுபாலன், முதலான அரசர்கள் வழியில் தடுத்தனர்.
யது வம்ச வீரர்களால் உன்னைப் போன்ற வீரனை வெற்றி கொள்ள இயலுமா? இது ஏதோ அவர்களுக்கான நல்ல காலம். வினைப்பயனால் ஜெயித்து விட்டார்கள். உண்மையில் அவர்கள் உன்னை விட வீரம் படைத்தவர்களா என்ன? நாட்டிற்குப் போ. சிறிது காலம் கழித்து மீண்டும் படை திரட்டி வந்து யாதவர்களை அழித்துவிடலாம் என்றதும், ஜராஸந்தன் நொந்துபோன மனத்துடன் மகதம் சென்றான்.
பின்னர், சிலகாலம் கழித்து மீண்டும் படையைத் திரட்டிக்கொண்டு மதுராவை முற்றுகையிட்டான்.
அம்முறையும் கண்ணனும் பலராமனும், வீரர்களை முற்றிலுமாக அழித்து, அவனை மட்டும் உயிரோடு விட்டனர்.
இவ்வாறு ஒரு முறை, இரண்டு முறை அல்ல. பதினேழு முறைகள், இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையைத் திரட்டிக்கொண்டு ஜராஸந்தன் போருக்கு வந்தான். ஒவ்வொரு முறையும் படுதோல்வி அடைந்தான். தான் மட்டும் தனியொருவனாக நாடு திரும்பினான். இருப்பினும் அவன் அசரவேயில்லை.
பதினெட்டாவது முறை ஜராஸந்தன் படையுடன் கிளம்பியபோது, நடுவில் நாரதரால் அனுப்பப்பட்ட காலயவனன் என்ற வீரன் மூன்று கோடி மிலேச்சர்களுடன் போருக்கு வந்தான்.
ஜராஸந்தனின் படைகளும் மதுராவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அறிந்த கண்ணன், வெகுவாக யோசிக்கலானான்.
காலயவனனுடன் போரிடத் துவங்கியபின், ஜராஸந்தன் வந்தால், சமாளிப்பது கடினம். அவனும் ஓயாமல் சண்டைக்கு வருவதால், மதுரா மக்கள் பயந்துபோயிருக்கின்றனர்.
எனவே காலயவனனுடன் போரைத் துவங்கும் முன் மதுரா மக்களை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment