மதுரா நாயகா.. (34)
கண்ணனின் தேரோட்டி தாருகன். கோட்டையின் வாசலைத் தேர் அடைந்ததும், கண்ணன் தன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கை எடுத்து இடிபோல் முழக்கினான். சங்கொலி கேட்டு எதிரிப் படையினரின் ஹ்ருதயங்கள் நடுங்கின.
மகத அரசனான ஜராஸந்தன், கண்ணனைப் பார்த்துக் கூறினான்.
இவ்வளவு நாள்களாக இடைச்சேரியில் மறைந்து வாழ்ந்தவன் நீ. என் மருமகனைக் கொன்ற மடையனே! சிறுவனான உன்னுடன் எப்படிப் போர் புரிவேன்? வெட்கக்கேடு. உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். தப்பித்து ஓடிவிடு
ஹே! பலராமா! இங்கேயே உடல் சிதைந்து விண்ணுலகம் போக ஆசையெனில் போரிட வா என்றான்.
கண்ணன் சிரித்தான். சூரர்கள் தற்பெருமை பேசமாட்டார்கள். நீ சாவை நோக்கி வந்திருக்கிறாய். போர் துவங்கட்டும் என்றான்.
ஜராஸந்தன் தன் படைக்கு ஆணையிட, அவனது படைகள், சூரியனை மேகம் சூழ்வதுபோல் கண்ணனையும் பலராமனையும் சூழ்ந்தன.
கண்ணன் மற்றும் பலராமனின் தேர்கள் கருடன் மற்றும் பனைமரம் பொறித்த கொடிகள் உடையவை. கோபுரங்களிலும், கோட்டையின் மீதும் ஏறி அமர்ந்து போரைக் காணவந்த மக்களும், மதுரா நகரப் பெண்களும், பெரும் சேனையின் நடுவில் தேர்களைக் காணாமல் கலங்கினர்.
உடனே, கண்ணன் தன் சார்ங்கம் என்னும் வில்லை நாணேற்றி டங்காரம் எழுப்பினான்.
தீவட்டியின் வட்டம்போல் வில்லை வளைத்து, கூரிய பாணங்களால் தன்னைச் சூழ்ந்த அனைத்துப் படைகளையும் சுழன்று சுழன்று அடித்தான்.
மத்தகம் பிளக்கப்பட்டு யானைகள் வீழ்ந்தன. கழுத்தறுபட்டு குதிரைகளும், வீரர்களும் மாய்ந்தனர். தேர்களும் தேர்க்கொடிகளும் உடைந்தன. பல வீரர்கள் கை கால்களை இழந்தனர்.
குருதியாறு ஓடியது. ஆங்காங்கே உடல்கள் திட்டு திட்டாய் தீவுகள் போல் குவிந்திருந்தன.
பெருவலி கொண்ட பலராமன் உலக்கையால் பகைவரின் சேனைக்குப் பெரிய சேதம் விளைவித்தான்.
கடல் போன்ற மகத சேனை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. விளையாட்டாகவே இக்காரியத்தைச் செய்தனர் கண்ணனும், பலராமனும்.
அனைத்தையும் இழந்து உயிர் மட்டும் மிச்சமான நிலையிலிருந்த ஜராஸந்தனை பலராமன் பிடித்து வருணபாசத்தால் கட்டத் துவங்கினான்.
ஜராஸந்தனை வைத்துக்கொண்டு இன்னும் பல அசுரர்களை அழிக்க வேண்டியிருப்பதாலும், பூபாரத்தைக் குறைக்கவேண்டும் என்பதாலும், கண்ணன் அவனைத் தடுத்தான்.
அண்ணா! இவனை விட்டு விடுங்கள். நிராயுதபாணியான இவன் போகட்டும். இவனைக் கட்டவேண்டாம். என்றான்.
கண்ணனின் பேச்சைக் கேட்டு பலராமன் ஜராஸந்தனை உயிரோடு விட்டுவிட, அவன் பெருத்த அவமானத்துடன் திரும்பிச் சென்றான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment