மதுரா நாயகா.. (15)

கண்ணனுக்கும் பலராமனுக்கும் உபநயனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏற்கனவே தன்னொளி பெற்றுத் திகழும் இருவரும், இப்போது சூரியனுக்குக் கைகால்கள் முளைத்ததைப் போல் விளங்கினர்.

அகில கலாதி குரு: என்னும்படியாக, கண்ணன், குழந்தைப் பருவத்திலேயே ஒரு இடத்தில் மறைந்து இன்னொரு இடத்தில் தோன்றுதல், உருவத்தைப் பெரியவனாக்குதல், சின்னஞ்சிறு உருவம் கொள்ளுதல், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி கொடுத்தல், தன்னை கனமாகவும் இலகுவாகவும் ஆக்கிக்கொள்ளுதல், போன்ற  அஷ்டமா சித்திகளை வெளிப்படுத்தினான். மிகச்சிறந்த இசைக்கலைஞன், எதைப் பார்க்கிறானோ, அதை அப்படியே செய்யக்கூடியவன், மிக அழகாக நாட்டியமாடக்கூடியவன். தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பவன், இப்படியாக அனைத்து கலைகளையும் மிக நன்றாக  அறிந்திருந்தான்.

இருப்பினும் உலக வழக்கை ஒட்டி, அவனை குருகுலம் அனுப்பி பாடங்களைப் பயிற்றுவிக்க விரும்பினார் வசுதேவர்.

கர்காச்சார்யர் பகவான் கண்ணனுக்கு குருவாக இருக்கத் தகுந்தவர் ஸ்ரீ சாந்தீபனி என்று அறிந்து அவரது பாடசாலைக்குக் குழந்தைகளை அனுப்பும்படி வசுதேவரிடம் கூறினார்.

சாந்தீபனியின் ஆச்ரமம் அவந்தி நாட்டில், இருந்தது. அது தற்போதைய உஜ்ஜயினி ஆகும். இன்றும் கண்ணன் படித்த பாடசாலையை தரிசனம் செய்ய இயலும்.

வெகுநாள்கள் கழித்து மீண்டு வந்த குழந்தைகளை குருகுலவாசத்திற்காகப் பிரிவது பெற்றோர்க்கு மிகவும் கஷ்டம்தான். எனினும், குழந்தைகளின் நன்மையை எண்ணிப் பொறுத்துக்கொண்டு அனுப்பிவைத்தனர்.

என்ன தவம் செய்தாரோ சாந்தீபனி மஹரிஷி! பகவானுக்கே குருவாகும் பேறு பெற்றார்.

அவரிடம் சென்று குழந்தைகள் வணங்கியதும், பகவானின் அழகில் மயங்கினார் சாந்தீபனி. தன் பேற்றை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தார்.

 கருணையே உருவாக இருந்த அவர்,  தெய்வக் குழந்தைகளை மற்ற குழந்தைகளைப் போல் நடத்தினார்.

 இல்லையில்லை.

 தன் பாடசாலையில் இருந்த எல்லாக் குழந்தைகளையுமே தெய்வக் குழந்தைகளாகவே நடத்தினார் என்று தான் சொல்லவேண்டும். 

பெற்றோரையும் தங்கள் வீட்டையும், மறந்து அனைத்து குழந்தைகளுமே குருவையும் குருமாதாவையும் பெற்றோராக நினைக்கும் அளவிற்கு அன்பைப் பொழிந்து பாடங்களை அவர்களது புத்தியில் புகுத்துவார்.

 அதனால்தான் தன் குருவாக கண்ணன் அவரைத் தேர்ந்தெடுத்தான் போலும். 

குரு சொல்லும் பாடங்களைக் குழந்தைகள் இருவரும் அவர் ஒரு முறை சொல்லும்போதே கற்றுத் தேர்ந்தனர். 

அதனால், 64 நாள்களிலேயே 64 கலைகளிலும் வல்லுநர்களாயினர்.

இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். கிருஷ்ணனும் பலராமனும் பகவத் அவதாரங்கள். எனவே ஆய கலைகள் அனைத்தையும் வெகு சீக்கிரம் கற்றனர். 

ஆனால், 64 கலைகளையும் அவ்வளவு சீக்கிரமாக, குழந்தைகளின் வேகத்திற்கேற்ப நன்முறையில் போதிக்க அங்கே 64 ஆசிரியர்கள் இல்லை. ஒரே ஒரு ஆசிரியர்தான் இருந்தார். 

பல்வேறு துறைகளில் வல்லுநர்களை உருவாக்கும் பெரிய பல்கலைக் கழகங்களில், அததற்கென்று தனித்தனித்துறைகள், விரிவுரையாளர்களும் வல்லுநர்களும்  இருப்பார்கள். ஒரு துறையில் மேம்பட்டவர்க்கு இன்னொரு துறையின் அடிப்படை கூடத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், அனைத்து கலைகளையும் போதிக்கும் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாக சாந்தீபனி ஒருவரே விளங்கினார்.

உலக வித்தைகள், கலைகள் முதல் நான்கு வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள், அஸ்திர சஸ்திர வித்யைகள், காந்தர்வ வேதம், ஜ்யோதிஷம், ப்ரும்ம வித்யை வரை அனைத்தையும் அவரே குழந்தைகளுக்குக் கற்பித்தார்.

குருவின் நிழலில் சீராடுவது ஒரு தனி சுகம். அதை அனுபவிக்கவே சிலகாலமாவது குருகுலத்தில் வசிக்க கண்ணன் ஆசைப்பட்டான் போலும்.

குருவுக்கு இருவரும் எல்லாவிதமான கைங்கர்யங்களையும் செய்தனர்.

பாடம் கற்பதோடு மட்டுமின்றி‌ஆசிரம வேலைகள், குருவின் பூஜைகளுக்கும் வேள்விகளுக்கும் வேண்டியவற்றை ஏற்பாடு செய்தல், இரவில் அவருக்குப் பாத சேவை செய்தல் போன்ற அனைத்து சேவைகளையும் ஆசையாகவும் ச்ரத்தையாகவும் செய்தனர் பலராமனும், கண்ணனும்.

பகவான் என்றாலும்,  அவன் குருசேவை செய்ய விரும்புவதாலும், உலக வழக்கை ஒட்டியும்,  அதை அனுமதித்துவிட்டு  அவனது மலர்ந்த முகத்தைப் பருகுவார் குருநாதர்.

நன்றாகத் தெரிந்த போதிலும், ஒருநாளும் இருவரையும் பகவானாக நடத்தியதில்லை அவர்.

ப்ரும்மஞானியான சாந்தீபனி அனைத்துக் குழந்தைகளிலுமே கண்ணனையே காண்பவர். அதனாலும், அன்பின் மிகுதியால்  பெற்ற தந்தையினும் மேலாகப் பார்த்துக் கொண்டார்.

காலம் வெகு வேகமாக உருண்டோடியது. 64 நாள்கள் 64 நிமிடங்களாகக் கடந்தன. 
அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சியுற்ற இரு குழந்தைகளையும் அழைத்து, உங்கள் பாடம் முடிந்துவிட்டது. நீங்கள் வீட்டுக்குத் திரும்பலாம் என்று கூறினார் குருநாதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37