மதுரா நாயகா.. (14)

நந்தன் கோகுலம் திரும்பும் சமயம் வசுதேவரைக் காணச் சென்றார்.

தன் குழந்தைகளையும், மனைவியான ரோஹிணியையும்  எதிரிகளிடமிருந்து பாதுகாத்து, 14 வருடங்கள்  பத்திரமாக வளர்த்து, அன்பைப் பொழிந்து பார்த்துக்கொண்டு, மீண்டும் தன்னிடமே ஒப்படைத்த  நந்தனுக்கு வசுதேவரால் என்ன கைம்மாறு செய்து விட முடியும்?

 தாய்வீட்டைவிடவும் ஒரு படி மேலாக, சகோதரி போல் மனைவியைக் காப்பாற்றி அவளுக்குப் பேறு காலம் பார்த்து, யார் செய்வார்கள் இவ்வளவும்?

தன் நண்பரான நந்தனை ஆரத் தழுவிக்கொண்டார் வசுதேவர்.

அவருக்கும் யசோதைக்கும் நிறைய ஆடைகளையும் அணிகலன்களையும், பாத்திரங்களையும் பரிசளித்தார்.

உடன் வந்த கோபர்களுக்கும் நிறைய பரிசுப்பொருள்களை வழங்கினார்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம்  மதுராவிற்கு வரவேண்டும் என்று நந்தனை அன்போடு வேண்டிக்கொண்டு பிரியாவிடை கொடுத்தார். கண்களில் கண்ணீரோடு குழந்தைகளைத் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே நந்தன் கிளம்பினார்.

 வசுதேவர், கண்ணன் பிறந்தபோது நிறைய  பசுக்களை தானம் செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். பின்னர் கம்சன் அவரைச் சிறையிலிருந்து விடுவித்தபோது தான் சங்கல்பம் செய்துகொண்ட கோதானங்களைச் செய்ய முற்பட்டார். ஆனால், கம்சன் அவர் தானம் செய்ய அழைத்துவந்த பசுக்களைப் பறித்துக்கொண்டான்.

இப்போது வசுதேவர் அவை அனைத்தையும் நினைவுபடுத்தி எல்லா தானங்களையும் செய்தார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டு பொழுதைக் கழிக்கலாம்தான்.

என்னதான் பகவான் என்றாலும், உலக நடைமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு க்ஷத்ரிய முறைப்படி உபநயனம் செய்விக்க எண்ணினார்.

தேவாதிதேவனுக்கு உபநயனம். உபநயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல். எதன் அருகில்? இறையின் அருகில்.. ஞானத்தின் அருகில்..

உபநயனம் செய்வித்த பின்பே ஒரு குழந்தைக்கு வித்யாப்யாசம் துவங்கும். பாடங்களும், மந்திரங்களும் கற்று அறிவுக்கண் திறக்கப்பட்டு, பின் அவற்றை நடைமுறையில் நிறுத்தி ப்ரும்மஞானத்தைப் பெறுவதே வாழ்வின் குறிக்கோள்.

இங்கே இறைவனுக்கே உபநயனம் செய்விக்கும் பேறு பெற்றார் வசுதேவர்.

வாமனாவதாரத்தில் கச்யபராக இருந்து பகவானுக்கு உபநயனம் செய்வித்தார். இப்போது மீண்டும் வாய்ப்பு. நழுவ விடலாமா?

அப்போதெல்லாம் ஒரு குழந்தை. இப்போது பகவானே அம்சாவதாரமாக பலராமனாகவும், பூர்ணகலாவதாரமாக கண்ணனாகவும் வந்திருக்கிறானே. இரண்டு குழந்தைகளுக்கு உபநயனம் செய்யக்‌ கிடைத்து அவருக்கு.

குலகுருவான கர்காச்சார்யாரைக் கலந்தாலோசித்தார்.

கண்ணன் நந்தன் வீட்டில் சிறு குழந்தையாக இருந்தபோது அவனுக்குப் பெயர் வைக்கும் சடங்கை நிகழ்த்திவிட்டு வரும்படி கர்கரைத்தான்  வசுதேவர் அனுப்பினார். 

கர்காச்சார்யாருக்கு இப்போது அடுத்த பேறு. ப்ரும்மத்திற்கே  ப்ரும்மோபதேசம் செய்யப்போகிறார்.

மனோ வேகத்தில் வேலைகள் நடந்தன. ஊரே விழாக்கோலம் பூண்டது.

முன் நெற்றியில் வந்து வந்து விழும் அலையலையான  அழகிய குழலை மழித்து, கண்ணனுக்கும் பலராமனுக்கும் உச்சிக்குடுமி வைக்கப்பட்டது. 

முதலில்  என்னவோபோல் இருந்தாலும் குழந்தைகளின் அழகு சொல்லி மாளாது. ஏற்கனவே கண்ணனுக்கு காதுவரை நீண்ட, நீளமான தாமரைக்கண்கள். இப்போது மொட்டைத்தலையுடன், விழிகள் கருணைமழை பொழிய ஏதுவாக இன்னும் பெரியதாகத் தெரிந்தன. அழகிய கஸ்தூரி திலகம். காதுகளில் குண்டலங்கள், முத்து மாலைகள். நீருண்ட மேகம் போல் மேனி. 

கண்ணனின் அழகில் மயங்கி மயங்கி அந்தணர்களுக்கும் கர்காச்சார்யாருக்கும்  அவ்வப்போது மந்திரங்கள் மறந்துபோக, அவற்றைக் கண்ணனே நினைவுபடுத்தி எடுத்துக்கொடுக்க, மிக விமரிசையாக இரு குழந்தைகளுக்கும் உபநயனம் நடந்தேறியது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37