மதுரா நாயகா.. (12)

பிறந்தவுடன் தாய் தந்தையரை விட்டுப் பிரியக் காரணமானவனை, அந்தணர்களையும், ஸாதுக்களையும்  பலவாறு துன்புறுத்தி நாடு கடத்தியவனை, தன்னைக் கொல்லப் பல முயற்சிகள் எடுத்து, அனைத்திலும் தோல்வியுற்றவனை, கணநேரம் கூட விடாமல் பயத்தினால் இடையறாது தன்னை நினைத்துக்கொண்டே இருந்தவனை,  கம்சனை, கண்ணன் கொன்றுவிட்டான். 

அவனது மனைவியர் வந்து அழுது புலம்பியதும், அவர்களைச் சமாதானம் செய்துவிட்டு, கம்சன் மற்றும் அவனது சகோதரர்களின் இறுதிக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, செய்துவிட்டு?
அதன் பின்னர்..

ஓடினார்கள் கண்ணனும் பலராமனும். 

எங்கே? 
வேறெங்கே? 
பெற்றோரை நோக்கித்தான்.

பசுவைப் பிரிந்த கன்று, தூரத்தில் தாய்ப்பசுவைக் கண்டதும் ஓடுவதைப் போல, துள்ளிக்கொண்டு ஓடினர்.

கருங்கல்லினாலான சிறைச்சாலை. அடுக்கடுக்காய்ப் பல நிலைக் காவல்கள். அவற்றைத் தாண்டி பலத்த காவல் போடப்பட்டிருந்த சிறைச் சாலையில் கடைசி உள்ளறை. 

அனைத்தையும் கடந்து ஓடினர். இங்கேயா அம்மா அப்பா இருக்காங்க? கண்ணனின் மனம் கசிந்தது.

பலராமனுக்கும் அழுகை வந்தது.

கம்சன் இறந்தான் என்ற செய்தி அப்போதுதான் சிறையை எட்டியிருந்தது போலும். அனைவரும் திகைப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதோ.. இங்கதான்..
உள்ளே நுழைந்தனர்.

கண்ணனைக் கண்டதும் உட்கார்ந்திருந்த தேவகி சட்டென்று எழுந்து நின்றாள்.

வசுதேவர் கண்ணனை நோக்கி அடியெடுத்து வைத்தவர், இவர்  பகவானாச்சே என்று நினைத்தார்.

  அதற்கு மேல் நகராமல் அப்படியே நின்றார். உண்மையில் தேவகிக்கும் முதன் முதலில் குழந்தையைப் பார்த்த பூரிப்பு இருப்பினும், பகவான் என்றே தயங்கினாள்.

 பெற்றோரை முதன் முதலில் கண்ட பலராமனும் கண்ணனும் அப்படியே நின்றனர். அவ்வறையில் நான்கு சிலைகள் போல் இருந்தனர் பெற்றோரும் குழந்தைகளும். 

பின்னர் சுதாரித்துக்கொண்ட  கண்ணன், பலராமன் கையைப் பிடித்துக்கொண்டு ஓடிச்சென்று தந்தையின் காலில் விழுந்தான்.
அக்கணமே அவர்களுக்கு கண்ணனின்  மாயையினால்,  பகவான் என்ற எண்ணம் போய், தங்கள் குழந்தை என்ற எண்ணம் வந்தது. 

 காலில் விழுந்த குழந்தைகளைத் தூக்கக்கூடத் தோன்றாமல் சிலையாய் நின்ற வசுதேவரின் அருகில்‌ தேவகி ஓடிவந்து குழந்தைகளை எழுப்பினாள்.

மாற்றி மாற்றி ஆலிங்கனம் செய்துகொண்டனர். அவர்கள் முகத்தில் எவ்வளவு கண்ணீர் பெருகியதோ.. 
எவ்வளவு முத்தங்கள் பரிமாறப்பட்டனவோ..
அம்மா அப்பா என்று வாயார எத்தனை முறை அழைத்தார்களோ..
 பகவானுக்கே வெளிச்சம்.

அழுக்கான கிழிந்த உடைகளில், பரட்டைத் தலையுடன், கைகால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெற்றோரைக் கண்டதும், கண்ணன் தன்னைத்தானே நொந்துகொண்டான்.
சங்கிலிகளை விலக்கினான்.

எல்லாம் என்னாலதான். எனக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ ‌கஷ்டப்பட்டிருக்கீங்க.

ஒரு குழந்தையால அம்மா அப்பாக்கு கொடுக்கமுடிஞ்சது மழலையின் சந்தோஷம். குழந்தை விளையாடறது, நடக்கறது, அதெல்லாம் பெத்தவங்களுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?  அதைக்கூட நான்  உங்களுக்குத் தரல.

பெத்தவங்களுக்கு நூறு வருஷம் பணிவிடை செய்தாலும் போதாது. 

வாய்ப்பும் திறமையும் இருக்கறவன், தன்னால முடிஞ்சபோதும், சரீரத்தாலயும், செல்வத்தாலயும்  பெத்தவங்களைப் பாத்துக்கலன்னா தன் மாமிசத்தைத் தானே சாப்பிடவேண்டி வரும்.

வயசான அப்பா அம்மா, கற்புள்ள மனைவி, குழந்தை, குரு, அந்தணன் இவங்களையெல்லாம் வசதியிருந்தும் காப்பாத்தாதவன் பிணத்துக்கு சமம்.

இவ்ளோ நாள் எங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்ல. வேற இடத்தில் கம்சனுக்கு பயந்து இருந்ததாலயும், குழந்தைகளா இருந்ததாலயும், வேற ஒருத்தரோட பாதுகாப்பு வளையத்துக்குள்ள இருந்ததாலயும் உங்களை எங்களால பார்க்க முடியல. அதுக்காக எங்களை மன்னிச்சுடுங்க. இனி உங்களை விட்டு எங்கயும் போகமாட்டோம்.

கேவல்களுக்கு நடுவே, அழுத கண்களைத் துடைத்தபடி, கண்ணன் பேசிய பேச்சுக்குக் கல்லும் கரையும்.
பெற்றோர் நெகிழ்ந்துபோனார்கள்.

வசுதேவருக்கும் தேவகிக்கும், பகவான் என்ற எண்ணம் அறவே நீங்கியது. அன்புக்கு ஏங்கும் கண்ணனின் செயலே அது. 

குழந்தைகள் இருவரையும் மடியில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல், அவர்களது கமல முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
அங்கே மொழியின் அவசியம்தான் என்ன? 

 எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ..

வெகுநேரம் கழித்து கண்ணன் அவர்களை அரண்மனைக்கு அழைத்து வந்தான். சிறையிலிருந்த உக்ரசேனரையும் விடுவிக்க உத்தரவிட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37