மதுரா நாயகா.. (7)

கம்சனின் நிலை என்ன? 
கண்ணன் மதுரா வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதிலிருந்து பைத்தியம்போலாகிவிட்டான்.

எங்கு நோக்கினாலும், எதைப் பார்த்தாலும், கண்ணன் முகமே.

தட்டில் உணவைப் பார்த்தால் கண்ணன்.
எப்படி உண்பான்?

நீர் குடிக்கக் குவளையை எடுத்தால் அதில் கண்ணன் முகம்.
கொட்டிவிட்டான்.

திரும்பினால் பஞ்சு மெத்தையில் சிரிக்கிறான். கத்தியை எடுத்து மெத்தையைக் கிழித்ததுதான் மிச்சம்.

திரைச்சீலை அசைந்தால் கண்ணனோ என்று ஓடிப் போய்ப் பார்த்தான்.

விளக்கொளியில் கண்ணன் முகம். விளக்கை அணைத்தால், இருளில் கண்ணன் எங்கு ஒளிந்திருப்பானோ என்று பயம்.

கிடைக்குமா?
யோகியர்க்கும் கிட்டாத இந்நிலை கம்சனுக்கு பயத்தால் சித்தித்தது. 

வில்லுடைந்த சத்தம் கேட்டதிலிருந்து, கம்சனின் உடலில் எப்போதுமே ஒரு நடுக்கம் வந்துவிட்டது.
வீரர்கள் வந்து சொன்னதும், இன்னும் பயம் அதிகமாயிற்று.

தன் பிம்பத்தைக் கண்ணாடியிலோ நீரிலோ தலையின்றிக் கண்டான்.
தன் நிழலில் துவாரங்கள் இருப்பதாகக் கண்டான்.
காதைப் பொத்திக்கொண்டால் இதயத்துடிப்பு கேட்கவில்லை. மண்ணில் 
நடந்தால் அவனது காலடிகளைக் காணவில்லை.

தப்பித்தவறி உட்கார்ந்து கொண்டே சில நிமிடங்கள் கண்ணயர்ந்தால் பிணத்தைத் தழுவிக்கொண்டிருப்பதுபோலும், விஷம் உண்பது போலவும், எண்ணெய் தேய்த்துக்கொண்டு சிவப்பு அரளி மாலையணிந்து ஆடையின்றி தெற்கே செல்வது போலவும் கெட்ட கனவுகள் வந்தன.
கண்ணை மூடி உறங்கக்கூட முடியாமல் தவித்தான்.

காலையில் சூரியன் கிழக்கே எழுந்தான். அவன் எழும் முன்னரே வரவேற்கும் விதமாக  கண்ணன் எழுந்து தயாராகி நின்றான்.

 இடையர்கள் அனைவரும்  கண்ணன் தயாராகி நிற்பதைப் பார்த்ததும் தாங்களும் தாயாரானார்கள். அவர்கள்  பொதுவாகவே அதிகாலை எழும் பழக்கமுள்ளவர்கள்.

அங்கே மல்லர் அரங்கம் தயாராகிக் கொண்டிருந்தது.

நன்கு அலங்கரிக்கப்பட்டு, எக்காளம், பேரி, முதலிய வாத்தியங்கள் முழங்கும் சத்தம் காதைப் பிளந்தது.

பொது மக்கள் கூடி, அவர்களுக்கான இடங்களில் அமர்ந்தனர்.

மலைபோன்ற உடலுடைய மல்லர்கள், நன்கு அலங்கரித்துக்கொண்டு  தத்தம் குருமார்களுடன் செருக்காக  அரங்கினுள் நுழைந்தனர்.

கம்சன், மந்திரி பிரதானிகளுடன் வந்து தன் அரியாசனத்தில் அமர்ந்தான்.

சாணூரன், முஷ்டிகன், கூடன், சலன், தோசலன் ஆகிய மல்லர்கள் வாத்திய முழக்கம் கேட்டு அங்கு வந்து அமர்ந்தனர்.

அனைவரும் உற்சாகத்துடன் இருக்க, கம்சன் மனம் கலங்கி, கண்கள் சிவந்து, முகம் வாடியிருந்தான்.

மல்லர்களைப் பார்த்ததும், இவர்கள் எப்படியும் கண்ணனைக் கொன்று விடுவார்கள் என்று தோன்றியது. சற்று தைரியம் வந்து, 
வீரர்களை அனுப்பி நந்தகோபரை அழைத்துவரச் சொன்னான்.

ஏற்கனவே நீராடி, அலங்கரித்துக்கொண்டு, தயாராய் இருந்த கண்ணனும், பலராமனும் பேரிகை சத்தம் கேட்டுக் கிளம்ப யத்தனிக்கவும்,  வீரர்களும் வந்து நந்தகோபரை அழைக்கவும் சரியாக இருந்தது.

எல்லோரும் அரங்கத்திற்குக் கிளம்பினார்கள்.

வெள்ளை யானையும், கருப்பு யானையும் சேர்ந்து நடந்து வருவதைப்போல்  பலராமனும், கண்ணனும் மதுரா வீதிகளில் நடந்தனர்.

அவர்கள் மல்லர் அரங்கினுள் நுழையா வண்ணம், குவலயாபீடம் என்ற யானை, பாகனால் தூண்டப்பட்டு  வழிமறைத்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37