கிரஹணத்தில் உதித்த நிலவு - 3
விஸ்வரூபன் மிகுந்த புத்தி கூர்மை உள்ளவனாக விளங்கினான். வெகு விரைவில் எல்லாசாஸ்திரங்களையும் கற்றுணர்ந்தான். அவனது ஞானம் அவனது திருமுகத்தில் ஒளிர்ந்தது.
மகிழ்ச்சியாக நாள்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒருநாள் ஜகந்நாத மிஶ்ரர் எதேச்சையாக அத்வைதாசாரியாரை சந்தித்தார். விஶ்வரூபனின் படிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த பெரியவர், ஜகந்நாதரைப் பார்த்து சட்டென்று உனக்கு ஒரு அவதார புருஷன் பிறப்பான் என்று ஆசீர்வாதம் செய்தருளினார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து சசிமாதா மீண்டும் கருவுற்றாள். இம்முறை கர்ப காலத்தில் அவளுக்குப் பல தெய்வீகமான அனுபவங்கள் ஆச்சர்யமான முறையில் ஏற்பட்டன.
கனவா நினைவா என்று தெரியாத நிலையில் அவளுக்குப் பல தேவதைகளின் தரிசனங்கள் ஏற்பட்டன. சில சமயங்கள் சில தேவதைகள் அவளைச் சுற்றி சுற்றி வருவதைக் கண்டாள். இதற்கெல்லாம் காரணம் திருவுடையோனை அவள் கருவுடைத்தானதே.
ஒவ்வொரு முறையும் தர்மம் நலியும்போது இறைவன் உருவெடுத்து வந்து காத்து காலத்திற்கேற்ற வழியைக் காட்டுகிறான்.
இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. கி.பி. 1542ம் வருடம், பங்குனி மாதத்தின் பௌர்ணமிநாள். உலகம் கொண்டாடும் ஹோலித் திருநாள்.
ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. தவச்சீலரான ஜகந்நாத மிஶ்ரர் தன் அனுஷ்டானங்களை முடித்து பாராயணம் செய்துகொண்டிருந்தார். தனம் இல்லையெனினும் தவச்செல்வம் நிறைந்திருந்த இல்லம்.
அன்றைக்கு சந்திர கிரஹணம். மாலையானதும் ஊரிலுள்ளோர் அனைவரும் கிரஹண புண்யகால நீராட்டத்திற்காக கங்கைக் கரையில் கூடியிருந்தனர். ஜகந்நாத மிஶ்ரரும் கங்கைக்குச் சென்றுவிட்டார்.
அவரது தாய், தங்கை, மற்றுமுள்ள உறவினர்கள் அவரது சொந்த ஊரான ஸில்ஹட்டிற்குச் சென்றிருந்தனர்.
விஶ்வரூபனும் தந்தையுடன் நதிக்குச் சென்றான்.
ஒரு பக்கம் ஹோலிக் கொண்டாட்டங்களும், ஒரு பக்கம் கிரஹண புண்யகாலத்திற்காக வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்து கங்கைக் கரையில் குழுமியிருந்த பண்டிதர் கூட்டமுமாக நவத்வீபம் மிளிர்ந்துகொண்டிருந்தது.
மெல்ல மெல்ல சந்திரனை ராகு விழுங்கத் துவங்க, ஒளி குறைந்துகொண்டே வர, அவரவர் கங்கைக் கரையில் ஏராளமான தீபங்களை ஏற்றி வைத்தனர்.
உலகையும் அதர்ம இருள் கவ்வத் துவங்கியிருந்த சமயம் அது.
சசிமாதா கருவுற்று பன்னிரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. அக்கம் பக்கம், உறவினர் யாருமற்ற வேளையில் இருள் சூழ்ந்த நிலையில் சசிமாதாவிற்குப் பிரசவ வலி துவங்கிற்று.
நிலவு வரும்..
Comments
Post a Comment