கிரஹணத்தில் உதித்த நிலவு - 1
கிரஹணம்தான். பாரதம் முழுதுமே கிரஹணம் பிடித்ததுபோல் இருந்தது. ஒரு பக்கம் ஆட்சி மாற்றங்கள், அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகள், ஒரு புறம் வேத ஸாரத்தை விட்டு மீமாம்ஸ் சாஸ்திரமும் கர்ம மார்கமும் வெகுவாகப் பரவி க் கொண்டிருந்தது. இறைவன் ஒரு சாராருக்கு மட்டுமே எனவும், இறையை அடைய கடும் சாதனைகளைப் பின்பற்றவேண்டி பிரசாரம் நடந்துகொண்டிருந்தது. ஒரு புறம் சாதிக்கொடுமைகள், ஒரு புறம் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
சாதாரண மக்கள் மனநிம்மதியின்றித் தவித்துக்கொண்டிருந்தபோது பாரதம் முழுதும் ஆங்காங்கே பல ஸாதுக்களின் அவதாரம் ஏற்பட்டது.
துகாராம், நாமதேவர், குரு கோவிந்த் சிங், ஸ்வாமி ராமானந்தர், கபீர்தாஸ் பலரும் ஒரே நேரத்தில் அவதாரம் செய்து பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே எளிய பக்தி மார்கத்தைப் பிரசாரம் செய்தனர்.
இதற்கிடையே வங்கதேசம் பல அந்தணர்களால் ஒதுக்கப்பட்ட தேசமாகக் கருதப்பட்டது. தீர்த்த யாத்திரையாகச் சென்றால்கூட வங்கதேசம் சென்று வந்தால் ப்ராயசித்தமும் கர்மாக்களும் செய்தனர். பலரும் வங்கதேசத்தைத் தொடாமலே யாத்திரை சென்று வந்தகாலம் ஒன்று இருந்தது.
அவ்வமயம் வங்கத்தில் பல மஹாத்மாக்கள் பிறந்து அப்புண்யபூமியின் பெருமைகளைப் பறை சாற்றி அனைவரும் விரும்பிச் செல்லும் தலமாக மாற்றினர் என்றால் மிகையாது.
இத்தனைக்கும் அங்கு பல உயர்ந்த சாஸ்திரங்களும் கல்விச் சாலைகளும் இருந்தன. நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் உயர்கல்வி படிக்கச் செல்லும் இடமாக கங்கைக் கரையிலுள்ள நவத்வீபம் விளங்கியது.
கங்கை கடலில் கலக்கும் இடத்தில் சின்ன சின்ன நிலப்பரப்புகளாய் ஒன்பது தீவுகள் இருந்தன. அவை அனைத்தும் ஒருங்கே நவத்வீபம் என்றழைக்கப்பட்டன.
படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு தேசங்களிலிருந்து வந்து தங்கிப் படித்து பின்பு தம் ஊருக்குத் திரும்பிச் செல்ல விரும்பாமல், அங்கேயே தங்கித் தனிக் கல்விச்சாலை துவங்கினர்.
அப்படி அஸ்ஸாம் பக்கத்தில் இருந்த சிற்றூரிலிருந்து படிப்பதற்காக நவத்வீபம் வந்தவர்தான் ஜகந்நாதர். ஜகந்நாத மிஶ்ரா என்றழைக்கப்பட்ட இவர் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து ஊர் திரும்பாமல் நவத்வீபத்திலேயே தங்கிவிட்டார். அங்கிருந்த நீலாம்பர சக்ரவர்த்தி என்னும் மஹாத்மா ஜகந்நாதரின் புத்திக் கூர்மையைக் கண்டு மகிழ்ந்து தன் மகளான சசிதேவியை ஜகந்நாதருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
ஜகந்நாத மிஶ்ரர் நவத்வீபத்தில் இருந்தாலும் கல்விச்சாலை துவங்கவில்லை. ஆசார அனுஷ்டானங்களுடன் கூடிய புனிதமான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்.
மஹா புண்யசாலிகளான அவர்களுக்கும் வாழ்வில் ஒரு துன்பம்.
குறையில்லாதவர் எவரேனும் அவனியில் உண்டோ? அதை வெல்லும் மனோதிடம் பெற்றவரே மஹாத்மாக்கள் ஆகின்றனர் அல்லவா?
நிலவு வரும்...
Comments
Post a Comment