ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள் (11)
अजातपक्षा इव मातरं खगाः
स्तन्यं यदा वत्सतराः क्षुधार्ताः |
प्रियं प्रियेव व्युषितं विषण्णा
मनोsरविन्दाक्ष दिदृक्षते त्वाम् ||
அஜாதபக்ஷா இவ மாதரம் ககா:
ஸ்தன்யம் யதா வத்ஸதரா: க்ஷுதார்தா: |
ப்ரியம் ப்ரியேவ வ்யுஷிதம் விஷண்ணா
மநோ(அ)ரவிந்தாக்ஷ தித்ருக்ஷதே தவாம்||
(ஸ்ரீமத் பாகவதம் 6:11:26)
Audio:
https://drive.google.com/file/d/12fzlbDE01_QOPi8MUZyUcXj17Yt_9h7L/view?usp=drivesdk
Thanks to Subashree Venkatraman
எந்த நிலையில் இருந்தாலும் பகவானிடம் பக்தி செலுத்துவதற்கு யாதொருதடையுமில்லை என்று நிரூபிக்கும் வண்ணம், வ்ருத்திராசுரன் இந்திரனோடு யுத்தம் செய்த சமயத்தில் பகவானை நினைத்துச் செய்த ஸ்துதியிலிருந்து...
இறக்கை முளைக்காமல் தாய்ப் பறவையை எதிர்பார்த்துக்கொண்டு கூட்டிலிருக்கும் குஞ்சுப் பறவையைப் போலவும்,
பசியால் வாடியபோதிலும் தும்பினால் கட்டப்பட்டதால் தாய்ப் பசுவை எதிர்நோக்கும் கன்றைப் போலவும், அயலூர் சென்ற கணவனின் பிரிவுத்துயரால் வருந்தும் மனைவியைப் போலவும், தாமரைக் கண்ணா என் மனம் உன்னையே காண விரும்புகிறது.
இந்த ஸ்லோகத்தின் மூலம் மூன்று விதமான பக்தர்களின் நிலை விளக்கப்படுகிறது.
தாய்ப் பறவை வெளியில் சென்றிருக்கும்போது முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வந்த குஞ்சுப் பறவைக்குத் தன் தாய் யார், தான் எதற்காக இங்கிருக்கிறோம், என்ன செய்யவேண்டும் என்று எதுவும் தெரியாது.
முதல் வகையினர், குஞ்சுப் பறவை போன்றவர்கள். அவர்களுக்கு தான் எதற்காகப் பிறந்திருக்கிறோம், அடைய வேண்டியது என்ன, இறைவன் யார் என்று எதுவும் தெரியாது.
இரண்டாவது வகையினர் கன்றைப் போன்றவர்கள்.
கன்றுக்கு தாயிடம் போகவேண்டும், போனால் பசியாறலாம் என்று நன்றாகத் தெரியும். இருப்பினும் கயிற்றை அறுத்துக்கொண்டு போக சக்தியிராது அல்லது தெரியாது. இருந்த இடத்திலிருந்தே தாயை அழைத்துக் கொண்டிருக்கும். அதுபோல் சிலருக்கு பகவான்தான் அடைய வேண்டிய வஸ்து, பிறவியின் நோக்கம், எல்லாம் தெரியும். குருவையும் அடைந்து ஸத்சங்கத்திலும் இருந்தபோதிலும், விடாமுயற்சியுடன் ஸாதனையைச் செய்து பகவானை அடைய முயற்சி செய்யாமல் இருந்த இடத்திலிருந்தே புலம்பிக்கொண்டிருப்பார்கள்.
மூன்றாவது வகை பக்தர்கள் பிரியமான மனைவியைப் போன்றவர்கள்.
எந்த ஒரு ஆதாரமும் இன்றி கணவனையே நம்பி வரும் மனைவியானவள், மெல்ல மெல்லத் தன் அன்பாலும் பணிவிடைகளாலும் கணவனை வசப்படுத்திவிடுகிறாள். அதன் பின், அவளை ஓரிருநாள்கள்கூடக் கணவனால் பிரிந்திருக்கமுடியாத நிலை வந்துவிடும். பக்தர்களும் தங்களது நம்பிக்கையாலும் அன்பாலும் இறைவனை வசப்படுத்தி விடுகின்றனர். எப்போதும் பகவான் அவர்கள் பின்னாலேயே சுற்றும்படி செய்து விடுகின்றனர்.
இதுபோன்ற பக்தி மிகவும் துர்லபமானது..
Comments
Post a Comment