ப்ருந்தாவனமே உன் மனமே - 59
கம்ஸ வதம்
மதுராவை நோக்கிய கண்ணனின் பயணத்தால் அவனது வாழ்வே வேறு திசைக்கு மாறியது.
கண்ணனும் பலராமனும் நகருக்கு வெளியிலேயே ரதத்தை நிறுத்தி இறங்கிக்கொண்டு,
நாங்க ஊரையெல்லாம் சுத்திப் பாத்துண்டே மெதுவா வரோம் சித்தப்பா
என்று சொல்லி அக்ரூரரை அனுப்பிவிட்டனர்.
அதன் பிறகு பின்னாலேயே வண்டிகளில் வந்த சிறுவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு தேவைப்படும் வஸ்திரங்களைத் தர மறுத்து அவமதித்த ஒரு தையல்காரனுக்கு முக்தி கொடுத்தான் கண்ணன்.
செல்லும் வழியில் ஒரு பூக்காரன் கண்ணனையும் பலராமனையும் அழகிய மாலைகளால் அலங்கரித்து விட்டான். அவனுக்கு கண்ணன் தன் அம்ருத கடாக்ஷத்தை வாரி வழங்கினான்.
எதிரே அஷ்டகோணலாக உடல் வளைந்திருந்த ஒரு பெண் வந்தாள். அவள் கம்சனின் அரண்மனைக்கு தினமும் சந்தனம் அரைத்துக் கொடுப்பவள்.
கை நிறைய மணக்கும் சந்தனம் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்த அவளெதிரே சென்று கண்ணன் நின்றான். மேலே செல்ல வழியின்றி யாரோ தடுப்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். சொக்கிப்போனாள். தேடி வந்து இப்படி ஒரு தரிசனமா?
என்ன அழகு?
சந்தனம் வேணுமா? எடுத்துக்கோங்க ராசா..
நீயே பூசிவிடேன்..
அவ்வளவுதான். தன்னை மறந்தாள். என்ன பாக்கியம் செய்தாளோ?
கண்ணனின் உடல் முழுதும் சந்தனம் பூசி அழகு பார்த்தாள். பின்னர் பலராமனுக்கும் உடன் வந்த சிறுவர்களுக்கும் சந்தனம் கொடுத்தாள்.
திரும்பிச் செல்ல முயன்றவளை கண்ணன் தடுத்தான். அவளது வலதுகால் காட்டை விரலைத் தன் உலகளந்த பாதத்தால் மிதித்துக்கொண்டு மலை பிடித்த கரத்தால் அவளது முகவாய்க்கட்டயைப் பிடித்து உயர்த்தினான்.
அவளது உடலில் இருந்த அத்தனை கோணல்களும் நேராகின. நிமிரவே முடியாமல் குனிந்தே இருக்கும் அவளது முதுகு நிமிர்ந்தது. கண்ணன் கரம் பட்டதும் மிக அழகான தேவகன்னிகைபோல் மாறிப்போனாள்.
சற்றும் எதிர்பாராத விதமாக நடுத்தெருவில் நடந்த அற்புதத்தைக் கண்டவர் அனைவரும் கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டனர்.
அவள் வீட்டிற்கு வருமாறு அழைக்க பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் கண்ணன்.
தனுர்யாகம் நடக்கும் இடத்தின் வாயிலில் மதம் ஏற்றப்பட்டிருந்த குவலயாபீடம் என்ற யானையை வெகு அலட்சியமாக எம்பி அதன் மஸ்தகத்தில் ஒரு குத்து விட, அது அலறிக்கொண்டு உயிரை விட்டது. அதன் தந்தங்களைப் பிடுங்கிக்கொண்டு யாகசாலைக்குள் வந்தான் கண்ணன். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வில்லை எடுத்து உடைத்தான்.
பின்னர் அனைவரையும் அழைத்துக்கொண்டு மல்யுத்தம் நடக்கும் இடத்திற்குச் சென்றான்.
அங்கே முஷ்டிகன், சாணூரன் போன்ற பல பெரிய மல்லர்களை பலராமனும், கண்ணனும் இணைந்து கொன்றனர். ஒரே தாவலாகத் தாவி உப்பரிகையின் மீதேறி கம்சனின் நெஞ்சில் ஏறி அமர்ந்து அவனைக் கொன்றான் கண்ணன்.
கொல்லும் முன் அவனுக்கு நாராயணனாகக் காட்சி கொடுத்தான். பயத்தினால் பதினான்கு வருடங்களாக இரவு பகலாக காணும் பொருள் அனைத்திலும் கண்ணனையே கண்ட கம்சனுக்கு கண்ணன் கரங்களால் முக்தி கிட்டியது.
சிறைக்குச் சென்று தாய் தந்தையரை விடுவித்தனர் சகோதரர் இருவரும். உக்ரஸேனரை விடுவித்த கண்ணன் அவரையே அரசனாக மீண்டும் அமர்த்தினான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment