ப்ருந்தாவனமே உன் மனமே - 58
ப்ரமை விலகியது
இன்றைய பொழுது விடியாமலே இருந்திருக்கலாம். இதற்கு முன்னும் பின்னும்
சூரியன் அவ்வளவு வசவு வாங்கியிருக்கமாட்டான்.
சூரியன் வரும்பொழுதே தன்னை நொந்து கொண்டான். தேர் தயாராகி நிற்க, ரதத்தில் கண்ணனும், பலராமனும் ஏறுவதைப் பார்க்கும் தைரியம் அங்கே யாருக்குண்டு?
ரதத்தைப் பார்த்ததிலிருந்தே ஊர் முழுதும் விதம் விதமான பேச்சுக்கள். இப்போது கண்ணன் புறப்படுகிறான் என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
அத்தனை பேரும் நந்த பவனத்தின் வாசலில் கூடிவிட்டனர்.
யசோதை சிலைபோல் இருந்தாள்.
அம்மா சீக்கிரம் வந்துடறேன் என்று கண்ணன் சொன்னது அவள் காதில் விழவேயில்லை.
கோபிகள் எல்லாரும் ரதத்தைப் பிடித்துக்கொண்டு கிளம்ப விடமாட்டோம் என்று அடம் செய்தனர்.
சூரியனைத் திட்டினர். இவ்வளவு க்ரூரமாக தங்களிடமிருந்து கண்ணனைப் பிரித்துக்கொண்டு செல்பவருக்கு அக்ரூரர் என்று பெயரோ என்று அவருக்கும் அர்ச்சனைகள் விழுந்தன.
கண்ணன் அவர்களிடம் சீக்கீரமே வந்துவிடுகிறேன் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டு கிளம்பினான்.
இருப்பினும் சிலர் ரதத்தின் குறுக்கே சாலையில் வந்து விழுந்தனர். கண்ணன் அவர்களையும் சமாதானப் படுத்திவிட்டு, ரதத்தை காற்று வேகத்தில் செலுத்தும்படி பணித்தான்.
உண்மையில் கண்ணனுக்கும் அழுகையாய் வந்தது. அவனாலும் அவர்களைப் பிரிய முடியவில்லை. ஆனால் வேறு வழியில்லை. இனி ஒருபோதும் வ்ரஜம் திரும்பப் போவதேயில்லை. அவர்கள் அழுவதைப் பார்க்கும் சக்தியும் அவனுக்கில்லை.
பலராமனுக்கும் தாங்க முடியவில்லை.
இனி வரப்போகும் ஒவ்வொரு கணமும் கோபியரின் நினைவில்தான் கழியப்போகிறது.
அவர்களுக்கோ பைத்தியமே பிடித்துவிட்டது.
ஒருவழியாக ப்ருந்தாவனத்தின் எல்லையைத் தாண்டியாயிற்று.
நந்தனும் மற்ற கோபர்களும் பின்னால் வருவதாய்ச் சொல்லவே அக்ரூரரோடு கண்ணனும் பலராமனும் மட்டும் ரதத்தில் வந்தனர். உச்சி வேளை நெருங்கிக் கொண்டிருக்க, யமுனைக் கரை வந்தது.
அக்ரூரருக்கு அனுஷ்டானம் செய்துவிடலாம் என்று தோன்ற, ரதத்தை நிறுத்தச் சொன்னார்.
கண்ணனும் பலராமனும்
ரதத்திலேயே இருக்கிறோம் சித்தப்பா
என்று சொல்ல, தான் மட்டும் இறங்கினார் அக்ரூரர்.
நதியை வணங்கிவிட்டு, தலையில் ப்ரோக்ஷணம் செய்துவிட்டு, அர்க்யம் விடுவதற்காக நீரை எடுக்கக் குனிந்தார்.
நீருக்கடியில், பரமபதநாதனாக க்ருஷ்ணன் அமர்ந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவரைப் பார்த்து சிரிக்கவும் செய்தான்.
கண்ணன் ரதத்தில் இருக்கிறேன் என்றானே. பின்னாலேயே இறங்கி வந்துவிட்டானோ என்று திரும்பிப் பார்த்தார்.
ரதத்தில் கண்ணனும் பலராமனும் அவரைப் பார்த்து என்ன என்று கண்ணால் வினவினர்.
ஒன்றுமில்லையென்று தலையாட்டிவிட்டு, மீண்டும் நீரை எடுக்கக் குனிந்தார். இப்போது நீருக்கடியில் மிகத் தெளிவாக பலராமனே ஆதிசேஷனாக அமர்ந்திருப்பதையும், அதன் மீது கண்ணன் பரவாஸுதேவனாக அமர்ந்திருப்பதையும் பார்த்தார்.
மீண்டும் நிமிர்ந்தால் கண்ணன் ரதத்தில் இருந்தான்.
என்ன அக்ரூரரே, இன்னும் சந்தேகமா?
என்று பரவாசுதேவன் வினவ, இரு கரம் கூப்பி அழுதுகொண்டே தொழுதார்.
காட்சி மறைந்ததும் எப்படியோ நடந்து ரதம் வரை வந்து விட்டவரைப் பார்த்து கண்ணன் கேட்டான்
என்ன சித்தப்பா? ப்ரமை பிடிச்சவர் மாதிரி இருக்கீங்க? தண்ணில ஏதாவது பாத்தீங்களா?
கூப்பிய கரங்களை தலைமேல்தூக்கி
இப்போதுதான் ப்ரமை விலகியது கண்ணா என்றார்.
சித்தப்பாக்கு என்னமோ ஆயிடுச்சு
என்று சொல்லிக் கள்ளமாய்ச் சிரித்தவன்,
சீக்கிரம் வாங்க போலாம்
என்றான்.
அதன் பிறகு ரதம் காற்றாய்ப் பறந்தது.
வ்ருந்தாவனத்தை விட்டு கண்ணன் ஸ்தூலமாய் நீங்கியபோதும், அவனது நினைவுகள் எப்போதும் அங்கேயே இருந்தன.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment