ப்ருந்தாவனமே உன் மனமே - 57
கடைசி இரவு
நந்த பவனத்தின் வாசலில் தேர் வந்து நின்றது.
உள்ளேயிருந்து மான்குட்டி போலத் துள்ளிக்கொண்டு ஓடி வருவரும் சிறுவன் யார்?
அவன் ஓடி வரும்போது அவனது மேலாடை பறக்கும் அழகு, மார்பிலிருந்த முத்துமாலைகள் அசையும் அழகு, மயில்பீலியாடும் அழகு, கழுத்தைச் சுற்றி குழலாடும் அழகு, அவன் குழைகளாடி கன்னத்தோடு இழையும் அழகு, ஓடிவரும்போது அவன் கரங்கள் முன்னும் பின்னும் செல்லும் அழகு, காலிலுள்ள நூபுரம் எழும்பிக் குதிக்கும் அழகு, அது ஒலிக்கும் இசையின் அழகு, எதைப் பார்ப்பது? எதை விடுப்பது?
ஒன்றை நோக்கினால் இன்னொன்றைப் பார்க்க முடியவில்லை. இவன்தான் கண்ணனோ?
அவன் பின்னாலேயே நீலப்பட்டு உடுத்திக்கொண்டு ஓடிவருவது யார்? பலராமனா?
போதும். இந்தப் பிறவி எடுத்ததன் பயனை இன்று அடைந்துவிட்டேன்..
அக்ரூரரின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.
பின்னாலேயே நந்தன், யசோதா, ரோஹிணி எல்லோரும் வந்தனர்.
வாங்க வாங்க...
சொல்லாம வந்திருக்கீங்களே
ஒரு செய்தி அனுப்பினா நானே வந்திருப்பேனே..
நந்தன் வரவேற்க அக்ரூரர் அவரைக் கட்டியணைத்துக்கொண்டார்.
கண்ணன் அவரைக் குறுகுறுவென்று பார்த்தான்.
அவனது பார்வையில் மயங்காதவர் உண்டா?
விட்டால் கண்ணனின் காலில் விழுவார் போலிருந்தது. சட்டென்று அவர் கையைப் பிடித்துக்கொண்டு படபடவென்று பேசினான்.
வாங்க சித்தப்பா...
நான் பிறந்ததிலேர்ந்து என்னைப் பாக்க இப்பத்தான் நேரம் கிடைச்சதா?
அவர் பதில் பேசுவதற்குள், சரி நீங்க பயணத்தால களைச்சுப் போயிருப்பீங்க. உள்ள வாங்க..
கண்ணனும் பலராமனும் இரண்டு கைகளையும்
பிடித்துக்கொண்டு குதித்துக்கொண்டே அழைத்து வந்தனர்.
அனைவரும் உணவருந்தினர்.
சற்று ஓய்வுக்குப் பின்னர், அக்ரூரர் நந்தனைத் தனியாக அழைத்து, கம்ஸன் தனுர்யாகத்திற்காக விடுத்த அழைப்பைப் பற்றிச் சொன்னார். மேலும் கண்ணன் வசுதேவரின் மகன் என்றும், கண்ணனுக்காக அவர் சிறையில் வாடுவதையும் சொன்னதும் நந்தன் பேச்சற்றுப் போனான்.
எப்படி யசோதாவிடம் சொல்வது?
நீ வளர்த்த பிள்ளையின் தாய் வேறொருத்தி என்பதை எந்தத் தாய்தான் ஏற்பாள்?
ஆனால் சீக்கிரமே சுதாரித்துக் கொண்டான் நந்தன்.
நாளை காலை அனைவரும் கிளம்பவேண்டும் என்றதும், சரியென்று தலையாட்டினான் நந்தன்.
தயங்கித் தயங்கி தனுர் யாகத்திற்கான அழைப்பைப் பற்றியும் அரசனின் அழைப்பை அலட்சியம் செய்ய முடியாதெனவும் யசோதாவிடம் தெரிவிக்க, அவளுக்கு ஒன்றும் சரியாகப் படவில்லை. அனுப்பமாட்டேன் என்று அழத்துவங்கினாள்.
அன்று துவங்கிய அவளது அழுகை அதன் பின் நிற்கவே இல்லை.
இரவு தனியாகக் கண்ணனைச் சந்தித்த அக்ரூரர், பேசச் சக்தியற்று பார்த்துக் கொண்டே நின்றார். எப்படிச் சொல்வார்?
சித்தப்பா, கவலைப்படாதீங்க. எனக்கு எல்லாம் தெரியும். சண்டை போடற சாக்கில மாமா என்னைக் கொல்லத் திட்டம் போட்டிருக்கார். அதானே?
கொல்வதற்குத் தூதனுப்பியவனை மாமா என்று உறவு கொண்டாடுகிறானே..
திடுக்கிட்டுப்போனார் அக்ரூரர்.
நான் பாத்துக்கறேன். கவலைப்படாம தூங்குங்க
காலைல கிளம்பலாம்.
என்றதும் அக்ரூரருக்கு நிம்மதியாயிற்று.
அன்றிரவு யசோதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஓராயிரம் கதைகள் பேசிக்கொண்டு அவளை உறங்கச் செய்தான் கண்ணன்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment