ப்ருந்தாவனமே உன் மனமே - 56
உறவா? பகையா?
இருக்குமிடம் தெரியாமல் அமைதியாய் வாழ்ந்து வந்த அக்ரூரரைப் பார்த்து கம்ஸன் கண்ணனை அழைத்து வரச் சொன்னான்.
அரசனின் உத்தரவு. போய்த்தான் ஆகவேண்டும். தான் போகாவிட்டால் சிறைவாசம் என்பதோடு, வேறொருவர் நிச்சயம் செல்வார்.
கண்ணனை எதற்கு அழைக்கிறான் என்பது நன்றாகத் தெரியும் அக்ரூரருக்கு.
கண்ணனைக் கொல்வதற்கான அழைப்பை விடுக்கும் பணியைப் போய்த் தான் செய்வதா?
துடித்துப் போனார் அக்ரூரர்.
கண்ணன் இறைவன். அவனைக் கொல்வதென்பது நடவாத ஒன்றுதான். ஆனால், கம்சன் கண்ணனைக் கொல்ல அழைப்பதைத் தான் போய்ச் சொன்னால், கண்ணன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்?
கொலை செய்வதற்கான அழைப்பைக் கொண்டுவந்தவர் என்று தன்மேலும் கோபப்படுவானா? வெறுத்துவிடுவானா?
கண்ணனின் வெறுப்பைச் சம்பாதித்துவிட்டு எப்படி வாழமுடியும்?
சேச்சே, கண்ணன் தன்னைத் தவறாக நினைப்பானா? அவன் இறைவனாயிற்றே. அவனுக்கு நம் மனதிலுள்ள எண்ணம் புரியாதா?
அனல் பட்ட புழுவாய்த் துடித்தார்.
இருந்திருந்து கண்ணனைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் இப்படி ஆகிவிட்டதே.
ஒரு வகையில் கண்ணனுக்கு சித்தப்பா முறை வேண்டும் அக்ரூரர்.
தன்னை எதிரியின் தூதன் என்று பார்ப்பானா?
பக்தன் என்று பார்ப்பானா?
சித்தப்பா என்று உறவு முறையில் பார்ப்பானா?
எப்படித் தன்னை நினைப்பான் கண்ணன் என்று அக்ரூரருக்கு விதம் விதமான குழப்பங்கள்.
இரவு முழுதும் உறங்கவில்லை.
இன்னொருபுறம் பதினைந்து மைல் தொலைவில் இருக்கும் கண்ணனை பதினான்கு வருடங்களாகச் சென்று பார்க்கும் துணிவின்றி, கம்சனுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கண்ணனைப் பார்க்கக் கொள்ளை ஆவல் இருந்தபோதும் பயம் தடுத்தது. இப்போது கம்சனே அனுப்புகிறான். இறைவனைக் காணச் சொல்லி அனுப்புபவர் குருவன்றோ?
எனவே கம்சனின் மீது கோபம் வேண்டாம். அவனது அத்தனை சூழ்ச்சிகளையும் வெல்லும் திறமை கண்ணனுக்கு உண்டு. தன்னைப் பொறுத்தவரை கம்சன் இறைவனிடம் அனுப்பும் குரு என்று எண்ணிக்கொண்டார்.
பல்வேறு மனக் குழப்பங்களிடையே அவர் தவித்துக்கொண்டிருந்தபோது பொழுது விடிந்துவிட்டது.
சட்டென்று தயாராகி, நந்தனுக்கும், கண்ணன் மற்றும் பலராமனுக்கும் நிறைய பரிசுப்பொருள்களை எடுத்துக்கொண்டு தேரில் ஏறிக் கிளம்பினார்.
அவரது மனோ வேகத்திற்கு தேர்க்குதிரைகளால் ஈடு கொடுக்க முடியவில்லை.
ஒருவாறு சற்று நேரத்திலேயே ப்ருந்தாவனத்தின் எல்லையை அடைந்துவிட்டார்.
ப்ருந்தாவனத்திலிருந்து வீசும் காற்று, கண்ணன் மீது பட்ட காற்றல்லவா?
அது அக்ரூரரைத் தழுவியதும், சிலைபோல் ஆனார். தேரை நிறுத்தச் சொல்லிவிட்டு, காலணிகளை தேரிலேயே விட்டு விட்டுக் கீழே குதித்தார்.
கண்ணன் பாதம் பட்ட மண் அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
ப்ருந்தாவனத்து மண்ணில் விழுந்து புரண்டார்.
எடுத்து மேலே பூசிக்கொண்டார், தலையில் போட்டுக் கொண்டார், வாயில் போட்டு விழுங்கினார்.
மண்ணைத் தழுவிக்கொண்டு வெகு நேரம் நிலத்திலேயே படுத்துக் கிடந்தார்.
தேரோட்டி மந்திரியின் செயலைப் பார்த்து குழப்பமடைந்தான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
Comments
Post a Comment