கிரிதர கோபாலா.. (1)
ராஜஸ்தானின் அழகிய சிற்றூர் சித்தோடு. எல்லா வளங்களும் நிறைந்து பசுமை கொஞ்சும் அந்த பூமிக்கு ஆபத்துகளும் அதிகமாயிருந்தது, அழகாக இருப்பதே ஆபத்துதானே.
அடிக்கடி அன்னியப் படையெடுப்பு வந்துகொண்டே இருந்தது.
அந்நியர்களுக்குக் கட்டுப்படாமல் வாழ்ந்த ராஜபுத்ரச் சிற்றரசுகளுள் சித்தோடும் ஒன்று.
அந்நாட்டின் அரசர் தூதாராவ் என்பவர்.
அவரது இளைய மகன் மாவீரன் ரத்தன் சிங். அடிக்கடி வந்துகொண்டேயிருந்த அன்னியப் படையெடுப்புகளில் வெற்றிக் கனியை ஈட்டிய அவரது ஆயுளைக் காலம் பறித்தது.
இளவயதிலேயே போர்க்களத்தில் வீரமரணம் எய்தினார். அழகு மனைவியோ உடன்கட்டை ஏறினார். (சிலகாலம் வாழ்ந்து பின் கணவனின் பிரிவால் இறந்தார் என்றும் சொல்கிறார்கள்).
மூத்தமகன் ஏற்கனவே வீரமரணம் எய்திய நிலையில் குலக்கொழுந்தாக ரத்தன் சிங்கின் சின்னஞ்சிறுப் பெண் குழந்தை மட்டும் எஞ்சினாள்.
மகன்கள் இருவரும் இறந்துபட்ட நிலையில், தனக்கும் வயதாகிவிட்டதால், அந்நியப்படையெடுப்பின் அபாயங்களிலிருந்து மக்களைக் காக்க, தூதாராவ் தன் சிற்றரசை மேவார் ராஜ்ஜியத்தோடு இணைத்துக்கொண்டார்.
அவரது ஒரே ஆறுதல் பேத்தி மட்டும்தான்.
உலக வாசனைகளே இன்றி பக்தி விருக்ஷம் அங்கு முளை விட்டிருந்தது.
யார் வேண்டுமானாலும், திடீரென்று குருவின் கடாக்ஷத்தினாலோ, அல்லது இறைவனின் அளப்பரிய கருணையினாலோ, சாதனைகள் செய்தோ, இறை நாமம் சொல்லியோ இறை தரிசனத்தையும் ஞானத்தையும் பெற்றுவிடமுடியும்.
ஆனால், ஒரு சிலர், அந்தந்த யுகத்தின் ஆணிவேரான சாதனங்களை நிறுவவும், மக்களுக்கு நிரூபிக்கவும் இறைவனின் சங்கல்பத்தால் அவதாரம் செய்கிறார்கள். அவர்கள் அவதார புருஷர்கள் எனப்படுவர்.
அவர்கள் சாதாரண மானுடர்போல் வினைப்பயனால் பிறப்பதில்லை. தங்களுடைய தாய், தந்தை, சுற்றம், சூழல், அனைத்தையும் அவர்களே தேர்வு செய்கிறார்கள். பக்தியையும் இறைவனையும் நிரூபிக்க அவர்கள் தேர்ந்தெடுப்பது முட்கள் நிரம்பிய பாதையைத்தான். அவர்கள் சென்று பாதையின் முட்களை அகற்றி, சோலையாக, ராஜபாட்டையாக மாற்றி நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்கு அதைத் திறந்துவிடுகிறார்கள்.
அத்தகைய ஞானிகள் துளசியைப் போன்றவர்கள்.
பிறக்கும்போதே தெரிந்துவிடும். மற்ற செடி கொடிகள் வளர்ந்து மொட்டு கட்டும்போதும், மலரும் போதும் தான் நறுமணத்தை உணரமுடியும். ஆனால் துளசியோ முதல் இலை விடும்போதே நறுமணத்தோடு அமையும். அதைப்போல் அவதார புருஷர்கள் பிறக்கும்போதே, சிறு வயதிலேயே அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது தெரிந்துவிடும்.
துருவன் ஐந்து வயதுக் குழந்தையாக இருக்கும்போதே, இறை தரிசனத்திற்கு முன்பே, அவனது முகவிலாசத்தில் சிற்றன்னையான சுருசியே மயங்குகிறாள் என்று பார்க்கிறோம்.
சுவாமி விவேகானந்தர் ஸப்தரிஷிகளுள் ஒருவரின் அவதாரம் என்று பெரியோர் சொல்கின்றனர். இராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதாரம் செய்த இறைவன் இராமகிருஷ்ணராக அவதாரம் செய்யும்போது அவரைத் தன்னுடன் வரத் தேர்வு செய்கிறான். அப்படியிருக்க அவர் தன் வாழ்வை வறுமை நிரம்பியதாகத் தேர்வு செய்கிறார். ஏனெனில், வளமான வாழ்வுடன் பிறந்தால், சாதாரண மக்களின் நிலை என்ன என்பது தெரியாமல் போகலாம், அவர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை அவர்கள் நிலைமையிலிருக்கும் ஒருவராக வந்து சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணினார்.
மஹான்களின் வாழ்வே துன்பங்கள் நிறைந்ததுதான். ஆனால், அத்தகைய துன்பத்திலும் அவர்கள் அதைச் சற்றும் உணராமல் எப்படி பக்தி செய்தார்கள் என்பதே நமக்குப் பாடமாகிறது.
எனக்குக் குடும்பம் இருக்கிறது, அரசாங்கப் பதவியில் இருக்கிறேன், வறுமை, குடும்ப மற்றும் அலுவலகப் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம் அல்லது லாபம் என்று வாழ்க்கை முறையையும், பிரச்சினைகளையும் சொல்லிக்கொண்டு பக்தி செய்யாமல் இறையருளுக்குப் பாத்திரமாகாமல் ஒரு ஜீவன் கூட தப்பித்துவிடக்கூடாது என்ற இறைவனின் எண்ணமே இதற்குக் காரணம்.
கலியுகத்தில் எந்த மஹானை எடுத்துக்கொண்டாலும் அவர் பெரும் பிரச்சினைகளுக்கு நடுவில் மனம் தளராமல் பக்தி செய்து, நாமம் சொல்லி, இறைவனை அடைந்திருப்பார்.
ராதையின் அஷ்ட சகிகளுள் ஒருத்தியான சம்பகலாதா என்னும் ஸகிதான் கலியுகத்தில் பக்தியின் பாதையைக் காட்ட, ராஜபுத்ர வம்சத்தில், மீரா என்னும் பெயருடன் அவதரித்திருந்தாள்.
தூதாராவ் வீட்டுச் சிறு மலர் பிறந்தது முதல், தன் அழகாலும், அமைதி ததும்பும் முகத்தாலும் அனைவரையும் கட்டிப்போட்டிருந்தது. எவ்வளவு பிரச்சினைகள் வந்தபோதும், பேத்தியின் முகத்தால் அனைத்தையும் மறந்தார் தூதாராவ்.
Comments
Post a Comment