திருக்கண்ணன் அமுது - 36
அறியாச் சிறுவன்
குட்டிக்கண்ணன் வாசல் திண்ணையில் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஜல் ஜல் என்று சத்தத்தோடு சென்ற மாட்டு வண்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டே சட்டென்று திரும்பினான். தூரத்தில் ஒரு பெண்மணி சென்றுகொண்டிருந்தாள்.
அம்மா ஏன் போறாங்க?
என்று நினைத்தவன் திண்ணையை விட்டிறங்கி ஓடினான். அவளது தலையில் ஒரு பானை இருந்தது. காலையில் யசோதை உடுத்தியிருந்த புடைவையைப் போலவே அதே நிறத்தில் சேலை அணிந்திருந்த அவளது நடையும், யசோதையை ஒத்திருந்தது.
அவளை யசோதை என்று நினைத்த கண்ணன் அவள் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தான். அவளோ கண்ணனது திருநாமங்களைப் பாடியபடி தனக்குள் லயித்துச் சென்றுகொண்டிருந்தாள்.
கண்ணனின் திருநாமங்களைப் பாடுபவர்களின் பின்னாலேயே செல்வது அவனது இயல்பு.
அம்மா அம்மா என்ற அவனது பிஞ்சுக்குரல் அவளது செவிகளில் விழவில்லை.
அவளது நடை வேகத்திற்கு கண்ணனின் பிஞ்சுக்கால்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. கீழே இருந்த கல்லை எடுத்து பானையின் மேல் அடித்தான். அவள் திரும்பிப் பார்ப்பாள் என்று நினைத்தான். பெருத்த ஏமாற்றம். அப்பெண் திரும்பவே இல்லை. மாறாக, பானையிலிருந்த பால் ஓட்டை வழியாக ஊற்றாய் விழ ஆரம்பித்தைப் பார்த்தான். வெகுதூரம் நடந்ததால் பசி வந்துவிட்டது. கொட்டும் பாலைப் பார்த்ததும் அதைக் கையிலேந்திக் குடித்துக்கொண்டே சென்றான்.
நான்கைந்து தெருக்கள் தாண்டியபோதிலும் அப்பெண்மணி திரும்பவே இல்லை. கொட்டிக் கொண்டிருந்த பால் நின்றதும், கண்ணன் யோசித்தான்.
இவங்க என் அம்மாதானா?
என் அம்மா இவ்ளோ நேரம் என்னைப் பார்க்காம நடந்துபோவாங்களா?
நான் சத்தமே போடாம பூனைமாதிரி போய் பின்னாடி நின்னாக்கூட உடனே கண்டுபிடிச்சுடுவாங்களே. இவங்க என் அம்மா இல்லைன்னு நினைக்கறேன். ரோஹிணி அம்மாவும் என் அம்மாவும் மாதிரி இவங்களும் ஒரே நிறத்துப் புடைவை கட்டியிருக்காங்க.
அச்சோ, பாலை வேற குடிச்சுட்டேனே. திட்டுவாங்களோ
என்று நினைத்தவன் மேற்கொண்டு அப்பெண்ணைப் பின்தொடராமல் அப்படியே நின்றான்.
அவளோ போய்விட்டாள்.
திரும்பி வீட்டுக்குப் போகலாம் என்று நடந்தான்.
இப்போது ஒரே குழப்பம். எந்தத் தெருவில் திரும்பினாலும் வீடு வரவே இல்லை.
ஒரு நாற்சந்தியில் நின்றுகொண்டு வீடு எந்தத் திசையில் உள்ளதென்று தெரியாமல் திரு திரு வென்று விழித்துக் கொண்டிருந்தான்.
அப்போது இரண்டு தெரு சுற்றிவிட்டு அந்த வழியாய் அதே பெண்மணி வந்தாள். கண்ணனைப் பார்த்துவிட்டு,
ஏன் கண்ணா இங்கே நிக்கற?
பாலைக் குடிச்சுட்டேன்னு திட்டுவாங்களோ என்று பயந்தவன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னான்.
வழி தெரியாம வந்துட்டேன்மா, வீடு எங்கன்னு தெரியல.
அவனைப் பார்த்து சிரித்தவள்.
சரி வா, நான் கொண்டுபோய் விடுகிறேன்
என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு வந்து நந்த பவனத்தின் வாயிலில் விட்டாள்.
வீட்டைக் கண்டதும் பெருமூச்சு விட்ட கண்ணனைத் தூக்கி திண்ணையில் நிற்கவைத்து ஒருமுத்தமிட்டாள்.
இவ்ளோதூரம் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டேனே. எனக்கொரு முத்தம் தரமாட்டியாடா கண்ணா?
சிவந்திருந்த அவளது குண்டுக்கன்னங்களைத் தன் பிஞ்சுக்கரங்களால் பற்றித் திருப்பி, அழகாக அவளது இதழ்களில் தன் கொவ்வைப் பழம் போன்ற அதரத்தைப் பதித்துவிட்டு திண்ணையை விட்டுக் குதித்து இறங்கி வீட்டுக்குள் ஓடினான் கள்ளக் கண்ணன்.
திடீரென்று கிடைத்த அமுதத்தால் திகைத்துப்போன அந்த கோபி, பானையைக் கீழே இறக்கித் திண்ணையில் வைக்கும் போது தான் அது காலியாய் இருப்பதைக் கவனித்தாள்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment