திருக்கண்ணன் அமுது - 35

கோபேஷ்வர் மஹாதேவ்

பிக்ஷாடனராய் உருக்கொண்ட பரமேஸ்வரன் கண்ணனைப் பார்க்கும் ஆவலில் நந்தபவனத்தின் வாசலில் வந்து நின்றார்.

கெட்டவர்களைக் கேள்வி கேட்காமல் நம்பும் சமூகம், நல்லவர்களைச் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதோடு கேள்விகளால் துளைத்தெடுத்துவிடுகிறது.

அந்தப் பகுதியில் அவரைப் பார்த்திராததால் காவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. 

அவர் கண்ணனைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்ததும் அவர்களது சந்தேகம்‌ அதிகரித்தது. சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ஏட்டிப் பார்த்த யசோதை கேட்டாள், 

யார் இவர்?

அம்மா, இவர் நம் இளவரசரைப் பாக்கணும்னு சொல்றார்.

பரமேஸ்வரனை ஏற இறங்கப் பார்த்தாள் யசோதை.
பூதனையை மஹாலக்ஷ்மி என்று நினைத்து எப்பேர்ப்பட்ட ஆபத்தில் கொண்டுபோய் விட்டதென்று நினைத்துப் பார்த்தாள்.

அதன்பின் ஒவ்வொருவராய் வந்து இறந்துபோன அசுரர்கள் கண்முன் வந்து போயினர்.

அறிமுகமில்லாதவர்  யாரையும் வீட்டுக்குள் விடக்கூடாது, குழந்தையைக் காட்டக்கூடாது என்று நந்தன் உத்தரவிட்டிருந்தார்.

எனவே சற்று யோசித்து விட்டுச் சொன்னாள்,

ஐயா, மன்னிக்கணும். நீங்க யாருன்னு தெரியல. அறிமுகமில்லாதவங்ககிட்ட குழந்தையைக் காட்டறது சரியில்ல.
அதனால, உங்களுக்கு வேற ஏதாவது வேணுமான்னு சொல்லுங்க, நான் தரேன்.

கண்ணன் தரிசனம்தானம்மா வேணும். வேறெதுவும் வேணாம். என்னால குழந்தைக்கு ஆபத்தெல்லாம் வராதும்மா. நம்புங்க.

இல்லீங்க. இது ராஜாவோட உத்தரவு. மீற முடியாது. உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா?

தூரத்திலேர்ந்தாவது பார்க்கிறேனேம்மா. குழந்தையைத் தூக்கிட்டு வரமுடியாதா?

யசோதையின் சந்தேகம் இப்போது வலுத்தது.

மன்னிச்சுக்கோங்க.. அது‌மட்டும் முடியாது..

சரிங்கம்மா... எனக்கு வேறெதுவும் வேணாம். நான் வரேன். 

வருத்தத்தோடு கிளம்பிய பரமேஸ்வரன் எப்படியும் சிறிது வளர்ந்ததும் கண்ணன் ப்ருந்தாவனம் வரப்போகிறான். அப்போது தரிசனம் செய்யலாம் என்றெண்ணி ப்ருந்தாவனம் சென்று அங்கு காத்திருக்கலானார்.  ப்ருந்தாவனத்தில் அவர் கோவில் கொண்டுள்ள திருத்தலம் கோபேஸ்வர் மஹாதேவ் மந்திர்  என்று வழங்கப்படுகிறது.


#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37